நா
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 100 கிராம்

மாவு 1/2 கிலோ
தே.எண் or ம.க.எண் 1/2 போத்தல்
உப்பு 1 மே கரண்டி
காலிமிரிஸ் 3 தே.கரண்டி
பெ,சீரகம் 1 தே.கரண்டி
கறிவேப்பிலை 15 நெட்டி

உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ள வேண்டும். மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலக்க வேண்டும். ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழைக்கவேண்டும். அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கள். பிளாஸ்ரிக் மூடி (வடையளவு) ஒன்றை எடுத்து அதன் மேல் துளி எண்ணை பூசி உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும். (சாமான்கள் போடும் போத்தல்களின் மூடி நல்லது) உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி.

அண்ணா வடை சுடுகிறார்.

பி.கு : பதிவர் சந்திப்பு இரண்டின்போது வழங்கப்பட்ட பருத்தித்துறை வடையை அம்மாதான் செய்வதாக இருந்தா. ஆனால் அவசரமாக ஊர் செல்லவேண்டிய தேவை அம்மாக்கு. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு இறுதியில் நாங்கள் செய்வதாக முடிவெடுத்தோம். தொடரூந்திற்கு நேரம் நெருங்கி விட்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக அம்மா ஒரு காகிதத்தில் எழுதித்தந்ததுதான் இந்த வடை சுடும் முறை. வடைசுடுவதில் நான் பங்கெடுக்கவில்லை அந்தப் பதிவர் சந்திப்பின் அதிகார பீட உறுப்பினர்களில் ஒருவராக நான் இருந்ததால் வேலை அதிகம் இருந்தது. அண்ணா மதுவர்மன்தான் பங்கெடுத்தார்.

இந்த வடை சுடும் முறையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது சந்தோசமும், சிரிப்பும் வரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை வரும் எண்டில்லை. ஆனால் வந்தால் என்ன செய்யிறது? எங்கேயோ ஒரு சந்தர்ப்பத்தில உங்களுக்கும் உதவும் எண்டு சொல்லி வைக்கிறன். அல்லது இந்தத் தீர்வை வேற ஒரு சந்தர்ப்பத்தில நீங்கள் பாவிக்கக்கூடியமாதிரியும் இருக்கும்.

என்னெண்டா அண்டைக்கு வேலைத்தளத்தில் Gmail இல் Buzz ஐப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய பஸ் வந்தது. கீழே சாடை மாடையாப் போட்டிருக்கிறன். சொடுக்கிப் பாருங்கோ.





அந்த மேலே உள்ள பஸ் NSFW. அப்ப வீட்டில வச்சுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமோ எண்டெல்லாம் கேக்கக்கூடாது.

பார்த்துக்கொண்டிருந்தது வேலைத்தளத்தில். பக்கத்ததில், பின்னால எல்லாம் வேலை செய்யிறாக்கள் இருக்கினம். பொம்புளைப் பிள்ளைகளும் இருக்கினம். படாரெண்டு கீழே ஸ்குரோல் செய்திட்டன். (மேசைக்குக் கீழே குரோள் செய்யேல). அதையும் சொடுக்கிப் பாருங்கோ கீழே.




கொடுமை. Gmail காரன்கள் இன்பொக்ஸூக்குத் திருப்பிப் போகவோ அல்லது Buzz இல் இருந்து வெளியில வரவோ ஒரு வழியும் வைக்கேல. மேல ஸ்குரோல் செய்துதான் போகவேணும். மேல ஸ்குரோல் செய்தால் ஹீ ஹீ.

என்ன செய்யலாம்? உடனே நான் செய்தது. மேல Address Bar இல் உள்ள buzz என்பதை inbox என்று மாற்றிவிட்டு Enter செய்ததுதான். :)

https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#buzz இனை
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#inbox என மாற்றிவிட்டு Enter செய்தேன்.

உங்களுக்கும் எங்கேயாவது உதவும். சும்மா குறிச்சு வச்சுக்கொள்ளுங்கோ.


பி.கு : அசோக்பரனின் பெயரில் சொடுக்கியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
inbox ற்குப்பதிலாக mbox என்றுபோட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
பிறகுதான் பார்த்தேன் gmail shortcut 'g then i' இனைப் பாவித்திருந்தாலும் நேரடியாக இன்பொக்சுக்குப் போயிருப்பன்.

பதிவில போட்டுப் பப்ளிக் ஆக்கியிருக்கிற பஸ்ஸை வேலைத்தளத்தில மட்டும் பாக்கேலாமப் போச்சோ உனக்கு, என்று கேட்பவர்களுக்கு - அது ஒரு அசையும் படம். படத்தைப் பார்த்தால் கொஞ்சநேரம் அசையாமல் நிப்பியள் :D

பிரியமுடன்,
மதுவதனன் மௌனசாமி - cowboymathu

 

சம்பவம் ஒன்று.

ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கியிருந்த நண்பன் ஒருவன் 'ஏதாவது நல்ல சண்டைப் படமாப் பாத்து ஆங்கிலப்படம் ஒண்டு போட்டுவிடு' என்றான். சரி சுவாசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கட்டுமே என்று Wanted படத்தைப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வந்திருந்தபோது படமும் முடிந்திருந்தது. 'எப்பிடிப் படம் இருந்தது, நல்லதா?' கேட்டேன். 'சூப்பர் படம், அதில ஒருத்தன் இருக்கிறான் அவன் சுட்ட புல்லட்டை திருப்பியும் துவக்கு குழாய்க்குள்ள எடுக்கிறான், நல்லா இருந்திச்சு' என்றான்.

படம் பார்த்தவர்கள் இருக்க மற்றவர்களுக்கு :- படத்தில் ஒருவனுக்கு பின் மண்டைக்குள்ளால் புகுந்து நெற்றியைத் துளைத்து முன்வரும் புல்லட்டை குறைந்த வேகத்தில் (slow motion) காட்டுவார்கள். பின்னர் அந்தப் புல்லட் எங்கிருந்து வந்தது எனக் காட்டுவதற்காக காட்சிகளைப் புல்லட்டை பிரதானமாக வைத்து பின்னோக்கிக் காட்டி அது எங்கிருந்து வந்தது என்பற்காக மீண்டும் புல்லட் துப்பாக்கிக் குழாயை அடைவதாக காட்டியிருப்பார்கள்.

