நா
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

கடந்த 17 மாதங்களாக அவளை நான் அறிந்திருக்கிறேன். அல்லது அறிந்து கொண்டுருக்கிறேன். நானல்ல அவளை ஒரு முறை பார்க்கும் எவரும் அல்லது எவனும் அறிய ஆரம்பிப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமூட்டக்கூடிய விடயமில்லை.



நாளொரு கலரும் பொழுதொரு ஸ்டைலுமாக உடையணிவாள். அந்தந்தக் கலருக்கேற்ற பாதணிகளோ பலவிதம். எல்லாக் கலரையும் கலந்து ஊத்தின மாதிரி ஒரு செருப்பு வச்சிருக்கிறன். எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு.

பனியன் போட்டு சேட்டும் போட்டு பரவசமா பார்த்து நடக்கிறவன் நான். பனியன் மட்டுமே போட்டு (யோவ்.. மேலாடையை பற்றி மட்டும்தான் கதைக்கிறேன்) பார்த்தாலே பரவசமா நடக்குறவள் அவள்.


ஐந்தாறு நாளுக்கொருக்கா, ஐந்தாறு மயிரை வெட்டிச் சேப் ஆக்க ஐநூறு கொடுப்பாள் அவள். ஸ்றெயிற் பண்ணின மயிராம் அது. மண்ணாங்கட்டி சேப்பிங்கும் மயிரில் ஸ்றெயிற்றிங்கும். மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.


தொலைவெண்டாலும் தொங்கிக்கொண்டு பஸ்ஸில போவேன். காரில் போய்ப் போய் போரடிக்குதாம் என்று பஸ்ஸில போவதற்கு விருப்பப்படுவாள். பஸ் பிழைச்சா கொண்டக்ரரிட்ட காசு வேண்டிக்கொண்டு அடுத்த பஸ் எனக்கு. கார் பிழைச்சா பக்கத்தில விட்டுட்டு கப் (Cab) பில போவது அவளுக்கு.

அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள். நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது. அவளுக்கும் கூடத்தான்.



சரி இந்தளவுக்கு எப்படி ஒப்பிட முடியுது எண்டு யோசிக்கிறீங்களா? சிம்பிள்.. நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது. நான் போன பஸ்ஸும் அவளின்ர காரும் அக்சிடன்ற் ஆக, மயங்கிக் கிடந்த அவளை இழுத்து வெளியில போட்டுட்டு அவளின்ர ICE இலக்கத்திற்கு போன் பண்ணினதுதான் நான் செய்தது. பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன். இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.


கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

"என்ன நீங்கள், இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் கூடநேரம் படுக்கவிடமாட்டீங்களா?"

மெத்தையில் படுத்தபடி கேட்டவளை நினைக்க கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. பின்னே என்ன, அதிகாலை ஐந்துமணிக்கே எழும்பி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட ஏழு மணிக்கு வெளியில் செல்லவேண்டிய தேவை இருந்ததால் வீட்டைச் சுத்தப்படுத்தி, ஃபிரிஜ்ஜில் இரவே ஊறப்போட்டிருந்த மாவில் எனக்கும் அவளுக்கும் போதுமான தோசை சுட்டு, சின்னதாய் ஒரு சாம்பாரும் செய்துவிட்டு இறுதியில காப்பி போட்டுக்கொண்டுவந்து அவளை எழுப்பினால் இப்படிச் சொல்கிறாள்.

ஆணாக நான் இவ்வளவு வேலைகளும் செய்கிறேனே ஒத்தாசைக்கு ஒரு உதவிகூடச் செய்யக் கூடாதா என மனம் நினைத்தாலும், அவள் வந்த காலத்திலிருந்து அப்படித்தான், நானும் நன்றாக இடம் கொடுத்துவிட்டேன். ஐந்து வருடம் காத்திருந்து காதலித்த முகம், அவள் என்ன சொன்னாலும் அவளது முகம் என்னை கீழ்ப்படிய வைத்துவிடுகிறதே. அவள் மேலுள்ள பாசம் வேறு அவளைக் கஷ்டப்படுத்த விடமாட்டேன் என்கிறது.

