நா

தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 100 கிராம்

மாவு 1/2 கிலோ
தே.எண் or ம.க.எண் 1/2 போத்தல்
உப்பு 1 மே கரண்டி
காலிமிரிஸ் 3 தே.கரண்டி
பெ,சீரகம் 1 தே.கரண்டி
கறிவேப்பிலை 15 நெட்டி

உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ள வேண்டும். மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலக்க வேண்டும். ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழைக்கவேண்டும். அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கள். பிளாஸ்ரிக் மூடி (வடையளவு) ஒன்றை எடுத்து அதன் மேல் துளி எண்ணை பூசி உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும். (சாமான்கள் போடும் போத்தல்களின் மூடி நல்லது) உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி.

அண்ணா வடை சுடுகிறார்.

பி.கு : பதிவர் சந்திப்பு இரண்டின்போது வழங்கப்பட்ட பருத்தித்துறை வடையை அம்மாதான் செய்வதாக இருந்தா. ஆனால் அவசரமாக ஊர் செல்லவேண்டிய தேவை அம்மாக்கு. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு இறுதியில் நாங்கள் செய்வதாக முடிவெடுத்தோம். தொடரூந்திற்கு நேரம் நெருங்கி விட்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக அம்மா ஒரு காகிதத்தில் எழுதித்தந்ததுதான் இந்த வடை சுடும் முறை. வடைசுடுவதில் நான் பங்கெடுக்கவில்லை அந்தப் பதிவர் சந்திப்பின் அதிகார பீட உறுப்பினர்களில் ஒருவராக நான் இருந்ததால் வேலை அதிகம் இருந்தது. அண்ணா மதுவர்மன்தான் பங்கெடுத்தார்.

இந்த வடை சுடும் முறையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது சந்தோசமும், சிரிப்பும் வரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

பதிவர் சந்திப்பு
இந்த முறையும் பதிவர் சந்திப்பு மிக நேர்த்தியான முறையில நடாத்தப்பட்டிருக்கிறது. கடந்ததை விட சந்தித்தத அனைவருக்குமிடையில் ஏதோ ஓர் ஒற்றுமை சம்மந்தப்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது. ஆனாலும் சந்திப்பின் இறுதியில் பதிவர்கள் தமக்குள் கலந்துரையாடவென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் பதிவர்கள் அவ்வளவாக அளவளாவவில்லை. செய்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அடுத்த அதிகார மையம் இதனைக் கவனிக்குமா?
காவற்துறையும் கூட்டங்களும்
பதிவர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளை காவற்துறை வந்திருந்து. சிஐடியும் வந்திருந்தது. நிச்சயமாக யாரோ ஒருவர் எமது சந்திப்புக் குறித்து அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வந்தவர்கள் தமிழ் ஆக்கள் சந்தித்துக் கதைப்பதில் கூட ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே. சிவப்புத் துண்டு பக்காவாத்தான் அசையுது.
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
வெற்றி TV
இலங்கையில் ஒளிபரப்பாகும் வெற்றி TV இற்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் TBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனியே சினிமா பாடல்களும் படங்களுமாக மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் அதே பாடல்கள்.
இஸ்லாம் - கிறிஸ்தவம்
இணையத்தில் உலவும்போது சுவாரசியமாக இருந்தது. மேலதிகமாக வாசிக்கவில்லை. இஸ்லாம் - கிறிஸ்தவம் - யூத மதஙகள் மூன்றும் பல ஒரே இயல்புகளைக் கொண்டிருக்குதாம். இஸ்லாம் - கிறிஸ்தவ மதப் பெயர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
பட உதவி http://pagentsprogress.com

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

கொலைக் காற்று - 04


கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்

********************************************************

கௌதம் அரண்டு படுத்துக்கொண்டான். தலையை லேசாகத் திருப்பி கௌதமை கலக்கத்துடன் பார்த்தாள் வர்ஷா. ஜன்னலூடான நிலா வெளிச்சத்தில் கண் திறந்திருக்கிறானா, மூடியிருக்கிறானா என்றே தெரியவில்லை. சிறிது நேரம் நின்று திரும்பி கௌதமையே பார்த்தாள். ம்ஹீம். கௌதம் தூங்குவதுபோல்தான் அவளுக்கப் பட்டது. சூடான மூச்சை ஆறுதலாக விட்டபடி அறைக்கதவைத் திறந்தாள் வர்ஷா.


"ஏன் இங்க வந்தாய்?" கண்கள் சுருக்கியபடி கேட்டாள் வர்ஷா.

"SMS அனுப்பீட்டுத்தான வந்தனான்" குரலில் எகத்தாளம் தொனித்தது.

"ஏன்? ஒரு கிழமை தொல்லை குடுக்காமத்தான இருந்தனீ. இப்ப என்ன வேணும் உனக்கு? நாங்கள் இங்க ஹோட்டல்ல தங்கியிருக்கிறது எப்பிடித் தெரியும் உனக்கு? உன்னை வரவேண்டாம் எண்டு SMS செய்தனான் இல்ல" கேள்விகள் எல்லாம் குழப்பமான குரலில்.

"ஒரு கிழமையே பெரிய விசயம் வர்ஷா. எப்பிடி புது மாப்பிளை? நல்லாக் களைச்சுப்போய் படுத்திருக்கிறார் போல. ம்ம்ம்... நைட்டியில உன்னைப் பார்த்தபடியே சாகலாம் போல." தலையை ஆட்டியபடி உதட்டைப் பிதுக்கினான்.

வர்ஷா கலக்கத்துடன் கோபமாய்ப் பார்த்தாள்.

"சரி, கொழும்பு வந்து வீட்ட தங்காமல் என்ன இது ஹோட்டல்ல?" கண்களைக் குறுக்கியபடி கேட்டான்.

"அது உனக்குத் தேவையில்லை. போலீசோட சகவாசம் வச்சிருக்கிற உனக்கு நாங்கள் இங்க தங்கியிருக்கிறது தெரிஞ்சிருக்கும் எண்டு யோசிச்சனான். வந்திட்டாய். உனக்கிப்ப என்ன வேணும்?"

"வேற என்னத்தக் கேக்கப்போறன் வர்ஷூ. நீதான். நான் உன்னைப் பிரஷ்ஷாக் கூட ஆசைப்படேல. ஒரே ஒரு முறை."

"விது... இது தப்பு விது. நான் உன்னைப் ப்ரண்டாத்தான் நினைச்சனான். நீ இப்பிடி ஒரு நிலைமைக்குக் கொண்டு வருவாய் எண்டு நான் யோசிக்கவே இல்லை. பார் இப்ப அந்தாளுக்குத் தெரியாம உன்னோட களவாய் கதைத்துக்கொண்டு. நீயெல்லாம் ஒரு மனிசனாடா விது." கிட்டத்தட்ட அழுதிருந்தாள் வர்ஷா.

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"பார் அவன. பொறின் காரன் எண்டா கோப்பிறேற் பண்ணுவீங்கள் போல. எங்களுக்கு மாட்டீங்களோ."

வர்ஷாவுக்கு கண்கள் நிரம்பியிருந்தன.