சம்பவம் இரண்டு.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் இடது கையின் ஐந்து விரல்களிலும் நகங்களை வளர்த்து வைத்திருந்ததை பார்த்தேன். 'இடது கைவிரல்களில் நகம் வளர்ப்பது நல்லதல்ல, வெட்டி விடு' என்றேன் (அவன் வலது கைப்பழக்கம் உடையவன்). ஏன் எனறு என்னை வித்தியாசமாக நோக்கினான். 'இல்ல... இடது கையை மலம் கழுவப் பாவிக்கிறதுதான, சோப் போட்டுக் கழுவினாலும் நகம் இருந்தால் எச்ச சொச்சங்கள் இருக்க வாய்ப்பிருக்கு' என்றேன். 'சீ... நான் ரொய்லற் ஸ்பிரேயர் (toilet sprayer) மட்டும்தான் பாவிக்கிறனான், கை இல்லை' ஒரு புன் முறுவலோடு சொன்னான். 'ஓ... அப்படியா' என்றேன். வேறன்ன சொல்ல.

சம்பவம் மூன்று.

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது, வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும். அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’ எனக் கூற, அனைவரும் சிரித்தனர். அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு வரவில்லை.

அம்பிகா எனும் வலைப்பதிவருடையது.

*********

ஒரு சம்பவம் அர்த்தப்படுத்தப்படுவது அவரவர் புரிதல்களுக்கேற்பவே. ஆரம்ப அர்த்தப்படுத்தல்களில் தவறு கண்டுபிடிக்க முயல்வது சரியாகப் படுவதில்லை எனக்கு. ஊரிலிருந்து வந்த நண்பன் இன்னும் நான்கைந்து ஆங்கிலப் படங்களை பார்த்தால் தனது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறுவயது முதலே பெற்றோர்களால் இடது கைவிரல் நகங்களை வளர்க்காதே எனறு அறிவுறுத்தப்பட்ட நான் அதற்குள் மட்டுமே இருந்திருக்கிறேன் வெளியில் சிந்திக்காது. மூன்றாவது சம்பவத்தில் வரும் சிறுமியின் புரிதல் கவலைக்குரியது. வீட்டில் நடந்த ஏதோவொரு நிகழ்வு ஆழப்பதிந்திருக்கிறது அச்சிறுமிக்கு.

ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.

இச்சம்பவங்களின் புரிதல்களூடு மதங்களையும் அதன் அபத்தங்களையும் எழுதவேண்டும் என சிந்திக்கிறேன். பதிவின் போக்கு இன்னொரு நிலைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | கௌபாய்மது.

 

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

உங்களுக்கு Badminton விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா? இப்போதுதான் ஆர்வப்பட்டுப் பழக ஆரம்பித்திருக்கின்றீர்களா? நானும் உங்களைப்போல்தான். கடந்த சில மாதங்களாக Badminton இல் ஆர்வப்பட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். மேற்பார்வையாளர் எவரும் இன்றி YouTube காணொலிகளைப் பார்த்தும், இணைய உதவிகளைக் கொண்டும் சிறிது சிறிதாகவாவது முறையாக விளையாடப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் தேடியபோது 4 GB அளவிலான 30 பகுதிகளைக்கொண்ட காணொலி Badminton வழிகாட்டி கிடைத்தது. ஆனால் அதைத் தரவிறக்க வேண்டியிருந்தது Torrent மூலமாக. என்னைப்போல் ஆர்வக்கோளாறில் முந்நூறு, நானூறு பேர் இருப்ப்பார்கள் போல. அவ்வளவு எண்ணிக்கையான peers ஆனால் பத்தோ இருபதோ seeders. தரவிறக்கவேகம் 3 kbps இனைத் தாண்டியதில்லை. 0.01 kbps இலும் வரும். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எனது மடிக்கணினியை இரவுபகல் பாராது இயங்கவிட்டு முழுமையாக இறக்கிவிட்டேன். முந்தநாள்தான் வெற்றியடைந்தேன்.

இப்போது நானும் ஒரு seeder. என்னால் தரவிறக்க வேகம் சிறிது அதிகரித்திருக்கும். சரி இவ்வளவு கஸ்டப்பட்டு இறக்கினோமே, அதில் பலனிருக்கிறதா என்று பார்த்தால்... ஆம் நிச்சயமாக.

மிக அருமையான ஒரு வழிகாட்டி. தயார்படுத்தல், கையிற்குச் செய்யவேண்டிய பயிற்சிகள், Badminton இன் ஆரம்ப முக்கிய கூறான footworks முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக விளங்கப்படுத்துகிறார்கள். இந்த வழிகாட்டி சீன மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் உபதலையங்கத்தைக் கொண்டிருப்பதால் விளங்கமுடிகிறது.

இப்போதெல்லாம் எனது அறையில் இந்த வழிகாட்டியைப் பார்த்து அதனைச் செய்து பார்க்கவிழைகிறேன். அறையின் மின்குமிழ் சிதறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் தெரிகின்றன. ஒரு Badminton bird இனைவிட மின்குமிழ் விலைகுறைவு என்பது கொசுறுத் தகவல்.

உங்களுக்கும் ஆர்வமிருக்கின்றதா? என்னைத் தொடர்பு கொள்வீர்களானால் அந்த முழுவழிகாட்டியினையும் தந்துதவமுடியும். இந்திய நண்பர்கள் தொடர்புகொண்டு "மாக்கா.. அப்பிடியே எனக்கு பார்சல் செய்யதுவிடு" என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

வாங்கோ செத்துச் செத்து விளையாடலாம்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

 

டாக்டர் என்றால் டாக்டர்தான்
வேட்டைக்காரன் வர முன்னர் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

நானும் எனது நண்பர்கள் இருவரும் அமிர்தா உணவகத்திற்கு சென்று பூரி அருந்திக்கொண்டிருந்தோம் (உணவு அருந்துதல் என்று சொல்வார்களே, பூரியும் உணவுதானே). அன்று வெள்ளிக் கிழமை பக்கத்தில் கோயில் வேறு என்பதாலும் அமிர்தா ஒரு மரக்கறி உணவகம் என்பதாலும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலர் வந்திருந்தார்கள்.

எனது நண்பர்களில் ஒருவன் படத்தில் உள்ளவாறு தலைமயிரை அழகாக வைத்திருந்தான்.
வந்திருந்த தெரிந்த பையன் ஒருத்தன், அவனுடைய அலப்பறை தாங்காமல் தூரத்திலேயே அவனைக்கண்டு ஓடி ஒளிப்பவர்கள் ஏராளம், தனது அலப்பறையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டான்.

எனது நண்பனைப் பார்த்து "டேய் இவனப் பார்றா... வில்லு வடிவேலு மாதிரி இருக்கிறான்...ஹா ஹா" என்று தன்னுடன் வந்திருந்தவர்களுடன் ஆரம்பித்துவிட்டான் அலப்பறையை. எனது நண்பனுக்கு முகம் கொஞ்சம் ஒரு மாதிரிப் போய்விட்டது. எனக்கும் கடுப்பாகிவிட்டது. மனதில் பட்டென்று உதித்தது. அந்தப் பையனைப் பார்த்து

"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா" என்றேன். பிறகென்ன அவனுடன் வந்தவர்களும் சேர்ந்து சிரித்து பக்கத்தி்ல் இருந்த இரண்டு மூன்று மேசை ஆட்களே சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்திருக்கவேணும். அவன் அண்டைக்கு அதுக்குப் பிறகு ஏதும் கதைக்கவில்லை.