ஞாயிற்றுக்கிழமை எண்டாலே வழமையா இப்படித்தான். மெத்தையை விட்டு எழும்ப ரொம்ப நேரமாகிவிடும்.

"காப்பி போட்டுக்கொண்டந்து வைத்திருக்கிறேன், குடிச்சிட்டுப் படு"


"ஹையா...என்ர செல்ல அப்பா, ரொம்ப தாங்க்ஸ்"

என் செல்ல மகள் வைஷ்ணவியின் இந்தக் கெஞ்சல்களிலேயே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடம் காத்திருந்து காதலித்து கரம்பிடித்த என் அன்பு மனைவி அபர்ணா தனது அழகிய முகச் சாயலிலேயே ஒரு குழந்தையைத் தந்துவிட்டு அன்றே உலகைவிட்டுப் போய் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன்.

அன்றிலிருந்து வைஷூ குட்டியே எனது வாழ்க்கை; அவளது செல்லக் கெஞ்சல்களே எனது சக்தி; உடல் களைப்பில் மனம் என்னதான் நினைத்தாலும் அவளுக்குக் கடமை செய்வதிலேயே எனக்குச் சந்தோசம்.

"அப்பா, காப்பி இண்டைக்கும் நல்ல டேஸ்ட், இன்னும் கொஞ்ச நாளில அப்பாவுக்கு இந்த வைஷூ காப்பி போட்டுத்தருமாம்"

நான் ஒன்றும் சொல்லவில்லை, குண்டுக் கன்னங்களைக் கிள்ளிவிட்டு புன்னகைத்தேன்.

பி.கு : அன்று ஞாயிற்றுக் கிழமை ஏழு மணிக்கு வெளியில் போகவேண்டியதேவையாலும் மேட்டர் கொஞ்சம் சீரியஸா இருந்ததாலயும் கொஞ்சம் சலிப்பு வந்திருந்தது.

- மதுவதனன் மௌ. -

 

மு.கு: இந்த இடுகையை வாசிக்க முன்னர் சந்தியாவுக்கு ஒரு காதல் கடிதம் - ஆகாஷ் எனும் இடுகையை வாசியுங்கள்

சந்தியா ஆகாஷூக்கு பதில் கடிதம் எழுதுறாள். அதுவும் ஆகாஷினுடைய கடிதம் போலவே கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது.



அன்புள்ள ஆகாஷ்,

பின்வரும் ஆம் / இல்லை கேள்விகளுக்கு விடை தருக.

1. வகுப்பறையில் நுழையும் ஒருவர் சாதரணமாக, முதல் வரிசையில் இருக்கும் ஒருவரைப் பார்ப்பார்.

  1. ஆம்
  2. இல்லை
2. ஒரு பெண் சிரித்தவாறே ஒருவரைப் பார்த்தால் அது தற்செயலானதாய் இருக்க முடியாதா?
  1. ஆம்
  2. இல்லை
3. பாடும்போது ஒருவர் பாடல் வரிகளை மறந்தால், அவர் பாடுவதை நிறுத்துவார்.
  1. ஆம்
  2. இல்லை
4. நான் என் பெண் நண்பிகளுக்கு எனது சிறு வயதுப் புகைப்படத்தைக் காட்டும்போது நீ உன் மூக்கை நுழைத்தாய். சரியா?
  1. ஆம்
  2. இல்லை
5. பேருந்தை தவறவிட்டு ஏறும்போது ஏன் நான் உன் கையைப் பிடிக்கவில்லை என்பது இப்போது உனக்கு விளங்குகிறது.
  1. ஆம்
  2. இல்லை
6. எனது தோழி அஞ்சலிக்காக நான் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
7. ஒரு நண்பனாக உன்னை எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுதியிருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
8. நீ உனக்கு தாமரைப்பூ, வாழைப்பூ மற்றும் தேங்காய்ப்பூ எல்லாம் பிடிக்கும் என்று கூறினாய்.
  1. ஆம்
  2. இல்லை
9. ஓ..அன்று உனது பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயிலில் காணக்கூடியதாக இருந்ததா! நான் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவது உனக்குத் தெரியுமா?
  1. ஆம்
  2. இல்லை
  • இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ ஆம் என்று பதிலளித்தால், நான் உன்னைக் காதலிக்கவில்லை.
  • இல்லை என்று பதிலளித்தால் காதல் என்றால் என்ன என்று இன்னும் நீ விளங்கிக் கொள்ளவில்லை.
எல்லாம் தெளிவடைந்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