"யே... முதல்ல கண்ணைத் துடை. அழகான பெண்கள் அழக்கூடாது."

சிறிது நேரம் யோசித்தவன்... "போட்டோ கொண்டு வந்திருக்கிறன்."

"எத்தனை தரம்தான் அதைக்காட்டிப் பயமுறுத்துவாய் விது. உந்தப் போட்டோவைப் பாக்கேக்க எல்லாம்.. சீ.. தூ.. ப்ரண்சிப்பையே கொச்சைப் படுத்தின நீயெல்லாம் ஒரு மனிசனா? றிப்புக்கு போன இடத்தில லேடீஸ் பாத்ரூமுக்குள்ள இருந்து நீ வெளியில வரேக்கயே யோசிச்சிருக்கோணும். நான் ப்ரண்சிப்பை நம்பினன் விது. ஏன்டா இப்பிடிப் போட்டோ எடுத்து வெருட்டுறாய்?"

"வர்ஷூ.. இது அந்தப் போட்டோ இல்ல. இது வேற. அந்தப் போட்டோக்களை இப்ப ஞாபகப் படுத்தாத. சே... அந்தப் போட்டோக்களில் நீ என்ன அழகடி. உனக்காகச் செத்தாலும் பரவாயில்லை. சரி விடு. அந்தப் போட்டோக்களை நினைச்சாலே ஹார்ட் உதறுது. ம்ம்ம்... இது வேற போட்டோ வர்ஷூ"

"முதல்ல வர்ஷூ எண்டு கூப்பிடுறத நிப்பாட்டு. அத விட வேற என்னடா போட்டோ வச்சிருக்கப்போறாய். வேற எங்கயும் அதேபோல எடுத்தியா?"

"இல்லை வர்ஷூக்குட்டி" சிரித்தான்.

"ஏன்டா.. வேண்டாம் நீ வர்ஷூ எண்டே கூப்பிடு"

"இது... உன்ர ஆளின்ட போட்டோ. பார் ஆளை. திருப்தியாய் நித்திரை கொள்ளுறான். என்னைத்தான் இப்பிடி அலையவிடுறாய்".

"என்ன. அவற்ர போட்டோவா?" இமைகளைச் சுருக்கியபடி சந்தேகமாய்க் கேட்டாள் வர்ஷா.

"போட்டோவைப் பார். பிறகு சந்தேகப்படு. இந்தா போட்டோ" காகோ டவுசரிலிருநத பெரிய பொக்கற்றிலிருந்து எடுத்துக் கையில் அழுத்தி வைத்தான் விது.

என்வெலப்பிலிருந்து போட்டோவை வெளியிலெடுத்தவளுக்கு வெளிச்சம் போதவில்லை.

"சுவருக்கு இந்தப்பக்கம் வெளியில வா வர்ஷூ. போன் டோச் இருக்கு பார்". போனை வெளியிலெடுத்தான்.

புகைப்படத்தில் ஜெனியில் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

நிமிர்ந்து விதுவை கோபமாகப் பார்த்தவள்... "இதில என்ன இருக்கு? அதுக்கு முதல் இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?"

"எப்பிடிக் கிடைச்சது எண்டது மாட்டர் இல்லை வர்ஷூ. போட்டோவைப் பாத்தியா. ஆரார் நிக்கிறதெண்டு?"

தலையச் சிறிது சரித்தவள்... "தெரீது. கௌதமும் ஜெனியும்"

"என்ன வர்ஷூ. சிம்பிளாச் சொல்லுறாய். கௌதம் ஜெனியை காதலிச்சது தெரியுமா? பிறகு அனுபவிச்சு ஏமாததிப்போட்டு இப்ப உன்னோட... இதை சிம்பிளா எடுக்கிறியே" குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது.

"இப்ப என்ன சொல்ல வாறாய் வி்து? கௌதம் ஜெனியை ஏமாத்திட்டு என்னோட இருக்கிற மாதிரி, நான் கௌதமை ஏமாத்திட்டு உன்னோட வரவேணுமா?"

"நீ படிச்சவள் வர்ஷூ. டக்கெண்டு விளக்குது. அதுவும் நான் என்னோட வரச்சொல்லிக் கேக்கேல. ஓரே ஒரு நாள். நீ என்னோட வந்தாலும் தப்பில்ல. நியாயம்தான் எண்டு காட்டத்தான் இந்தப் போட்டோ."

"விது... கௌதம் ஜெனியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பொறின்ல லவ்பண்ணினது பற்றியும் சொன்னவர். ஆனா அவர் ஜெனியை மோசமா ஏமாத்தேல. இந்தப் போட்டோவ முதல்ல சுருட்டிப் பொக்கற்றுக்குள்ள வை. அது சரி இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?" சந்தேகம் தொனித்தது.

விதுவின் முகம் சுரத்தை இழந்திருந்தது... "வர்ஷூ... நீ புது மாப்பிளை சொல்லிற எல்லாத்தையும் நம்புறாய்."

"விது. யோக்கியம் கதைக்கிறியா... அதை விடு. இந்தப் போட்டோ எப்பிடிக்கிடைச்சது?"

"எப்பிடிக்கிடைச்சா உனக்கென்ன?"

"விது... உனக்கு போலீஸ் சகவாசம் இருக்கெண்டு தெரியும். ஆனா இந்தளவுக்கெண்டு தெரியாது. இண்டைக்கு காலமை இன்ஸபெக்டர் சூர்யபிரகாஷ் இங்க வந்தவர். இந்தப் போட்டோவைக் காட்டி கௌதமோட ஏதோ கதைத்துக்கொண்டிருந்தவர். நான் கிட்டப் போனதும் கௌதமை மறச்சுக்கொண்டு ஜெனியை மட்டும் காட்டினவர். இந்தப் போட்டோவைப் பற்றி நான் கௌதமோட பிறகு கதைக்கிறன். உனக்கெப்பிடி இது கிடைச்சது?" கண்களை நேரே பார்த்தாள் வர்ஷா.

"தெரியுதில்ல... அதை விடு. உன்ர மற்றப் போட்டோக்கள் என்னட்டத்தான் கிடக்கு. உலகம் இன்ரர்நெற், ஈமெயில் எண்டு சுருங்கி வேற கிடக்குது." குரலில் ஏளனம் தொனித்தது.

 பெருமூச்செறிந்தாள் வர்ஷா... "நடக்காத விசயங்களுக்கு மினக்கடாதே விது. என்னையும் கௌதமையும் சுற்றி ஏதோதோ நடக்குது. ஜெனி... சேகர்..."

"எனக்கென்னவோ, புதுப்பொண்டாட்டி ஆசையில ஜெனியை கௌதம்தான் போட்டுத்தள்ளியிருப்பான் போல" நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் விது.

"விது. விசர்க்கதை கதையாதே. நாங்கள் கண்டியில இருந்தனாங்கள் அப்ப"

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"விது... இனியும் என்னால நிக்கேலாது. அவர் எழும்பிடுவார்."

"ஓரே ஒரு நாள் வர்ஷூ.  அதுக்குப் பிறகு உனக்கு இந்தப் பயமெல்லாம் இருக்காது."

"அது நடக்காது. நான் போறன்."