(டாக்டர் விஜய் பவர் அப்படி...)

மூஞ்சிப்புத்தக மொக்கைகள்
நேற்று எனது பால்ய நண்பன் ஒருத்தனின் பிறந்தநாள். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை என்னுடன் ஒன்றாகப் படித்தவன் அவன். உயர்தரம் (A/L) அரைவாசி வரைக்கும் எனக்கு பள்ளிக்கூடம் போக சைக்கிள் இருக்கவில்லை. அதுவரை கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் என்னை எனது வீடு வந்து தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போறவன் அவன். ஒண்டாத்தான் ரியூசனுக்குப் போறனாங்கள். இரண்டு பேரும் ஒரே உயரம். வகுப்பிலயும் வரிசைப்படி விட்டு இருத்திறதால நானும் அவனும் பக்கதத்தில பக்கத்திலதான் இருக்கிறானாங்கள்.


செத்துப் போட்டான் நாலைஞ்சு மாசத்துக்கு முதல்.

அவனது உடல் கூட எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா எண்டு தெரியேல.

மூஞ்சிப் புத்தகக்காரன் (Facebook) முந்தநாளில் இருந்து வந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவி எண்டு மொக்கை போடுறான். போய்ப் பார்த்தா கவலையாக் கிடந்தது. மூஞ்சிப் புத்தகத்தில செத்தாக்களின்ர விபரம் பற்றி அவங்களுக்குத் தெரிவிச்சா அஞ்சலிக்காக மட்டும் அவர்களது பக்கத்தைத் திறந்துவிட்டு மற்ற விடயங்களை, இப்படி வாழ்த்துத் தெரிவி போன்ற விபரீதங்களை நிறுத்திவைக்கிறார்களாம். இதுபற்றி ஆதிரை எழுதியிருக்கிறார். போய்ப் பாருங்கோ. இறப்புக்குப் பின் Facebook http://kadaleri.blogspot.com/2009/11/facebook.html

இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(

கூகுள் பரிசோதனைக்கூடத்தின் கடுகு ஒன்று
ஆர்ப்பாட்டமே இல்லாம வந்த கூகுளின் பாஸ்ற்பிளிபை எத்தனை பேர் பாவிக்கின்றீர்கள். மிக மிக எளிமையான, அருமையான கூகுளின் தயாரிப்புகளில் ஒன்று.

http://fastflip.googlelabs.com/


நீங்கள் ஏலவே அதனைப் பாவிக்கின்றவராக இருப்பின் உங்கள் நாளாந்தப் பார்வைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பாவிக்க ஆரம்பிக்கவில்லையா சென்று பாருங்கள். குறித்த சொல்லைத் தட்டச்சி தேவையானவற்றைப் மட்டும் நுனிப்புல் மேய்ந்து தேவையெனின் மேலும் அடிப்புல் பார்க்கலாம். நேரத்தை நிர்வகித்து செய்திகள், தகவல்களைப் பார்க்க அருமையான தளம் இது.

(FastFlip - Simply Superb)

நோக்கியா - வெடிக்குமா
நீங்கள் நோக்கியா charger பாவிக்கிறவரா? குறித்த காலப்பகுதியில் விற்கப்பட்ட charger கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவாறு இருக்குதாம். நோக்கியாவே சொல்லுது. இங்க போய்ப் பாருங்கோ...

http://chargerexchange.nokia.com/chargerexchange/en/

தங்களுக்கு இவ்வகைச் charger களால் ஏதாவது ஆபத்து ஏற்பட முன்னர் கொண்டுபோய் மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.


(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )

Charger க்கு என்ன தமிழ் வார்த்தை?


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

 அச்சுவலை - அச்சோ ஒரு கவலை

எவரும் மறந்திடவேண்டாம்

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்

பூரணை விருந்து

மீண்டும் ஒரு சந்திப்பு

அச்சுவலை சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு

எங்கள் சந்திப்பு - எவரும் மறந்திட வேண்டாம்

இவ்வாறு எத்தனை பதிவுகள் ஆர்வமேலீட்டால் வந்திருந்தன. அதிலொன்றும் தப்பேயில்லை. இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு தந்த மகிழ்ச்சியும், கன்னி முயற்சியாயினும் அதன் காத்திரமும் இன்னொரு வலைப்பதிவர் சந்திப்புப் போல அழகுறை சுற்றப்பட்ட அல்லது தப்பாக விளங்கிக்கொள்ளப்பட்ட இருக்கிறம் சஞ்சிகையின் "அச்சுவலைச் சந்திப்பு" நடந்தபின் வரும் அதைப் பற்றிய பதிவுகளி்ல் அதிகமானவை மகிழ்ச்சி தருவனவாய் இல்லை.

அச்சுவலைச் சந்திப்பின் குறிக்கோள் என்னவாக இருந்தது? அது வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைத்தல். இது சாதாரணமாகச் சொல்லிவிட்டு செய்யக்கூடிய குறிக்கோள் அல்ல. இதன் நிறைவேற்றுகைக்கு மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தல் தேவைப்படுகிறது. அவ்வாறானவொரு ஒழுங்குபடுத்தலை காணக்கிடைக்கவில்லை.

வலைப்பதிவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும்போது இலங்கைப் பதிவர்கள் கொழும்பிலிருந்து மட்டும் வருபவர்களல்லர். இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள். மூன்று நாள் தொடர்ந்த விடுமுறையை அனுபவிக்காது சந்திப்பின் காத்திரத்திற்காக பணம், நேரம், உடலசதி பார்க்காது வருபவர்கள். இதனையெல்லாம் இருக்கிறம் சிந்திக்கவில்லையா? கல்முனையிலிருந்து சக பதிவர் முதல் நாள் இரவு பயணித்து இதற்காக வந்து மாலைவரை காத்திருந்து சந்திப்புத் தொடங்கி ஒரு மணித்தியாலங்களில் திரும்பிப் போய்விட்டார். மனதுக்கு உறுத்தலாக இருந்தது.