உன் நண்பி,
சந்தியா.

 



கல்லூரிப் பையன் ஆகாஷ் தனது வகுப்பு நண்பி சந்தியாவுக்கு வித்தியாசமான வடிவத்தில ஒரு கடிதம் எழுதுறான்.



என் அன்புள்ள சந்தியா,

கீழே உள்ள வினாக்களுக்கு விடை தருக.
அ. இற்கு 10 புள்ளிகள்
ஆ. இற்கு 5 புள்ளிகள்
இ. இற்கு 3 புள்ளிகள்

1. நீ எப்போது வகுப்பறைக்குள் வந்தாலும், உன்னோட பார்வை என்மேலயே இருப்பது ஏன்?
அ. காதலினால்
ஆ. உன்னால என்னைப் பாக்குறதைக் கட்டுப்படுத்த முடியவில்லை
இ. உண்மையாகவா!!! நான் அப்படிச் செய்கிறேனா?

2. ஆசிரியர் ஏதும் சொன்னால், நீ சிரித்துவிட்டு என்னை நோக்கித் திரும்பிப் பார்ப்பது ஏன்?
அ. நீ எப்போது சிரித்தபடியே என்னைப் பார்க்க விரும்புகிறாய்
ஆ. எனக்குப் பகிடி பிடிக்குமா என நீ சோதிக்கிறாய்
இ. நீ எனது சிரிப்பில் ஈர்க்கப் பட்டிருக்கிறாய்

3. நீ ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும்போது, நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும் பாடுவதை நிறுத்தியது ஏன்?
அ. எனக்கு முன்னால பாட உனக்கு நாணம்
ஆ. நான் வந்தது உனக்கு ஏதோ தாக்கம்
இ. எனக்கு உன்னோட குரல் பிடிக்குமா பிடிக்காதா என்ற பயம்

4. நீ உன்னோட குழந்தை வயதுப் புகைப்படத்தை தோழிகளுக்குக் காட்டும்போது, நான் கேட்க நீ தராமல் மறைத்தது ஏன்.
அ. உனக்கு வெட்கம்
ஆ. உனக்கு கூச்சம்
இ. ஏனென்று புரியவில்லை

5. நீ பேருந்தைத் தவறவிட்டு ஓடி வந்து ஏறும்போது நான் கையைக் கொடுத்தும் நீ எனது நண்பனின் கையையே பிடித்து ஏறியது ஏன்?
அ. நான் குழப்பமடைவதை ரசிப்பதற்கு
ஆ. எனது கையை பிடித்து ஏறி பின்னர் உன்னால் விலக முடியாது என்பதால்
இ. ஏனென்று புரியவில்லை

6. நேற்று நீ பேருந்திற்காகக் காத்திருந்து அது வந்தும்கூட நீ ஏறவில்லை. ஏன்?
அ. நீ எனக்காகக் காத்துக்கொண்டிருந்தாய்
ஆ. என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த படியால் தவறவிட்டுவிட்டாய்
இ. பேருந்து சனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது

7. உனது பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்திருந்தபோது என்னை நீ அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாய். ஏன்?
அ. நான் உனது கணவனாகப்போகிறவன் ஆகையால்
ஆ. உனது பெற்றோர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ அறியவேண்டும் போல இருந்ததால்
இ. ஏதோ என்னை அறிமுகப் படுத்தவேண்டும் போல் இருந்தது

