வணக்கம் வாசிக்கும் எல்லோருக்கும்,
இதோ இன்னொரு வலைப்பூ உங்களுடன் உறவாட ஆரம்பிக்கிறது. வலைப்பூக்களுக்கு நானொன்றும் புதியவனல்ல, ஆனால் இத்தகைய வலைப்பூவை நான் ஆரம்பிப்பது இதுவே முதற்தடவை.
Blog என்றவொன்று உளதாம், Googleகாரன் இலவசமாகக் கொடுக்கின்றானாம் என நண்பர்கள் மூலம் அறிந்து பாய்ந்து சென்று ஒரேநேரத்தில் ஒன்பது Blogகளை உருவாக்கி அதில் ஒன்றைத் தவிர மற்ற யாவற்றுக்கும் பெயராக “On progress…” எனப்போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நான் http://cowboymathu.blogspot.com என்ற இணைய முகவரியில்தான் எனது முதலாவது வலைப்பூவான “அர்த்தமென்ன பழமொழிக்கு...” இனை உருவாக்கினேன். அதில சில பழமொழிகளின் அர்த்தங்கள் பற்றி சில இடுகைகளை இட்டேன். பல நண்பர்களுக்கு அதன் முகவரியை மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திச் சேவை (SMS) இலும் அனுப்பி அதனைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைத்து இரண்டு மூன்று பின்னூட்டங்களையும் பெற்று களிப்புற்றேன்.
இவ்வாறு களிப்புற்றிருந்தவேளை ஒர் இனிய நண்பனின் வாய்ச்சொல்லொன்றுதான் என்னை மேலும் ஒன்பது வலைப்பூக்களை ஒரேநேரத்தில் உருவாக்க வைத்தது. வேறொன்றுமில்லை, எனது வலைப்பூவைப் பார்த்த அவன் தானும் http://cowboymathu1.blogspot.com என்ற முகவரியில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்துவிட்டதாகக் கூறினான். அவ்வளவுதான் “எனது தனித்துவம் பறிபோய்விட்டதே” எனக் கலங்கிநின்றேன். உடனே சென்று அந்த முகவரியைச் சோதித்துப் பார்த்தேன். முகத்திலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்! அவன் கூறியது பொய்.
ஆனாலும் அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற மகா கலக்கத்தில் cowboymathu1, cowboymathu2, …….., cowboymathu9 எனஒன்பது வலைப்பூக்களுக்கான முகவரிகளை பெற்றுப் பேருவகை அடைந்தேன். எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரே பெயர் (Title), அது “On Progress…”; ஒரே விவரணம் (Description), அது “For future use”.
எனினும் எனது முதலாவது வலைப்பூவில் இரண்டாவது இடுகைக்கே யோகன்-பாரிஸிடமிருந்து பின்னூட்டம் வந்து கண்டு ‘ஆகா! எனது வலைப்பூ நாடுகடந்தும் மணம்வீசுகிறேதே’ என பிறவிப் பெரும்பயன் அடைந்தேன். இப்போது அந்த வலைப்பூ செயற்பாட்டில் இல்லையெனினும் முதல் காதல்போல, முதல் முத்தம்போல முதல் வலைப்பூவாக ஞாபத்துக்காக அழிக்காது வைத்துள்ளேன். ஞானம் பிறந்து மற்ற ஒன்பதினையும் அழித்துவிட்டேன்
பின்னர்தான் எனக்கு பகீயின் ஊரோடி வலைப்பூ யாரோவொரு நண்பன் மூலம் அறிமுகமாகியது. எதோவொரு விதத்தில் அதில் கவரப்பட்டு அதன் வாசகனாகி, அதிலிருந்த தொடுப்புக்களூடு வேறு வலைப்பூக்களுக்கும் சென்று, அவற்றினூடு தமிழ்மணத்துக்குச் சென்று ‘ஆகா இப்படியெல்லாம் தமிழ் வலைப்பூக்களினூடு ஒரு புரட்சியே நடந்துகொண்டிருக்கிறதே’ என சிலாகித்து நானும் பங்காற்றுவோம் எனும் எண்ணத்தின் விளைவே நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது.
இந்த வலைப்பூவுக்கான அட்டைப்பலகையை எனக்கானதாய் மாற்றும் முயற்சி என்னுடைய மூன்று முழுநாட்களை விழுங்கிவிட்டது. உதவிசெய்த ஊரோடி பகீயிற்கும், உதவிக்குறிப்புக்களை தனது வலைப்பூவினூடு வழங்கிய ரவிசங்கருக்கும், ஆர்வத்தைத் தூண்டிய தமிழ்மணத்துக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது நா இனை அசைக்கத் தொடங்கிவிட்டேன்.