இருக்கிறத்தின் சந்திப்பில் குறைகளைப் பற்றியே கூறவேண்டியதன் காரணம் என்ன? இச்சந்திப்பை வெளியுலகிற்குக் காட்டிய முறை பிழையானது. இதனையே "அச்சுவலைச் சந்திப்பு - வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைக்கும்.." என்று வெளியுலகிற்கு காட்டாது, "இருக்கிறத்தின் கலந்துரையாடல் நிகழ்வு - வலைப்பதிவர்களும் அழைக்கப்படுகின்றர்" என்பது போலக் காட்டியிருந்தால் யாருமே குறை குற்றம் கூறியிருக்கமாட்டார்கள்.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம் ஒரு சஞ்சிகையாக, ஒரு நிறுவனமாக அதனைத் தக்கவைத்துக்கொள்ளவோ (ஏலவே அது ஓரளவு தன்னைத் தக்கவைத்திருக்கிறது புதிதாக வந்த மற்றைய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்போது) அதன் இருப்பை வெறும் காலாகாலம் வெளிவரும் சஞ்சிகையாகவன்றி ஏதோ புதுவிதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளவோ இன்றைய அவசர உலகில் அதிகம் கவனிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கவோ அல்லது வலைப்பதிவுகளினுள் உள்வாங்கப்படவோ வேண்டிய தேவை உளது. அவ்வாறானவோர் தேவையின் சிறுபகுதி இவ்வச்சுவலைச் சந்திப்பில் பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது.

இருக்கிறத்தின் இருப்பின் சிறுவரலாறு. சஞ்சிகைகள் பத்திரிகைகளின் இயல்புகள். வித்தியாதரனின் சுவாரசியமான சில அனுபவங்களும், தமிழ்மொழியின் தவறான பாவனையிலான சிறுகோபங்கள், இருக்கிறத்தின் மேம்படுகைக்கான கருத்துரைகள், இருக்கிறம் மலினப்பத்திரிகையல்ல என்றவோர் சிறுவிவாதம் மற்றும் இருக்கிறத்தினைச் சுற்றியே வந்த இதர நிகழ்வுகள் எல்லாம் எதிர்பார்த்துவந்ததினைப் பூர்த்திசெய்யத் தவறியதால் வலைப்பதிவர்களின் ஈர்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அச்சும் வலையும் அறிமுகப்ப்படும் சந்திப்பெனின் அதுசம்மந்தமாக ஏன் எதுவும் நிகழவில்லை? எவ்வளவு அருமையான வழிகள் உளளன. சிறு சிறு சுவாரசியமிகு போட்டிகள், அச்சிலிருந்து இருவர் வலையிலிருந்து இருவர் என குழுவாகி அறிமுகத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு செயற்பாடுகள் போல எவ்வளவோ உளன. அச்சு அச்சாகவும் வலை வலையாகவும் இருந்ததைத்தான் காணமுடிந்தது.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம்... நீங்கள் அடுத்தமுறை இவ்வாறானதோர் சந்திப்பை ஒழுங்குபடுத்துவதாகவிருந்தால் அதன் நிகழ்ச்சிநிரலை ஏலவே வெளியிடுங்கள். வருகையாளர்கள் உங்கள்மேல் குறையொன்றும் கூற முடியாது.

--------------------------------------------------------------------------------------------------

இருக்கிறத்தின் "அச்சுவலைச் சந்திப்பினை" ஆர்வத்துடன் எதிர்பார்த்து மிக மேல உள்ள பதிவுகளைப் போட்ட வலைப்பதிவர்கள்தான் சந்திப்பின் பின் இப்பதிவுகளைப் போடுகிறார்கள்.

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

அச்சுவலைச் சந்திப்பில் பதிவர்க(ள்/ளும்)

இருக்கிறம் ஏமாற்றியது

எமது "சந்திப்பு வறுமையும்" அச்சுவலைச் சந்திப்பும்

மிக மேலுள்ள பதிவுகளுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடனும் மகிழ்ச்சியுடனும் பின்னூட்டங்கள் கிடைத்ததோ அதைவிட காட்டமாகவும், கவலையுடனும் இவற்றுக்குப் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன். இவற்றைச் சாதாரணமாகப் புறம்தள்ளிவிட முடியாது. இருக்கிறம் நிர்வாகத்தினர் அடுத்தவோர் சந்திப்பில் இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு சிறப்புறச் செய்யவார்கள் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் எவ்வளவுதான் மேல எழுதியிருந்தாலும் தர்ஷாயணீ லோகநாதன் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட Status Message ஆயிரம் கதை சொல்லும். அது....

அச்சுவலைச் சந்திப்பு - சேறும் சகதியும்


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை
ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.

பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.

எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.

சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.

இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.

"எக்ஸ்கியூஸ் மீ..."

காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.

எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."

அதே அழகான பெண்.

ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.

"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"

"ஓ.கே." (இனி தமிழாக்கம்)

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"

மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.

"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"

"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"

என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு

"அப்படியொண்டும் இல்லை"

"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"

அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.

இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.

யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.

எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...

இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)

பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
முதல் சந்திப்பு, முழுமையான நிறைவோடு, எல்லாம் நலமாக நடந்து முடிந்தது. மொத்தமாக சந்தோசமான 3 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும்... ஒலி ஒளிபரப்பு சந்திக்கவிலயாதிருந்த பதிவர்களையும் வெளிநாட்டிலிருக்கும் பதிவர்களையும் சென்றடைந்தது கூடுதல் மகிழ்ச்சி.

ஒளிபரப்பு சாட்டிங்கினூடாக அவர்களின் கருத்துக்கள், கேள்விகள், நக்கல்கள் சந்திப்பை கூடுதல் சுவாரசியமாக்கியது. அவர்களின் கேள்விகள் சந்திப்பில் குறித்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருந்தது இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தி நிற்கிறது.

சந்திப்பிற்கு வந்த குழந்தைப் பதிவர்வரை கொஞ்சம் கதைக்க வையுங்கோ, பங்குபற்றிய பெண் பிள்ளைகளில் பரிவு கொண்டு அவர்களில் யாரையாவது பேச விடுங்கோ, சந்திப்பு நிறைவடையும் நேரம் எல்லோரின் முகங்களையும் தனித்தனியே காட்டுங்கோ என்று அன்புக் கட்டளைகளை சாட்டிங்க் மூலமாக ஒளிபரப்பினூடு வேண்டுகோள் விடுத்தமை சந்திப்பைக் கலகலப்பாக்கியது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது www.livestream.com இன் இலவச அடிப்படை கணக்கினூடாக. வழமையாக ஒளிபரப்புக்களை அவர்கள் சேமித்து வைப்பார்கள். இந்த முறையும் அவர்கள் சேமித்து வைப்பார்கள் நாங்கள் மீண்டும் பார்த்து மகிழலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ம்ஹீம்... கொஞ்சம் ஓவர்தான். ஆறுபணத்துக் குதிரையும் வேணும் ஆறுகடக்கப் பாயவும் வேணும் எண்டு நினைக்கிறது நல்லதில்லைத்தானே. கிட்டத்தட்ட 4 மணித்தியால ஒளிபரப்பினை சலனமாகச் சேமித்து வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நல்லாவா இருக்கு...