8. நான் ஒரு நாள் எனக்கு பெண்கள் ரோஜா அணிவது பிடிக்கும் என்றவுடன், அடுத்தநாள் நீ தலையில் ரோஜாவுடன் வந்தது ஏன்?
அ. எனது விருப்பத்தைப பூர்த்தி செய்ய
ஆ. ரோஜாவை உனக்கும் பிடிக்கும்
இ. ஏதேச்சையாக நடந்தது

9. எனது பிறந்தநாள் அன்று நீயும் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்தாய் ஏன்?
அ. என்னோட சேர்ந்து நீயும் கடவுளை கும்பிட வேணுமென்று
ஆ. யாரும் என்னைச் சந்திக்க முதல் நீயே என்னை சந்திக்க வேண்டும் என்பதால்
இ. நீ என்னை கோயிலில் வாழ்த்த வேணுமென்று உளமார விரும்பினாய்

  • 40 இற்கு மேல் புள்ளிகள் வந்தால், நீ என்னை காதலிக்கிறாய்.
  • 30 – 40 இற்குள் புள்ளிகள் வந்தால் காதல் உனது இதயத்தில் உள்ளது எப்போது வெடிக்கும் எனத் தெரியாதவாறு.
  • 30 இனைவிட புள்ளிகள் குறைவெனின் நீ என்னைக் காதலிப்பதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளாய்.
சந்தியா, உன்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே இருக்கிறேன்.

என்றும் பிரியமுள்ள,
ஆகாஷ்


சந்தியாவிடமிருந்து பதில் வந்ததா? அல்லது அவள் நேரடியாகத் தன் காதலைச் சொன்னாளா? எதிர்பாருங்கள் அடுத்த பதிவில்

 

கல்யாணத்திற்கு முன்னரும், கல்யாணத்திற்குப் பின்னரும் எப்படி ஆணும் பெண்ணும் இருப்பார்கள் என்பதை அறிய விருப்பமா? கீழே வாசியுங்கள்...


க.மு இருக்கிறது, சரி க.பி எங்கே எனத் தேடவேண்டாம். அப்படியே கீழிருந்து மேலே வாசியுங்கள். அவ்வளவுதான்.

அனுபவப் பட்டவர்கள் இதன் உண்மைத் தன்மையையும், அனுபவிக்கப் போகிறவர்கள் ஏதாவது தீர்வுகளையும் பின்னூட்டங்களில் வீசிச் செல்லாம்

 

சில வேளைகளில் உங்க பெண்தோழி(அதாங்க கேர்ள்பிரண்ட்) எதுக்கெடுத்தாலும் கூச்ச சுபாவமா இருந்து அந்த தோழியுடனான நட்பு உடைஞ்சு மனமொடிஞ்சு போயிருங்கிறீங்களா? வாங்க எப்படி அப்படிப்பட்ட பெண்களுடன் நட்பை நீடிக்கச் செய்யிறது என்று பார்ப்போம்.

1. முதல்ல எந்தெந்த வகையான் கூச்ச சுபாவம் உங்க தோழிக்கு இருக்கு என்று கணித்துக் கொள்ளுங்க.

  • நீங்க கதைக்கும்போது உங்க தோழி பயந்த மாதிரி இருந்தா அல்லது பின்னாடி பின்னாடி போனா அல்லது வேறெங்கோ பார்த்துக்கொண்டு கதைத்தா தோழி 'கதைத்தலுக்கு கூச்சம் உடையவர்'.
  • உங்களோடு சரளமாக கதைக்கிறா, ஆனா தனது கடந்தகாலம் பற்றி மூச்சுகூட விடுவதாக இல்லை எனின் தோழி 'வெளிப்படையா இருக்க கூச்ச சுபாவம் உடையவர்'. இதன்போது நீங்க, உங்க தோழி தான் யார் என்பதை மறைப்பது போல உணர்வீர்கள். ஆனா உங்க தோழியின் கடந்த காலத்தில அவ சிலவேளைகளில் எங்காவது காயப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி கதைக்க அவ பயப்படலாம்.
  • நீங்க உங்க தோழியை தொடும்போது அவ பின்வாங்கினாலோ அல்லது எதிர்மறையான சமிக்ஞை (அதாங்க சிக்னல்) யை காட்டினாலோ, தோழி 'உடல் ரீதியா கூச்ச சுபாவம் உடையவர்'.
2. ஏன் உங்க தோழி கூச்ச சுபாவமுடையவர் என ஆழ்ந்து சிந்தியுங்கள். அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். காரணத்தை அறிந்த பின் தோழியுடன் அதைப்பற்றி கதையுங்கள்.