"ம்ம்ம்.. பார்ப்போம். நீ என்ர ப்ரண்ட் எண்டபடியாத்தான் இதுவரை அந்தப் போட்டோக்களை வெளியில விடேல. இப்பிடியே தொடர்ந்து இருக்கமாட்டேன் வர்ஷூ"

"தூ.. ப்ரண்ட் எண்டு சொல்லாத"

"சரி போ போ... அவர் எழும்பீடப்போறார். இந்தக் ஹோட்டல்ல கீழ் புளோரில 23 ஆம் நம்பர் ரூமிலதான் நான் இருக்கிறன். எப்பவும் எவைலபில். ஓகேயா"

"சரி போ போ" பல்லைக் கடித்தாள் வர்ஷூ.

***************************************************


அறைக் கதவை மெதுவாகச் சாத்தியவள்,  பாத்ரூம் கதவை சிறிது சத்தத்துடன் திறந்து உள்ளே சென்றாள். நிறைக் கலக்கங்கள் வந்து போயின. விது, றிப் போட்டோ, இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ், கௌதம், ஜெனி, மீண்டும் போட்டோ.. நிறையக் குழப்பங்களுடன் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு கட்டிலில் படுத்தாள் வர்ஷா.

கையை மேல போட்ட கௌதம்... "என்ன குட்டியா? உடம்புக்கு ஏதாவது?"

"ஓண்டுமில்ல கௌதம். பாத்ரூம் போய் வந்தனான்"

"படுக்கேக்கதானே பாத்ரூம் போய் வந்தனாங்கள்" சிரித்தபடி கேட்டான் கௌதம்.

"சும்மா இருங்கோ.. அதுக்கு.. இதெல்லாம் என்ன சொல்லிவச்சா வரும்"

"ஏன் குட்டியா சலிக்கிறாய். நல்லாக் கஷ்டப்படுத்தீட்டனா?"

"இல்ல கௌதம். எல்லாத்தையும் நினைக்கக் குழப்பமாக் கிடக்குது. ஜெனி, சேகர்..."

"ஆரம்பிச்சிட்டியா.. ஜெனியும் சேகரும் என்ர பிரண்ட்.. நான் எல்லாம் சொல்லியிருக்கிறன்.. கவலைப்படவேண்டியது நான்... நானே குழப்பமில்லாம இருக்கிறன்...." இழுத்தான் கௌதம்

"அதுதான் எனக்குக் குழப்பமாக் கிடக்குது கௌதம்..."

கட்டிலில் இருந்து எழுந்தே விட்டான் கௌதம். 

"நீ என்ன சொல்ல வாறாய் வர்ஷா? "

*************************************************************

கட்டிலில் என்ன நடந்தது? மறுநாள் என்ன நடந்தது? இனி லோசனின் கைகளில்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை வரும் எண்டில்லை. ஆனால் வந்தால் என்ன செய்யிறது? எங்கேயோ ஒரு சந்தர்ப்பத்தில உங்களுக்கும் உதவும் எண்டு சொல்லி வைக்கிறன். அல்லது இந்தத் தீர்வை வேற ஒரு சந்தர்ப்பத்தில நீங்கள் பாவிக்கக்கூடியமாதிரியும் இருக்கும்.

என்னெண்டா அண்டைக்கு வேலைத்தளத்தில் Gmail இல் Buzz ஐப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய பஸ் வந்தது. கீழே சாடை மாடையாப் போட்டிருக்கிறன். சொடுக்கிப் பாருங்கோ.





அந்த மேலே உள்ள பஸ் NSFW. அப்ப வீட்டில வச்சுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமோ எண்டெல்லாம் கேக்கக்கூடாது.

பார்த்துக்கொண்டிருந்தது வேலைத்தளத்தில். பக்கத்ததில், பின்னால எல்லாம் வேலை செய்யிறாக்கள் இருக்கினம். பொம்புளைப் பிள்ளைகளும் இருக்கினம். படாரெண்டு கீழே ஸ்குரோல் செய்திட்டன். (மேசைக்குக் கீழே குரோள் செய்யேல). அதையும் சொடுக்கிப் பாருங்கோ கீழே.




கொடுமை. Gmail காரன்கள் இன்பொக்ஸூக்குத் திருப்பிப் போகவோ அல்லது Buzz இல் இருந்து வெளியில வரவோ ஒரு வழியும் வைக்கேல. மேல ஸ்குரோல் செய்துதான் போகவேணும். மேல ஸ்குரோல் செய்தால் ஹீ ஹீ.

என்ன செய்யலாம்? உடனே நான் செய்தது. மேல Address Bar இல் உள்ள buzz என்பதை inbox என்று மாற்றிவிட்டு Enter செய்ததுதான். :)

https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#buzz இனை
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#inbox என மாற்றிவிட்டு Enter செய்தேன்.

உங்களுக்கும் எங்கேயாவது உதவும். சும்மா குறிச்சு வச்சுக்கொள்ளுங்கோ.


பி.கு : அசோக்பரனின் பெயரில் சொடுக்கியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
inbox ற்குப்பதிலாக mbox என்றுபோட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
பிறகுதான் பார்த்தேன் gmail shortcut 'g then i' இனைப் பாவித்திருந்தாலும் நேரடியாக இன்பொக்சுக்குப் போயிருப்பன்.

பதிவில போட்டுப் பப்ளிக் ஆக்கியிருக்கிற பஸ்ஸை வேலைத்தளத்தில மட்டும் பாக்கேலாமப் போச்சோ உனக்கு, என்று கேட்பவர்களுக்கு - அது ஒரு அசையும் படம். படத்தைப் பார்த்தால் கொஞ்சநேரம் அசையாமல் நிப்பியள் :D

பிரியமுடன்,
மதுவதனன் மௌனசாமி - cowboymathu

 

நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..


முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
 பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05
லோஷனால் எழுதப்பட்ட கதைநிலாக்காதல் 06







< இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை
எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக்
கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.


டமார்....


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஏனிந்த ஸ்ரியரிங்க் இவ்வளவு பெரிதாய் என் கண்முன்னே என்று அபத்தமாய் யோசிக்கும் முன்னே கறுப்பு நிறமாய் எங்கோ தூக்கி வீசப்பட்டான். கிரீச்சிட்ட வாகனங்கள் பின்னே சாவகாசமாய் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தன. திரும்பிய லொறி சிறிது தூரம் தள்ளி ஓய்ந்து நின்றது. தூரத்துப் காவற்துறை
அதிகாரி ஒருவர் பாய்ந்து வந்தார். பின்னைய வாகனங்களில் இருந்தவர்கள் இறங்கிவந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர் அல்லது வேதனையைக் கொட்டஆரம்பித்தனர். அதன் பின்னைய வாகனங்கள் விபத்துப் பற்றிய பிரக்ஞையின்றி குறுக்கு வழியால் நகர ஆரம்பித்திருந்தன.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


லாவண்யாவின் செல்பேசி அமைதியாக கிணுகிணுத்தது. அங்கலாய்ப்புடன் எடுத்தாள். ஹரிஷிடமிருந்து அழைப்பு,


"ஹலோ... உங்கட மிஸ்ட்கோல் இதில இருந்தது. நீங்கள்?"