சுவாரசியமான சாட்டிங்க் வரலாற்றினையும் நகலெடுக்கத் தவறிவிட்டேன். கவலைதான் என்றாலும் சந்திப்பின் முழுமையான ஒலிப்பதிவு இருக்கிறது என்ற மகிழ்ச்சி இன்னும் நிலைக்கிறது. நிகழ்வினை முழுமையாகப் பதிந்த மதுவர்மனுக்கு (என்ர அண்ணாதான் :-))) நன்றிகள்.

சந்திப்பில் பங்குபற்றாதவர்கள் இதனைக் கேளுங்கள். பங்குபற்றியவர்களும் மீண்டும் ஒரு முறை கேளுங்கள் சுவாரசியமாகவும் அடுத்தமுறை நிறைய விடங்களைக் கதைக்கவும் உதவும்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8


இந்த எட்டுப் பகுதிகளையும் தரவிறக்கிப் பாவிப்பதற்கான சுட்டிகளும் இதோ...

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8

நேரடி ஒளிபரப்பினை கூடுதலாக 44 பதிவர்கள் ஒரே நேரம் பார்த்து சிறப்பு. கிட்டத்தட்ட 150 பேர்வரை நேரடி ஒளிபரப்பை இரசித்திருந்தார்கள். குசும்பனோட மொத்தமா (குசும்பனே மொத்தம்தான்) பத்து பேர் ஒன்றாக பார்த்து ரசித்தார்களாம்.

அருமையான ஒரு நாள்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

மல்டிபிள் செலக்ஷன்

இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். அந்த நேரமெல்லாம் முற்றாக நகலெடுத்து வேர்டிலே ஒட்டி தேவையற்றவற்றை நீக்கி என்று... அந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்.

மல்டிபிள் செலக்சனை விளக்கும் படம்

இதனை நீ்ங்கள் Ctrl விசைய அழுத்தியபடி மௌஸ் சுட்டியால் தேர்வுசெய்வதன் மூலம் அடையமுடியும் (Ctrl + தேர்வு).

"பழகப் பழகப் பயர்பாக்ஸ் இனிக்கும்"

வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்

பதிவிட தாமதம் ஆகிவிட்டதுதான் பரவாயிலை, சொல்லியாக வேண்டும். வாரணம் ஆயிரம் பற்ற நேர்மறையான விமர்சனங்கள் வலையுலகிலும் வந்து போயிருந்தன். எனக்கு அது ஒரு திருப்தியான அனுபவமாகத்தான் இருந்தது.


நானும் இன்னும் மூன்று நண்பர்களும் கொண்கோர்ட் தியேட்டருக்குச் சென்றிருந்தோம். ஏசி குளிர் அன்று கடுமையாக இருந்தது. ஒரு நண்பன் "வானரம் ஆயிரம் எண்டா என்னடா அர்த்தம்" என்று அப்பாவியாய்க் கேட்டதற்கு "அடேய் அது வாரணம் ஆயிரம்டா" (திருப்தி) என்ற கலாய்த்தலுடன் படம் பார்க்க ஆரம்பித்தோம். படத்தைப் பற்றி நான் என்ன வேற சொல்லவேண்டிக் கிடக்குது. ஏலவே பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்களே.

சமீரா ரொம்ப அழகு (திருப்தி). புகைவண்டில் முதல் சந்திப்பில் காட்டும் முகபாவங்கள் இப்போதும் கண்முன்னே. சூர்யா ஒன் மேன் ஆர்மியா படத்த நகர்த்த முயற்சித்திருக்கிறார். என்ன செய்யிறது ஒருவர் இழுத்து தேர் ஓடாதே. அடியே கொல்லுதே பாட்டின்போது நண்பனொருவனின் கால் வழமைக்கு மாறாக கட கட என்று ஆடிக்கொண்டிருந்தது. (ஏசி அவனுக்கு நேரே அடித்துக்கொண்டிருந்தது, பையனால் ஏசியை தாங்க முடியவில்லை).

"டேய்... என்னடா இப்பிடிக் கால் ஆடுது?"

"அது... நான் பாட்டுக்கு கால் ஆட்டிக்கொண்டிருக்கிறன்.."

"ம்ம்ம்... அது பாட்டுக்கு கால் ஆடிக்கொண்டிருக்குது" இது இன்னொரு நண்பன். (திருப்தி)

இப்படி குட்டிக் குட்டித் திருப்திகளோடு முதல் பாதி நகர்ந்தது. ஐயகோ இரண்டாம் பாதி நகரவே இல்லை. வெளியே வந்தபோது மூன்று படம் பார்த்த நேரம் சென்ற உணர்வு.

சரி படம் முடிஞ்சு ஒரு ஹோட்டலுக்குக் சென்று மத்தியானச் சாப்பாட்டுக்கு சொல்லவிட்டு இருக்கத்தான் பார்த்தேன் என்னோட செல்பேசியை எங்கோ தவற விட்டுவிட்டேன். தியேட்டரில்தான் இருக்கவேண்டும். பக்கத்து நண்பனின் செல்பேசியை வாங்கி ரிங்க் செய்தேன். ரிங்க் போகிறது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் தியேட்டருக்குச் சென்றேன்.

அடுத்த காட்சியில் மக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தியேட்டர் பணியாளர்களிடன் சென்று என்ர பிரச்சினையை சொன்னன். இடை நடுவில் உள்ளே சென்ற நான் இருந்த இருக்கையை பார்த்தோம். இருந்தவரும் சந்தோசமாக எழும்பி தானும் சேர்ந்து தேடினார். கிடைக்கவில்லை. வெளியில் வந்து பணியாளர் ஒருவரின் செல்பேசியில் எனது பேசிக்கு ரிங்க் செய்தேன். எனது இருக்கையில் இருந்தவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருப்பார் போல் தெரிகிறது, தொடர்ந்து தேடுவதிலேயே இன்பமடைந்து "இந்தாருங்கள் இருக்கைக்கு அடியிலே கிடந்தது" என கொணர்ந்து தந்தார்.

நன்றி கூறி வாங்கி; செல்பேசி தந்த பணியாளர் "வேற யாருமெண்டால் போனை எடுத்திருப்பாங்கள், ரீ குடிக்க ஏதாவது தந்துட்டு போங்கோ" எனறு தனது தூய உள்ளத்தை வெளிப்படுத்தினார். சரி என்று அவருக்கு 200 ரூபா கொடுத்துவிட்டு மொத்தத்தில் 550 ரூபா கொடுத்து படத்தை கஷ்டப்பட்டு பார்த்து முடித்திருந்தாலும் போன் திரும்பக் கிடைத்ததே என்ற திருப்தியில் (போன் மீள்க் கிடைத்தபோது உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்) வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்த பின்னும் போன் கிடைத்த திருப்தி நிலைத்திருந்து.