19 பின்னூட்டங்கள்.
நான்..நான்..என்று பின்னோட்டமிட்டு நானானியானேன். நீங்களும் நா என்று ஆரம்பித்திருக்கிறீகள்! வாழ்த்துக்கள்!!
நான்..நான்..என்று பின்னோட்டமிட்டு நானானியானேன். நீங்களும் நா என்று ஆரம்பித்திருக்கிறீகள்! வாழ்த்துக்கள்!!
வாங்கோ நானானி;
இதுதான் நான் மட்டறுத்த முதலாவது பின்னூட்டமென்பதால் எங்கோ இருமுறை மட்டறுத்துவிட்டேன். ஒன்றை நீக்கலாம் என்றால் "This comment has been deleted by Administrator" என ஒரு செய்திவரும்.
எனவே நீங்கள் இருமுறை வாழ்த்தியதாக நினைத்து ஒன்றை நீக்காது விட்டுவிடுகிறேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
ஐயோ ஐயோ! (தூய தமிழ் என்பதால் அவ்வாறு அமைந்து விட்டது)........
இப்போது பின்னூட்டமிட்டதால் அளவற்ற சந்தோசம் அடைவீர்கள் என்று நம்புகிறேன். ச.சி (சத்தமாக சிரிக்கின்றேன்) :-))
வாங்கோ நிமல்;
நீங்கள் மும்முறை வாழ்த்திவிட்டீர்கள். நல்ல இடுகைகளை போட முயற்சிக்கிறேன்.
நன்றி.
வாங்க Umakanthan A.;
பின்னூட்டம் பெறுவது ஒரு சந்தோசம்தான். உங்களைப் போன்றோரின் கருத்துக்களே நமக்கு உத்வேகம்.
மி.ந(மிக்க நன்றி)
என் வலைப்பதிவுகள் சில உங்களுக்குப் பயன்பட்டதில் மகிழ்ச்சி. அப்புறம், தமிழ்99 தொடுப்புக்கு ரொம்ப நன்றி.
உங்க வார்ப்புரு ரொம்ப நல்லா, புதுசா இருக்கு.
வாங்கோ ரவிசங்கர்;
உங்கள் வலைப்பதிவுகள் நிறையவே உதவுகின்றன். நான் இவ்விடுகையில பாவித்த அட்டைப்பலகை என்ற சொல்லுக்கு வார்ப்புருவா சரியான தமிழ்? நல்லது. மூன்று நாளை விழுங்கினாலும் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வார்ப்புரு பரவாயில்லாமல் வந்துள்ளது போல் உள்ளது.
நன்றி
கௌபாய் மது,
உங்கள் அடைப்பலகை மிக நன்றாக உள்ளது. தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்
அன்புடன்
ஊரோடி.
வாங்கோ ஊரோடி பகீ;
இயலுமானவரை நல்ல இடுகைகளுக்காக முயற்சிக்கிறேன்
வாங்க கெளபாய் மது..
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
அழகா இருக்குங்க....
வலைப்பூவும் பதிவும்...
வாழ்த்துக்கள்.
வாங்கோ உண்மைத்தமிழன்,
தமிழ் வலையலகில் நானும் உங்களோடு..:)
நன்றி
வாங்கோ சுரேகா,
மேலும் அழகா வத்திருக்க முயற்சிக்கிறேன். :)
நன்றி.
ஒம்போதில் ஒண்ணு தேறியிருக்கே!
வாழ்த்து(க்)கள் மாடு மேய்க்கும் மது.
ஏம்ப்பா இப்படி ஒரு பேர்?
கிருஷ்ணனுக்கே கௌபாய்ன்னுதானே பெயர். இல்லையா? :-)
welcome welcome
வாங்கோ துளசி கோபால்,
வானத்தை இலக்கு வை குறைஞ்சு கூரையிலயாவது ஏறலாம் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்பதில ஒன்று தேறியிருக்கு.
ஏன் நான் கௌபாய்மது ஆனேன் என ஒரு தனி இடுகை போடும் திட்டம் இருக்கு. சுவாரசியமா இருக்கும் என நம்புறேன்.
நன்றி
வாங்கோ முரளி கண்ணன்,
வலைப்பதிவுலகத்துக்கு என்னை நன்றே வரவேற்கிறீர்கள்.
நன்றி.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