ஆங்கிலத்தில் கதைத்த குரல் சத்தியமாக ஹரிஷுடையதல்ல.


"நான் லாவண்யா... ஹரிஷின் பிரண்ட்... நீங்கள்?"


"ஹரீஷ்...?? ஹரீஷ் ஒரு விபத்தில மாட்டியிருக்கிறார். இப்ப அவரை கொழும்பு பொது மருத்துவமனையில கொண்டுவந்து சேத்திருக்கு. அவரோட அம்மாக்கு அழைப்பெடுத்தோம். தொடர்பு கிடைக்கவில்லை. பற்றரி போட்டபோது கடைசியாக உங்கட அழைப்பு இதில் இருந்தது அதுதான் எடுத்தோம்"


"ஓகே.. நான் அங்கே உடனே வருகிறேன்"


ஸ்ரீ அங்கிளுக்கு ஈனக்குரலில் எடுத்தச்சொன்னதும், இவளேன் இப்படிப் பதறுகிறாள் என்று ஸ்ரீ அங்கிள் யோசித்ததும், அதே காசா அல்லது கூட வருமா என்று டிரைவர் யோசித்ததும்... அவரவருக்கு அவரவர் கவலைகள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சக்தியெல்லாம் வடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான் சந்தோஷ்.


நான்... ஹரிஷ்... லாவண்யா... வீடு... அம்மா... வைஷாலி... என்று அபத்தச் சிந்தனைகளெல்லாம் இறுதியாவதை உணர்ந்தான்.


"ஆ.. மாத்தயாட bag இல லப்டொப் இருக்கா? அதைக் கொண்டுவா" சொன்ன சிஐடி சந்தேஷைப் பார்த்தான்.


லப்டொப்பில் ஏதும் இருக்குதா என்று மீண்டும் அபத்தமாகச் சிந்திக்கத் தலைப்பட்டான், அவர்கள் பிடித்ததுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனத் தெரிந்தும்.


லப்டொப்பைத் திறந்த சிஐடி தவிர மற்ற இருவரும் பார்த்த பார்வைகளே அவர்களுக்கு லப்டொப் அந்நியம் என்று தெரிந்தது. லப்டொப்பையும் தங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள்.


Hibernate இல் இருந்த லப்டொப் unlock கடவுச்சொல் கேட்டது.


"பாஸ்வேர்டைச் சொல்லு" ஒரு எகத்தாளத்துடன் கேட்டான்.


"சந்தோஷாலி... s, a, n, t, h, o, s, h, a, l, i"


....


"ஓகோ... எல்லாம் திறந்தபடியே இருக்கு. மெயில்.. பேஸ்புக்...ம்ம்ம்... ருவிட்டரும் பாவிக்கிறியோ? இதென்ன தமிழ்மணம், ஏதும் LTTE சைற்றா?"


மற்ற இருவரும் இன்னும் தங்களையும், லப்டொப்பையும் மாறிமாறிப் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.


bag இனை எடுத்து துழாவிய சிஐடியின் கையில் டயலொக்கின் டொங்கிள் (Internet broadband connection) அகப்பட்டது. சந்தோஷைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.


லப்டொப்பில் அடித்து இணைக்க வெளிக்கிட்டவனுக்கு டயலொக் டொங்கிள் வழமைபோலவே விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது. அங்கே இங்கே என்று இடத்தை மாற்றி இணைப்பை ஒருவாறு இணைப்பை எடுத்துவிட்டான்.


ஜிமெயிலில் சில சொற்களைப் போட்டுத் தேடிப்பார்த்தான். எதுவுமில்லை. பேஸ்புக்கை மேய்ந்தான். ருவிற்றருக்கு வந்தவன் ஆர்வமானான். சந்தோஷ் வெறுமையாக, எந்தவித பிரக்ஞையுமின்றி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஹரீஷ் இமைகளைப் பிரித்தபோது ஏகப்பட்ட கவலை ரேகைகளை முகத்தில் அப்பியபடி லாவண்யா நின்றிருந்தாள். கைகளை தூக்கும்போது வலி உயிர்போவதை உணர்ந்தான். தலையில் கட்டு.


"ஹரீஷ், சீரியஸ் இல்லை. அசையாம இருங்கோ. அம்மா வந்துகொண்டிருக்கிறா. பிரச்சினை இல்லை"


"சந்தோஷ் எங்கே?" கேட்டபின்தான் லாவண்யாவைப் பார்த்தான். அவனுக்கு என்ன உணர்ச்சியைக் காட்டுவதென்றே புரியவில்லை.


"ஓம்... சந்தோஷின் போன் வேலைசெய்யுதில்லை. நான் அவனுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறன். நீங்க அமைதியா படுங்கோ"


கண்களால் லாவண்யாவை கிட்ட வரச்சொன்ன ஹரீஷ், கிசுகிசுத்தான், "சந்தோஷ் கடத்தப்பட்டுவிட்டான், செய்தி கேக்கேலயா?"


"வாட்" என்றபடி அருகிலிருந்த கதிரையில் பொத்தென்று இருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


வைஷாலி....


லண்டனில் ருவிட்டிக்கொண்டிருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சந்தோஷின் ருவிற்றரில் சிஐடி ஆர்வத்துடன் மூழ்கியிருந்தான்.


"santhosh
@vaishali I wil find n send u once I reached office
3 hours ago via Echofon"


இதுதான் கடைசியாக சந்தாஷ் ருவீற்றியது. ஆனால் லைவ்வாக வைஷாலியின் ரூவீற்கள் வந்துகொண்டிருந்தன.


"vaishali
@santhosh where r u? send me immediately.
1 minutes ago via Web"

Twitter DM களைப் பார்த்தான். சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான். ஜீமெயில் உரையாடல்களைப் பார்ததான். மீண்டும் சிரித்தான். பேஸ்புக் அஞ்சல்களைப் பார்த்தான், சிரித்தான்.
கடைசியாக திறந்திருந்த பேஸ்புக் உரையாடல்கூட வைஷாலியிடமிருந்து.


"மாத்தயா... லவ்வு கலக்கலாய் இருக்கு.. பாரின் பொண்ணு.. போட்டோ இல்லையா" நக்கலாகக் கேட்டான். சந்தோஷுக்கு சிரிப்பதா அழுவதா புரியவேயில்லை.


திடீரென்று ஏதோ யோசித்தவனாக, லப்டொப்பில் கோப்புக்களை தேடினான் சிஐடி. பின்னர் இருவரிடமும் "இவனில எப்பெப்ப சஸ்பெக்ற் பண்ணினாங்கள், திகதிகளைச் சொல்லுங்கோ"


"போன மாதம் 17, 18 அதோட முந்தநாள்" மேசையிலிருந்த பேப்பர் துண்டொன்றைப் பார்த்துச் சொன்னான் மற்றவன்


அதே நாட்களில், குறித்த நேரங்களில் பேஸ்புக், ஜீமெயில், உரையாடல்கள், ரூவீற்றுக்கள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவனது செய்தி சேகரிப்புகளுடன் அவனுக்கும் வைஷாலிக்குமிடையான சமாச்சாரங்களே அதிகமாக இருந்தன.


நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்த அவன் "பையன்ல விசயம் இல்லைப்போல.. வேலையும் லவ்வுமாய்த்தான் மாத்தயா இருக்கிறார். அந்த திகதிகளில் மாத்தயா பாரின் பொண்ணோட விளையாடிக்கொண்டு இருந்திருக்குது. ரூவீற்ருக்கள் எல்லாம் Echofon இற்கூடாகத்தான் மாத்தயா செய்திருக்கு. லப்டொப்பிலயும் பெரிசா ஒண்டுமில்ல. பையனிலயும் விசயமில்லைப்போல.. சும்மா இரண்டு தட்டுத் தட்டிப்போட்டு ஒரு மணித்தியாலத்தால கொண்டுபோய் அந்த இடத்தில விட்டுட்டு வாங்கோ.. வார்ணிங்க் பண்ணிட்டு விடுங்கோ" என்றவன் சந்தோஷின் ருவிற்றரைப் பார்த்துவிட்டு கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தான்.


Echofon இல் தட்டச்சினான்.


"@vaishali I LOVE YOU MY DEAR VASHU KUTTI" send இனை அழுத்திவிட்டு சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான்.


சந்தோஷுக்கு என்ன நடக்குதெண்டு புரியவில்லை. லப்டொப்பில் என்னத்தைச் செய்கிறானே என்று கவலைப்படும் நிலையிலும் அவன் இல்லை.


சிறிது நேரத்தில் வந்த Twitter DM இனை திறந்தான் சிஐடி.


"vaishali Wot happnd2U santhosh.Thtz a public tweet.Plz rmov it.My acca's too in it.Plzzz :("


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


பின்னர் சந்தோஷ் வீடு வந்து சேர்ந்ததும், லாவண்யா தொடர்பு கொண்டதும், சந்தோஷ் மருத்துவமனைக்கு வர முயற்சித்ததும், ஹரீஷ் வரவேண்டாம் வீட்டிலேயே இரு என்றதும், லாவண்யாக்கும் ஹரீஸுக்குமிடையான அரும்புக் காதல் மருத்துவமனையிலேயே மலர்ந்ததும் (யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)
என்று நட்பு, காதல், சென்ரிமென்ட், புரிந்துணர்வு எல்லாம் கைகோத்துக் கலகலத்தது. சந்தோஷின் ருவிட்டர் கதைகேட்டு ஹரீஸும் லாவண்யாவும் லவீற்ற (love + tweet) ஆரம்பித்ததும் வேறு கதை.


- சுபம் -


மதுவதனன் மௌ | cowboymathu


(எல்லாம் இப்போதைக்குச் சுபமாக இருந்தாலும், இன்னும் நான்கு மாதங்களில் வைஷாலி லண்டனிலேயே இன்னொரு பையனை லவ்வப் போவதையும், சந்தேஷுக்கு டாடா காட்டப்போவதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்.)

 

சம்பவம் ஒன்று.

ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கியிருந்த நண்பன் ஒருவன் 'ஏதாவது நல்ல சண்டைப் படமாப் பாத்து ஆங்கிலப்படம் ஒண்டு போட்டுவிடு' என்றான். சரி சுவாசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கட்டுமே என்று Wanted படத்தைப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வந்திருந்தபோது படமும் முடிந்திருந்தது. 'எப்பிடிப் படம் இருந்தது, நல்லதா?' கேட்டேன். 'சூப்பர் படம், அதில ஒருத்தன் இருக்கிறான் அவன் சுட்ட புல்லட்டை திருப்பியும் துவக்கு குழாய்க்குள்ள எடுக்கிறான், நல்லா இருந்திச்சு' என்றான்.

படம் பார்த்தவர்கள் இருக்க மற்றவர்களுக்கு :- படத்தில் ஒருவனுக்கு பின் மண்டைக்குள்ளால் புகுந்து நெற்றியைத் துளைத்து முன்வரும் புல்லட்டை குறைந்த வேகத்தில் (slow motion) காட்டுவார்கள். பின்னர் அந்தப் புல்லட் எங்கிருந்து வந்தது எனக் காட்டுவதற்காக காட்சிகளைப் புல்லட்டை பிரதானமாக வைத்து பின்னோக்கிக் காட்டி அது எங்கிருந்து வந்தது என்பற்காக மீண்டும் புல்லட் துப்பாக்கிக் குழாயை அடைவதாக காட்டியிருப்பார்கள்.

சம்பவம் இரண்டு.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் இடது கையின் ஐந்து விரல்களிலும் நகங்களை வளர்த்து வைத்திருந்ததை பார்த்தேன். 'இடது கைவிரல்களில் நகம் வளர்ப்பது நல்லதல்ல, வெட்டி விடு' என்றேன் (அவன் வலது கைப்பழக்கம் உடையவன்). ஏன் எனறு என்னை வித்தியாசமாக நோக்கினான். 'இல்ல... இடது கையை மலம் கழுவப் பாவிக்கிறதுதான, சோப் போட்டுக் கழுவினாலும் நகம் இருந்தால் எச்ச சொச்சங்கள் இருக்க வாய்ப்பிருக்கு' என்றேன். 'சீ... நான் ரொய்லற் ஸ்பிரேயர் (toilet sprayer) மட்டும்தான் பாவிக்கிறனான், கை இல்லை' ஒரு புன் முறுவலோடு சொன்னான். 'ஓ... அப்படியா' என்றேன். வேறன்ன சொல்ல.

சம்பவம் மூன்று.

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது, வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும். அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’ எனக் கூற, அனைவரும் சிரித்தனர். அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு வரவில்லை.

அம்பிகா எனும் வலைப்பதிவருடையது.

*********

ஒரு சம்பவம் அர்த்தப்படுத்தப்படுவது அவரவர் புரிதல்களுக்கேற்பவே. ஆரம்ப அர்த்தப்படுத்தல்களில் தவறு கண்டுபிடிக்க முயல்வது சரியாகப் படுவதில்லை எனக்கு. ஊரிலிருந்து வந்த நண்பன் இன்னும் நான்கைந்து ஆங்கிலப் படங்களை பார்த்தால் தனது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறுவயது முதலே பெற்றோர்களால் இடது கைவிரல் நகங்களை வளர்க்காதே எனறு அறிவுறுத்தப்பட்ட நான் அதற்குள் மட்டுமே இருந்திருக்கிறேன் வெளியில் சிந்திக்காது. மூன்றாவது சம்பவத்தில் வரும் சிறுமியின் புரிதல் கவலைக்குரியது. வீட்டில் நடந்த ஏதோவொரு நிகழ்வு ஆழப்பதிந்திருக்கிறது அச்சிறுமிக்கு.

ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.

இச்சம்பவங்களின் புரிதல்களூடு மதங்களையும் அதன் அபத்தங்களையும் எழுதவேண்டும் என சிந்திக்கிறேன். பதிவின் போக்கு இன்னொரு நிலைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | கௌபாய்மது.