இந்த திருப்தி வாரணம் ஆயிரம் படத்துக்குப் போனதாலதான வந்தது. எனவே வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்.

மதுவதனன் மௌ.

 

நியாபகம் ≠ ஞாபகம்

நான்கைந்து பதிவர்கள் நியாபகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஐயனார் அய்யனாராவதற்கும், ஔவையார் அவ்வையாராவதற்கும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை காரணம் காட்டலாம் பிழையானதெனினும்கூட. ஞாபகம் எவ்வாறையா (எவ்வாறய்யா அல்ல) நியாபகம் ஆகிறது. உங்களது நீண்டகாலப் பழக்கம் நியாபகம் என்ற இல்லாத; தவறான சொல்லை ஞாபகம் என மாற்றக் கஷ்டப்படுத்தலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே சொல்லிக் கொடுக்காதீர்கள்.

A for Apple

இந்தத் தலையங்கத்தில் நிறையப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் மணியால் இந்தப் விளையாட்டுக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் அது என்ன என்று ஆராயவிழைந்தேன்.

பின்னோக்கிப் பின்னோக்கிச் சென்று விளையாட்டின் ஆரம்பத்தைப் பிடிப்போமென்றால் முடியவில்லை. யாராவது இந்த A for Apple இன் ஆரம்பத்தைச் சொன்னால் நலம். எப்படி இந்த உபயோகமான விளையாட்டு ஆரம்பித்தது இப்போது எப்படி மாறியிருக்கிறது என அறிய அவா, அவ்வளவுதான். இரண்டு மூன்று நாட்களில் நானும் பங்குகொள்கிறேன்.

இந்த நல்ல விளையாட்டை நினைக்க ஆங்கிலப் பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.


Customer care இற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது...
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்

காலுறை நாத்தம்

நாற்றம் என்பதுதான் எழுத்துவழக்காக இருப்பினும் நாத்தம் எனும் பேச்சுவழக்குக்கு வீச்சு அதிகம்தான் (நியாபகம் என்பது பேச்சு வழக்கல்ல). நாற்றம் பிடித்தவனே என்பதை விட நாத்தம் புடிச்சவனே என்பதில் effect இருக்கிறது.

சரி, இப்ப விடயம் என்னவென்றால் எங்கட பாதங்களில வழமையாக குஜாலா இருந்துகொண்டிருக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் நாங்கள் காலறையைப் போட்டால் வாற ஈரப்பதம் கண்டால் கூட்டமாச் சேந்து கும்மி அடிச்சு (எங்கட வலைப்பதிவர்கள் அடிக்கிறத விடக் கம்மிதான்) துர்நாற்றமுடைய சல்போரஸ் விளைவொன்றை வெளியேற்றுவார்கள் (says Doris J. Day, M.D., an assistant professor of dermatology at New York University).

இதை நீக்க என்ன செய்யலாம்... காட்டன் (cotton ) காலுறைகளையும், மூச்சுவிடக்கூடிய சப்பாத்துக்களையும் பாவியுங்கள் என்கிறார் அவர். அதாவது அணியும் சப்பாத்து காற்றை உள்வாங்கக் கூடிய பதார்த்தங்களால் (தோல் மற்றும் துணிவகை) ஆனதாக இருக்கவேண்டும். காலுறையை அணியும் முன் ஈரப்பதனுறிஞ்சும் பவுடர்களை பாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம். இந்த நாத்தப் பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று இரவுகளில் தேயிலை ஊறிய நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். தேயிலையிலுள்ள டனிக் அமிலம் (Tannic acid) காலின் துர்நாற்றத்தைப் போக்கும். இதுக்கு மேலயும் பிரச்சினை எனின் வைத்தியர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதே சிறப்பு.


நாற்றம் என்பது உண்மையில் வாசத்தினை குறிக்கும் சொல். அந்தப் பூவின் நாற்றம் என்னை கவர்ந்திழுத்தது போன்ற வசனங்கள் தமிழில் இயல்பு. நாற்றத்திற்கு எதிர்ச்சொல் துர்நாற்றம். அவள் நாத்தம் புடிச்சவள் என்பதன் நிஜ அர்த்தம், அவளுக்கருகில் போனாலே வாசம் வீசும் என்பதுதான். ஆனா நாங்கள் சிறிது சிறிதாக அர்த்தத்தை மாற்றிவிட்டோம்.



மதுவதனன் மௌ.

 

பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது பெண்கள் எப்போதும் இடது கைப் பக்கம் ஓடிவந்து நிற்பார்கள். பாதி வீதியைக் கடந்தவுடன் வலது பக்கம் இயல்பாகவே மாறுவார்கள். எப்படி அநேகமான பெண்கள் இப்படி இசைவாக்கமடைகிறார்கள் என அதிசயித்திருக்கிறேன். விளக்கத்திற்காக பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். நீங்களும் மஞ்சள் கடவையைக் கடக்கும் போது ஒருமுறை அவதானித்துப் பாருங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக இன்னொரு பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ ஜிமெயில் பாவித்துவிட்டு லாக்அவுட் பண்ணாது வந்துவிட்டீர்களா. உடனடியாக எங்காவது அருகில் உள்ள இணையத்தொடர்ப்புக்குச் சென்று உங்கள் ஜிமெயிலுக்குச் சென்று கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ திறந்து வைத்துவிட்டு வந்த அக்கவுண்டை லாக்அவுட் பண்ணமுடியும். மேலும் உங்களது ஜிமெயில் வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா எனவும் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக இங்கே செல்லுங்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுஜாதா எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் புணர்ச்சி விதிகளின் படி இந்த இருவேறு புணர்ச்சிகளையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது.

தங்கம் + காசு = தங்கக்காசு
சங்கம் + காலம் = சங்ககாலம்

முன்னையது திரிதல் விகாரப் புணர்ச்சியாக இருக்க, பின்னயது கெடுதல் விகாரப் புணர்ச்சியாக உள்ளது. ஆனால்

வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்

என திரிதல் விகாரப் புணர்ச்சியாகத்தான் வரும். யாராவது தமிழ் வல்லுநர்கள் இதைத் தெளிவித்தால் நலமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.