3. உங்க தோழி பயப்படாத வகையில் மென்மையா கதையுங்க(முரட்டு ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்பதெல்லாம் கப்ஸா. சினிமாவுக்குத்தான் பொருந்தும்).
  • நீங்க உங்க காதலை தோழியிடம் வெளிப்படுத்தப் போறீங்க என்றால் ரொம்ப ஜாக்கிரதையா, நீங்க கதைக்கிற நேரம் சரியானதா, அவ நீங்க கதைக்கிறதில ஆர்வமா இருக்கிறாரா, அவ பதிலளிக்க விரும்புகிறாரா என்றெல்லாம் அவதானியுங்கள்.(இந்த ஜட்ச்மெண்ட் பிழைச்சா அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க.)
  • உங்கமேல பழிபோடாத வகையிலும், உங்க மனநிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவாறும் ஒரு கேள்வியோட உங்க உரையாடலை ஆரம்பியுங்க. "ஏன் நீங்க என்னோட கதைக்கிறதே இல்லை?" போன்ற அல்பமான கேள்விகளை விடுத்து "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?" என்று கேட்பது நலம்.
4. தோழியோட நம்பிக்கைக்கு பாத்திரமானவரா இருக்க முயற்சி பண்ணுங்க. (முயற்சியே ஒழிய நாடகமெல்லாம் போட்டு நடிச்சுடாதேங்க. பின்னாளில் ரொம்ப பாதிச்சுடும்.)
  • வெளிப்படையாவும், உண்மையாவும் கதையுங்க. நீங்க பின்பால் (Pinball) விளையாடியிருக்கிறீங்களா? அதிலுள்ளதுபோல இந்த வகையான் உரையாடல் உங்களுக்கு போனஸ் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்.
5. நீ்ங்க இருவரும் உரையாடல்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபின், தொடுகைரீதியான உறவுக்கு போங்க. மென்மையாகவும், அரவணைப்புடனும், நேர்மையுடனும் தோழிய நெருங்குங்க. அவங்களோட முன்னங்கையை மெதுவாகப் பிடித்து நல்ல விடயங்களை பற்றி, உங்க எதிர்காலம் பற்றி ரொம்ப உரையாடுங்க.

6. இதுக்குமேல என்னங்க? தோழியோட நல்ல வாழ்கையை ஆரம்பிச்சாச்சு. சந்தோசமா இருங்க.


பி.கு:
  1. உங்க தோழியோட பெயர் ரம்யாவா இருக்கப்போய் "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?"ன்னு கேட்டு காரியத்தை கெடுத்துடாதீங்க. சந்தியான்னு வர்ற இடத்தில உங்க தோழியோட பெயரை போட்டுக்கோங்க. :)
  2. இந்த ஆறு படிமுறைக்கப்புறம் அதாவது திருமண வாழ்க்கையில பிரச்சினை ~X( வர்றப்போ "எங்கடா அந்த பயல் கௌபாய்மது, நம்பள மாட்டிவிட்டுட்டானே"ன்னு கூச்சல் போடாதீங்க.
  3. இந்த அட்டு பிகருக்கு என்னென்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு:pன்னு ஆஹா எப்.எம்ல வர்ற விளம்பரம் மாதிரி feel பண்ணாதீங்க.