 

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

விளம்பரங்களால் மலிந்து கிடக்கும் உலகம் இது. விளம்பரங்களால் எவ்வளவு தூரம் வியாபாரம் அதிகமாக நடக்கிறது எனும் சந்தேகம் இன்னும் இருந்தாலும் அதீத விளம்பரங்களால் வெள்ளியையும் பிளாட்டினம் என்று சொல்லியே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.


மூன்று வாரங்களில் சிவப்பழகு(??) என்பதிலிருந்து எயிட்ஸை மூன்று நாட்களில் குணப்படுத்துவோம் வரை விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன். மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் பலன் தருவதை விட ஒரு வித பயத்தையே தருகின்றன.

கரீனா கபூர் தனது அழகின் இரகசியத்தை இதோ வெளிப்படுத்துகின்றார் என்று ஒரு புது Body Cream ஒன்றை அறிமுகப்படுத்துகின்றார்கள். கரீனாவுக்கே அன்றுதான் அப்படியொரு கீரீம் இருப்பதே தெரிந்திருக்கும் என்று கற்பூரம் அணைந்து சத்தியம் செய்யத் தயாராய் இருக்கிறேன். (கடவுளுக்குப் பயந்தல்ல, கற்பூரம் சுட்டாலும் பரவாயில்லை என்று).

சொப்பன ஸ்கலிதத்தால் உடல் மெலிந்து தள்ளாடுகின்றீர்களா? இதோ குறைந்த செலவில் இரண்டு நாட்களில் தீர்வு தருகின்றோம் என்று பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு.

இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே,


இதிலிருக்கும் பெண் மானநஸ்டவழக்கு (மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்) போட்டால் கூடக் குற்றமில்லை.

ம்ம்ம்... Body Cream க்கு என்ன தமிழ்? உடற்பசை ஏனோ ஒட்டுதில்லை.. :)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 

இந்த சூடு விழுகின்ற சங்கதிகளை இந்தியாவிலும், இந்தியச் சினிமாக்களிலும்தான் பார்த்திருக்கிறோம். இனி இலங்கையிலும் இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான் (??).

அவசரமாக காலி வீதிக்குப் போகவேணும் எண்டாலும் குறைந்தது 60 ரூபா அழவேண்டும் முச்சக்கரவண்டிக்காரர்களுக்கு. இந்தியா சினிமாவின் தாக்கத்தால் தமிழர்களிடையே ஆட்டோ என்ற சொல் பாவனையில் இருந்தாலும் இலங்கையில் திறீவீலர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சிங்களவர்களிடையே ஆட்டோ என்றால் அவர்களுக்கு விளங்காது.

குறைந்தது 60 ரூபா, கொஞ்சம் கூடத்தூரம் போனால் 100 ரூபா, வெள்ளவத்தையில இருந்து பம்பலப்பிட்டி முடிவுக்குப் போனால் 150 ரூபா என்று முச்சக்கரவண்டியில் இருந்து போகும்போது மனம் அமைதியாகப் போனதே கிடையாது. வழமையான முச்சக்கரவண்டி எனின் கதைச்சுப் பேசி குறைச்சுக்கொள்ளலாம். சிங்களத்தில அதுவும் கடினம். நான் கூடுதலாக நடைதான். காசும் மிச்சம் உடற்பயிற்சியும் ஆகுது.

மனசுக்குக் கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. தற்போது இலங்கையிலும் மீட்டர் போட்ட முச்சக்கரவண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. வழமையாக முச்சக்கரவண்டிகள் நிறுத்தத்தில இருந்து வீடுவாறதுக்கும் ஒரு காசு போட்டு, பிறகு போற இடத்துக்கும் அறாவிலையில (கொடுத்துப் பழகியதால் தெரிவதில்லை) காசு போட்டு அவன் இரண்டு மாசத்தில முச்சக்கரவண்டி வாங்கின காசை எடுத்துவிடுவான். இப்போது பரவாயில்லை. விளம்பரத்தைச் சுட்டிய மயூரேசனுக்கு குட்டி நன்றி.


சும்மா பகிடிக்குத்தான் யாராவது இதை உருவாக்கினார்களோ என்று கடைசியாக இருக்கிற அப்பிள் டக்ஸிக்கு தொலைபேசிக்கேட்டேன் இன்று.

சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். எனினும் விசாரித்துப் பார்த்தேன்.

உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.

ம்ம்ம்.. என் உடற்பயிற்சி குறையப்போகின்றது போல் தெரிகின்றது.

 

கேள்விகளினூடு தெளிவு பிறக்கிறது. கேள்விகளினூடு மாயைகள் உடைகின்றன. கேள்விகளினூடு எம் இருப்பிற்காக அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றோம். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அருவமானதை ஏன் அவன் என்கிறோம்? போன்ற கேள்விகள் இருப்பிற்கான தேடல்களுக்கு விடை தருகின்றன.

கேள்விகளினூடு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பதொருபுறம் இருக்க, எமக்குச் சார்பான விடைகளுக்காக கேள்விகள் கேட்பதும் எமது வளத்துக்கான படியாகின்து.

மனிதன் சமூக விலங்கு. வாழுமிடமெல்லாம் இன்னொருவருடனான தொடர்பாடல் தொடர்கின்றது. தொடர்பாடலில் வெற்றி பெறுவதில் தங்கியிருக்கிறது எங்கள் உயர்ச்சி. வீட்டில் அப்பாவிடம் காரணம் கூறி காசு பெறவும், பாதகமின்றி கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நேர்முகத்தேர்வொன்றில் வெற்றி பெறவும், நாடுகளுக்கிடையான பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான பதில்களுக்கான சரியான கேள்விகளே வெற்றிபெறச்செய்கின்றன.

* இலகுவான கேள்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
மொழிப்புலமை, அதியுயர் அறிவுத் திறமையான கேள்விகளை விடுத்து அடிப்படையான கேள்விகளிலிருந்து ஆரம்பியுங்கள்.

* ஒரு விடயத்தை அறிவதற்கான கேள்வியெனின், குறிப்பிட்டுக் கேளுங்கள்.
கணினி சம்மந்தமாக உங்களுக்கு என்னென்ன தெரியும் எனக்கேட்பதை விடுத்து, உபுண்டுவில் வேலை செய்திருக்கிறீர்களா, ஜாவா மொழி தெரியுமா, இணைய வடிவமைப்பில் எத்தனை வருடம் வேலை செய்திருக்கிறீர்கள் போன்றன உங்களுக்கான விடையை சிறப்பாகப் பெற்றுத்தரும்

* உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வி கேட்காதீர்கள்.
எதிராளியின் கேள்விகளோ அல்லது பதில்களோ சிலவேளைகளில் எம்மைப் பொறுமை இழக்கச் செய்யும், கோபத்தைத் தூண்டும். அந்நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கான விடையை இழைக்கும் சந்தர்ப்பம் இங்கே அதிகம்.

* கேட்கும் கேள்விகள் குறித்தான அறிவை இயலுமானவரை ஏலவே பெற்றிருங்கள்.
சாடைமாடையாக அறிந்ததை வைத்து கேள்விகள் கேட்காதீர்கள். இப்போது தொலைபேசி வரை இணையம் வந்துவிட்டது. கட்டாயம் அவ்விடயம் பற்றி கேள்வி கேட்கத்தான் வேண்டுமெனின் தொலைபேசியூடாக கூகுள் செய்யுங்கள். அறிவைப் பெறுங்கள். பிறகு கேளுங்கள்.

* அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுங்கள். எதிர்க் கேள்விகளுக்காக சிந்தியுங்கள்.
எதிராளிக்கு நீங்கள் அமையாக தோற்றமளிக்கும்போது, உங்கள் கேள்வியின் மீதான விடையை சிறப்பாகச் சொல்லவேண்டும் என்று மனநிலை உருவாகும். கேள்வி சம்மந்தமான நிறைந்த அறிவும் உங்களுக்கு இருப்பதான தோற்றைத்தை அது உண்டாக்கும். எதிராளியின் மறு கேள்விகளுக்காக இயலுமானவரை சிந்தித்துப் பதிலளியுங்கள்.

* பெருந்தன்மையோடு கேள்வி கேளுங்கள்
எதிராளியை கீழ்த்தரமாகவோ, கேள்விகுறித்தான அறிவற்றவராகவோ நினைக்கவேண்டாம். பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.



நீங்கள் கேட்கும் முறையான கேள்வியில்தான் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும்.

கணியனும், பரதனும் நண்பர்கள். இருவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் மதகுரு ஒருவரிடம் சென்றனர். கணியன் மதகுருவிடம் சென்று 'இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, புகைப்பிடிக்கலாமா?' என்று கேட்டதற்கு 'தவறு மகனே, இறைவனை தூய மனதுடன், தீய செயற்பாடுகளின்றித்தான் பிரார்த்திக்கவேண்டும்' என்றார். பின்னர் பரதன் அதே மதகுருவிடம் சென்று 'நான் புகைபிடித்துக்கொண்டிருக்கும்போது இறைவனைப் பிரார்த்திக்கலாமா?' என்று கேட்டதற்கு, 'தாராளமாக மகனே, இறைவனைப் பிரார்த்திப்பதற்கு காலநேரம் பார்க்கத் தேவையில்லை' என்றார்.

கேள்விகள் கேட்பதில், கேட்கும் முறையில் எம் வளர்ச்சி தங்கியிருக்கிறது.

பி.கு : பதிவு கேள்விகள் சம்மந்தப்பட்டாகையால், இலகுவான விளங்குகைக்காக குட்டிக்கதை மதம், இறைவன் சம்மந்தப்பட்டிருக்கிறது. இறைவன் இருக்கின்றது என்றோ, மதகுரு என்பவர் தூய்மையானவர் என்றோ, பிரார்த்திப்பதால் நாடும் வீடும் நலம்பெறும் என்றோ யாரும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டாம். அவை குறித்தும் கேள்விகளைத் தொடுங்கள். தெளிவு பெறுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ - கௌபாய்மது

 

உங்களுக்கு Badminton விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா? இப்போதுதான் ஆர்வப்பட்டுப் பழக ஆரம்பித்திருக்கின்றீர்களா? நானும் உங்களைப்போல்தான். கடந்த சில மாதங்களாக Badminton இல் ஆர்வப்பட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். மேற்பார்வையாளர் எவரும் இன்றி YouTube காணொலிகளைப் பார்த்தும், இணைய உதவிகளைக் கொண்டும் சிறிது சிறிதாகவாவது முறையாக விளையாடப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் தேடியபோது 4 GB அளவிலான 30 பகுதிகளைக்கொண்ட காணொலி Badminton வழிகாட்டி கிடைத்தது. ஆனால் அதைத் தரவிறக்க வேண்டியிருந்தது Torrent மூலமாக. என்னைப்போல் ஆர்வக்கோளாறில் முந்நூறு, நானூறு பேர் இருப்ப்பார்கள் போல. அவ்வளவு எண்ணிக்கையான peers ஆனால் பத்தோ இருபதோ seeders. தரவிறக்கவேகம் 3 kbps இனைத் தாண்டியதில்லை. 0.01 kbps இலும் வரும். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எனது மடிக்கணினியை இரவுபகல் பாராது இயங்கவிட்டு முழுமையாக இறக்கிவிட்டேன். முந்தநாள்தான் வெற்றியடைந்தேன்.

இப்போது நானும் ஒரு seeder. என்னால் தரவிறக்க வேகம் சிறிது அதிகரித்திருக்கும். சரி இவ்வளவு கஸ்டப்பட்டு இறக்கினோமே, அதில் பலனிருக்கிறதா என்று பார்த்தால்... ஆம் நிச்சயமாக.

மிக அருமையான ஒரு வழிகாட்டி. தயார்படுத்தல், கையிற்குச் செய்யவேண்டிய பயிற்சிகள், Badminton இன் ஆரம்ப முக்கிய கூறான footworks முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக விளங்கப்படுத்துகிறார்கள். இந்த வழிகாட்டி சீன மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் உபதலையங்கத்தைக் கொண்டிருப்பதால் விளங்கமுடிகிறது.

இப்போதெல்லாம் எனது அறையில் இந்த வழிகாட்டியைப் பார்த்து அதனைச் செய்து பார்க்கவிழைகிறேன். அறையின் மின்குமிழ் சிதறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் தெரிகின்றன. ஒரு Badminton bird இனைவிட மின்குமிழ் விலைகுறைவு என்பது கொசுறுத் தகவல்.

உங்களுக்கும் ஆர்வமிருக்கின்றதா? என்னைத் தொடர்பு கொள்வீர்களானால் அந்த முழுவழிகாட்டியினையும் தந்துதவமுடியும். இந்திய நண்பர்கள் தொடர்புகொண்டு "மாக்கா.. அப்பிடியே எனக்கு பார்சல் செய்யதுவிடு" என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

வாங்கோ செத்துச் செத்து விளையாடலாம்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

 

சரத் பொன்சேகா நாளைக்கு கூட்டத்தில பேசப்போறார் எண்டு இரவோடிரவா ஆரோ கூட்டம் நடக்கவிருந்த மேடை அங்கிருந்த பதாகைகள் எண்டு எல்லாத்தையும் எரிச்சு நீலநிற ரிப்பன்களை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.

பனாதைப் பயலுகள். கூட்டம் நடக்கவிருந்த கிராமத்தில பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து.

இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற.
அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவர். நடுத்தர வயதுடையவர். அவரின்ர யதார்த்தைப் பாருங்கோ..


"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல.. இப்ப நெடுகலும் புளூபிலிம்தான் எடுத்துப்பாக்குறனான்.. உந்தச் சீரியலுகள் படங்கள் பாக்கிறத விட புளூபிலிம் எவ்வளவோ மேல்"..

சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..
நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள். அடுத்தநாள் புதுப் பொலிவோட, நல்ல எண்ணங்களோட, புதுப்புது ஐடியாக்களோட இருக்கவேணுமெண்டா ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளுறம் என்பது அவசியமில்லை. எவ்வளவு நேரம் தொடர்ந்து நித்திரை கொள்ளுறம் என்பதுதான் அவசியம். அரை அரை மணித்தியாலமா பத்துமணித்தியாலம் நித்திரை கொள்வதில ஒன்றுமே இல்லை. ஆறரை மணித்தியாலம் தொடர்ந்து கொள்வதில முழுப் பயனும் பெறலாம்.