 

ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு கட்டுரை. "The Power of Sleep" என்று துறை போந்த வல்லுநர்களால் ஆராயந்து பெற்ற முடிவுகளைக் கொண்டு முறையான நித்திரை எப்படி ஒருவனை(ளை) கவர்ச்சியாக, உடல் வாகாக மற்றும் உறுதியாக வைத்திருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இரவில படுக்கைக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே சாப்பிடுங்கள் அதுவும் சோற்றைச் சாப்பிடுங்கள் என்று கூறுயிருக்கிறார்கள் (இன்னும் என்னென்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று எழுதினால் காப்பிரைட் சட்டம் என்மீது பாயலாம்). நல்லதொரு கட்டுரை. வேலை முடிந்து அந்தத் தூக்கம் பற்றிய கட்டுரையை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசி தாண்டி இரண்டுமணியாகிக்கொண்டிருந்தது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

விமர்சனங்கள் கூறுவதிலிருந்து படத்தின் பின்னே கிடக்கும் அந்த உண்மை புரிந்துவிட்டது. குசேலன் நட்பின் வீரியத்தைக் காட்டும் படம். பசுபதி - ரஜினி நட்பல்ல; கமல் - ரஜினி நட்பு. ஒரு சினிமாவுக்குப் பின்னால் நிஜ நட்பொன்றின் வலிமை கண்டு சிலாகித்தேன். ரஜினி தனது கமலுடனான நட்பைப் பாராட்டும் முகமாக; தசாவதாரம் 100 நாட்கள் கடந்தும் ஓடவேண்டும் என்பதற்காகவும், குசேலன் தசாவதாரத்தின் வரப்போகும் நாட்களின் வசூலை எந்தவித்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் குசேலனை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ரஜினியின் மகோன்னத மனத்திற்காக தசாவதாரம் இன்னொரு முறை பார்க்கப் போகிறேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஆரம்பக் கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக "நான் தமிழ்99 முறையிலேயே தட்டச்சுகிறன்" என ஊற்றுப் பேனாவொன்றால் ஒரு தாளில் எழுதவேண்டியதை " நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம். நாம் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடென்கிறார்கள். மேலும் சீன மற்றும் ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுகிறார்கள் என ஆராயவிருக்கிறார்கள். நல்ல முடிவுகள் வந்தால் மாறுவோம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பிரேம்குமாரின் வலைப்பூவி்ல் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான படம். தரவிறக்கி வைத்துள்ளேன். பார்க்காதவர்கள் மறக்காமல் ஒரு முறை பார்த்துச் செல்லுங்கள் இங்கே

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.

 

இலங்கையில சார்க் மாநாடு என்றுமில்லாத எடுபிடிகளோட நடக்குது. இன்று காலையில் பேரூந்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். சார்க் மாநாடுக்கு கலந்து கொள்ள வந்த ஒருவர் ஷாப்பிங்குக்கு வந்ததால் கொழும்பு கல்கிஸ்ஸவில் வைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்டார்கள். நடந்து செல்ல அனுமதிக்கிறார்களாம் என யாரோ ஒருவர் அலம்பக் கேட்டு 26 ரூபா டிக்கட் எடுத்திருந்த பேரூந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் வாகனங்களை மறித்த இடத்தில் எங்களையும் மறித்துவிட்டார்கள். வாகனங்களை அனுமதித்த பின் ஏதோ ஒரு பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பின்னர் தான் பார்த்தேன். அதே பேரூந்து, அதே நடத்துனர். வேறென்ன மேலும் 17 ரூபாவுக்கு அழவேண்டியதாகிவிட்டது.

கொழும்பில் டிஜிட்டல் பிரின்டிங்க் கடையின் முகப்பில் இரண்டு இஷான் சர்மா உயர விளம்பரம் ஒன்று மாட்டியிருந்தார்கள். ஒரு வெண்தோல் நங்கை பீச் மணலில் சிக்கன உடையில் காட்டவேண்டிய பாகங்களை ஆர்வமூட்டக்கூடிய வகையில் காட்டிக்கொண்டு தொடையில் பட்டிருக்கும் மணல் தெரியுமளவுக்கு இருந்தாள் (பிரின்டிங்க் குவாலிட்டி), நங்கையின் கைகளுக்கு இடையால் ஒரு வாசகம்..24 our service. படத்தைப் பார்த்துட்டு இது பிரின்டிங்க் கடையா இல்ல, 24 மணித்தியாலமும் இப்படியான பெண்கள் இருக்கும் கடையா என்று யோசிக்கவேண்டியிருக்கு.

மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.

குசேலன் கொழும்பில் இன்று ஆகஸட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஒத்துவராத மாதம். அதனால்தான் சர்ச்சையில் சிக்கியுள்ளாரோ தெரியவில்லை. லக்கியின் குசேலன் விமர்சனம் பார்த்தேன். கதையைச் சொல்லாத நல்ல விமர்சனம் (ஒருவேளை கதை இல்லையோ). அவரோட விமர்சனத்தில இது இருந்தது..."குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!".

மதுவதனன் மௌ.

 

எனக்கு பயங்கர குழப்பம். கீழே இந்த படத்தில இருக்கிறது யார்? சில உதவிக்குறிப்புக்கள் தரமுடியும். முடிஞ்சா யார் என்று சொல்லுங்கோ பார்க்கலாம்.

1. இவர் ஒரு தென்னிந்திய சினிமா நடிகர்.
2. அண்மையில் வெளியான இவரது படம் சக்கை....போடுகிறது.
3. இது அன்ரானியோ பன்ரஸ் அல்ல.

பி.கு: நான் நேற்றுத்தான் குருவி படம் பாத்தனான். தமிழ் வலையுலகம் சொல்லச் சொல்லக் கேக்காமல் போய்ப் பாத்தனான். எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்.

 

மாலைப்பொழுதா, காலைப்பொழுதா அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இது ஆறு சிறுவர்களுக்கும் ஆனந்தப்பொழுது, அனுபவிக்க முடிகிறது. இந்த ஆறு சிறுவர்களும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்; எங்கோ ஒன்றுகூடி இங்கே வந்திருப்பார்கள்; ஆனால் ஒருவன் மட்டும் முன்னதாகவே ஆற்றுக்குள் குதித்து விட்டான்.


(மவுஸ் சுட்டியை படத்தின்மேல் கொண்டுவந்து சிறிது நேரம் வைத்திருங்கள்)

இது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். இந்த மனோநிலை உங்களுக்கும் இருந்திருக்கும். சிறுவர்கள் ஏதாவதொன்று செய்யும்போது, யார் முதலில் செய்கிறார்களோ அவர்தான் அந்தநேரத்து ஹீரோ.

நான் அன்று ஒருநாள் என்னுடைய வீட்டக்கு முன்னால் இருக்க்கின்ற மைதானத்தில் இரண்டு சின்னப் பையன்களுக்கு லன்ச் சீற்றில் பரசூட் விட்டுப் பழக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வீதியால் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று மணியடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பையன்களும் மற்றவரின் முகத்தை மாறிமாறிப் பாத்தார்கள். ‘ஐஸ்கிரீம் வாங்கித்தாங்கோ’ என்று என்னிடம் கேட்போம் என்றுதான். இறுதியில் சின்னப்பையன் சொன்னான் ‘அங்க ஐஸ்கிரீம் வண்டில் போகுது’. எனக்கும் தெரியும் அவ்வீதியால் ஜஸ்கிரீம் வண்டி போகின்றதென்று, ஆனாலும் அவன் கூறியதன் அர்த்தம் தங்களுக்கு வாங்கித் தாங்கோ என்பது புரியாமலா இருக்கும்.

சரியென்று அவன்களுக்கு இரண்டு வாங்கிக்கொடுத்தேன். அவர்கள் அதைச்சுவைத்துக் கொண்டிருந்தவேளை சின்னப்பையன் கூறினான் “நான்தானே முதல்ல சொன்னனான் ஜஸ்கிரீம் வண்டி போகுது என்று”. பெரியவர்கள் இவ்வாறு கூறினால் அது நிச்சம் ஒரு கேலிக்கூத்தே. ஆனால் சிறுவர்களுக்குள் இவ்வாறு யார் முதற்காரணம் எனப்போட்டி நிலவுவது வழமையானதும் ரசிக்கக்கூடியதுமாகும்.

மேலே படத்தில் அழகாக பதிவாக்கப்பட்ட இரம்மியமான சூழ்நிலையுடன் சிறுவர்களின் அந்த இரசிக்கத்தகு மனோபாவமும் பதிவாக்கப்பட்டிருப்பதுதான் அருமை (மேலே பாயும் ஐந்து சிறுவர்களை விடவும் கீழே ஒருவன் முன்னதாகவே பாய்வது உங்கள் கலைக்கண்களுக்குத் தெரிகிறதுதானே!). ஒரு பையன் நிர்வாணமாகக் குதிப்பது மேலும் சூழ்நிலையை இரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இந்தவயதில் ஆபாசமாகத் தெரியாத நிர்வாணம், வயது வரவர ஆபாசமாகத் தெரிவது இயற்கையாலா அல்லது மனிதர்களின் நடத்தையாலா?

 

வணக்கம் வாசிக்கும் எல்லோருக்கும்,

இதோ இன்னொரு வலைப்பூ உங்களுடன் உறவாட ஆரம்பிக்கிறது. வலைப்பூக்களுக்கு நானொன்றும் புதியவனல்ல, ஆனால் இத்தகைய வலைப்பூவை நான் ஆரம்பிப்பது இதுவே முதற்தடவை.

Blog என்றவொன்று உளதாம், Googleகாரன் இலவசமாகக் கொடுக்கின்றானாம் என நண்பர்கள் மூலம் அறிந்து பாய்ந்து சென்று ஒரேநேரத்தில் ஒன்பது Blogகளை உருவாக்கி அதில் ஒன்றைத் தவிர மற்ற யாவற்றுக்கும் பெயராக “On progress…” எனப்போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நான் http://cowboymathu.blogspot.com என்ற இணைய முகவரியில்தான் எனது முதலாவது வலைப்பூவான “அர்த்தமென்ன பழமொழிக்கு...” இனை உருவாக்கினேன். அதில சில பழமொழிகளின் அர்த்தங்கள் பற்றி சில இடுகைகளை இட்டேன். பல நண்பர்களுக்கு அதன் முகவரியை மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திச் சேவை (SMS) இலும் அனுப்பி அதனைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைத்து இரண்டு மூன்று பின்னூட்டங்களையும் பெற்று களிப்புற்றேன்.

இவ்வாறு களிப்புற்றிருந்தவேளை ஒர் இனிய நண்பனின் வாய்ச்சொல்லொன்றுதான் என்னை மேலும் ஒன்பது வலைப்பூக்களை ஒரேநேரத்தில் உருவாக்க வைத்தது. வேறொன்றுமில்லை, எனது வலைப்பூவைப் பார்த்த அவன் தானும் http://cowboymathu1.blogspot.com என்ற முகவரியில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்துவிட்டதாகக் கூறினான். அவ்வளவுதான் “எனது தனித்துவம் பறிபோய்விட்டதே” எனக் கலங்கிநின்றேன். உடனே சென்று அந்த முகவரியைச் சோதித்துப் பார்த்தேன். முகத்திலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்! அவன் கூறியது பொய்.

ஆனாலும் அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற மகா கலக்கத்தில் cowboymathu1, cowboymathu2, …….., cowboymathu9 எனஒன்பது வலைப்பூக்களுக்கான முகவரிகளை பெற்றுப் பேருவகை அடைந்தேன். எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரே பெயர் (Title), அது “On Progress…”; ஒரே விவரணம் (Description), அது “For future use”.

எனினும் எனது முதலாவது வலைப்பூவில் இரண்டாவது இடுகைக்கே யோகன்-பாரிஸிடமிருந்து பின்னூட்டம் வந்து கண்டு ‘ஆகா! எனது வலைப்பூ நாடுகடந்தும் மணம்வீசுகிறேதே’ என பிறவிப் பெரும்பயன் அடைந்தேன். இப்போது அந்த வலைப்பூ செயற்பாட்டில் இல்லையெனினும் முதல் காதல்போல, முதல் முத்தம்போல முதல் வலைப்பூவாக ஞாபத்துக்காக அழிக்காது வைத்துள்ளேன். ஞானம் பிறந்து மற்ற ஒன்பதினையும் அழித்துவிட்டேன்

பின்னர்தான் எனக்கு பகீயின் ஊரோடி வலைப்பூ யாரோவொரு நண்பன் மூலம் அறிமுகமாகியது. எதோவொரு விதத்தில் அதில் கவரப்பட்டு அதன் வாசகனாகி, அதிலிருந்த தொடுப்புக்களூடு வேறு வலைப்பூக்களுக்கும் சென்று, அவற்றினூடு தமிழ்மணத்துக்குச் சென்று ‘ஆகா இப்படியெல்லாம் தமிழ் வலைப்பூக்களினூடு ஒரு புரட்சியே நடந்துகொண்டிருக்கிறதே’ என சிலாகித்து நானும் பங்காற்றுவோம் எனும் எண்ணத்தின் விளைவே நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது.

இந்த வலைப்பூவுக்கான அட்டைப்பலகையை எனக்கானதாய் மாற்றும் முயற்சி என்னுடைய மூன்று முழுநாட்களை விழுங்கிவிட்டது. உதவிசெய்த ஊரோடி பகீயிற்கும், உதவிக்குறிப்புக்களை தனது வலைப்பூவினூடு வழங்கிய ரவிசங்கருக்கும், ஆர்வத்தைத் தூண்டிய தமிழ்மணத்துக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது நா இனை அசைக்கத் தொடங்கிவிட்டேன்.