இந்தக் கணினி உலகில நித்திரை சீரின்மை என்பது பெரியொரு பிரச்சினை. நீங்கள் எப்படி?. இங்க போய் பரீட்சித்தப் பாருங்கோ. பிபிசியின் சுட்டி. பயப்படாது தகவல்களை தட்டச்சுங்கோ. உங்களுடைய வாழக்கைமுறை நித்திரைக்குப் பங்கம் விளைவிக்குதா, அதை எப்படி ஒரளவு சீராக்கலாம் என்று இறுதியில் சிறு குறிப்பு என்று நல்ல விடயங்களைச் சொல்லுது.


http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler/

எனக்கு ஒரளவு பரவாயில்லை எண்டு சொல்லுது. என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.

நித்திரைக்கு முதல் செக்ஸ் வச்சுக்கொள்ளுவீங்களோ எண்டெல்லாம் கேக்குது. கல்யாணம் கட்டினாக்கள்தான பதிலளிக்கவேணுமெண்டில்லை. போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.

படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கடந்த 17 மாதங்களாக அவளை நான் அறிந்திருக்கிறேன். அல்லது அறிந்து கொண்டுருக்கிறேன். நானல்ல அவளை ஒரு முறை பார்க்கும் எவரும் அல்லது எவனும் அறிய ஆரம்பிப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமூட்டக்கூடிய விடயமில்லை.



நாளொரு கலரும் பொழுதொரு ஸ்டைலுமாக உடையணிவாள். அந்தந்தக் கலருக்கேற்ற பாதணிகளோ பலவிதம். எல்லாக் கலரையும் கலந்து ஊத்தின மாதிரி ஒரு செருப்பு வச்சிருக்கிறன். எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு.

பனியன் போட்டு சேட்டும் போட்டு பரவசமா பார்த்து நடக்கிறவன் நான். பனியன் மட்டுமே போட்டு (யோவ்.. மேலாடையை பற்றி மட்டும்தான் கதைக்கிறேன்) பார்த்தாலே பரவசமா நடக்குறவள் அவள்.


ஐந்தாறு நாளுக்கொருக்கா, ஐந்தாறு மயிரை வெட்டிச் சேப் ஆக்க ஐநூறு கொடுப்பாள் அவள். ஸ்றெயிற் பண்ணின மயிராம் அது. மண்ணாங்கட்டி சேப்பிங்கும் மயிரில் ஸ்றெயிற்றிங்கும். மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.


தொலைவெண்டாலும் தொங்கிக்கொண்டு பஸ்ஸில போவேன். காரில் போய்ப் போய் போரடிக்குதாம் என்று பஸ்ஸில போவதற்கு விருப்பப்படுவாள். பஸ் பிழைச்சா கொண்டக்ரரிட்ட காசு வேண்டிக்கொண்டு அடுத்த பஸ் எனக்கு. கார் பிழைச்சா பக்கத்தில விட்டுட்டு கப் (Cab) பில போவது அவளுக்கு.

அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள். நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது. அவளுக்கும் கூடத்தான்.



சரி இந்தளவுக்கு எப்படி ஒப்பிட முடியுது எண்டு யோசிக்கிறீங்களா? சிம்பிள்.. நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது. நான் போன பஸ்ஸும் அவளின்ர காரும் அக்சிடன்ற் ஆக, மயங்கிக் கிடந்த அவளை இழுத்து வெளியில போட்டுட்டு அவளின்ர ICE இலக்கத்திற்கு போன் பண்ணினதுதான் நான் செய்தது. பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன். இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.


கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 


 கார்க்கி ஒரு விஜய் ரசிகர். அனைவருக்கும் தெரியும். அவர் அண்மையில் அஜித்தின் அசல் படப் பாடல்களைப் பற்றி அலசியிருந்தார். சிறப்பாகவும் சொல்லியிருந்தார். படம் ஹிட்டாகவும் வாழ்த்தியிருந்தார்

அதிலொரு பின்னூட்டம்..

//படம் ஹிட்டாக வாழ்த்துகள்.//

இதுதாங்க விஜய் ரசிகரின் பெருந்தன்மை என்பது!


இந்தப் பின்னூட்டம். பார்ப்பதற்கு நல்லது போல இருந்தாலும் உண்மையாக யோசித்துப் பாருங்கள். கார்க்கி என்ற மனிதனின் நல்ல இயல்பான வாழ்த்தும் தன்மையை மறுத்து ஏதோ விஜயை பின்பற்றுவதால் வந்த இயல்பு போன்றதொரு தவறான கருத்தைத் தொனிக்கிறது.

பாராட்டவேண்டிய இயற்கையான ஒரு மனிதனின் தன்மையை ஏன் தனித்தன்மையாக்கி கேவலப்படுத்தவேண்டும்.

----------------------------------------------------------------------------

புல்லட் அண்மையில் அரசியலைப் பற்றி அலசியிருந்தார். இலங்கையின் தேர்தல் பற்றி சூடாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அதிலொரு பின்னூட்டம்...

தமிழர்கள் என்றாவது ஒற்றுமையாக இருந்துள்ளார்களா? மூவேந்தர் கால
மெல்லாம் ஒருவரோடுஒருவர் மோதிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒற்றுமை
யானது ஒரு கறைபடிந்த நிகழ்ச்சியான பாரிமகளைக்கற்பழிக்கும் முயற்சியில்
மட்டுமே.தமிழன் ஒரு பாபப்பட்ட சமுதாயம்.இவ்வளவு அழிவின் பின்புகூட
ஈழத்தமிழரிடம் ஒற்றுமை ஏற்படவில்லை.இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு,
வெளிநாட்டான்,கொழும்புக்காரன் என்ற பாகுபாடு புரையோடிப்போய்யுள்ளது.
எப்போது இந்நிலை மாறும்.என்னசெய்தால் மாறும் யாராவது சொல்வீர்களா?

எவன் எப்ப ஒற்றுமையாக இருக்கிறான். சிங்களவனை எடுத்தாலும் கண்டிச் சிங்களவன், கரையோரச் சிங்களவன், கொழும்புச் சிங்களவன், காலிச் சிங்களவன், வெளிநாட்டுச் சிங்களவன் போன்று பல பாகுபாடு இருக்கையா.


அமெரிக்கனை எடுத்தாலும் மெக்ஸிகன், நியூயோர்க்காரன், டெக்ஸாஸ் காரன் என்று பாகுபாடு இருக்கு.

இந்தியாவை எடுத்தாலும் மாநிலங்கள், நகரம், கிராமம் எண்டு பாகுபாடு இருக்கு.

இதொண்டும் தமிழனுக்க மட்டும் இருக்கிறதில்லையையா. உலகத்தில எல்லா உயிரினங்களுக்குள்ளயும் இருக்கிற இயற்கையான தன்மை. வீட்டில சகோரங்களுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து வீடுகளுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து பிளாட்டுகளுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்துத் தெருவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஏரியாவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஊருக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து நகரத்துக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, ஜாதி, இனம், மதம், இடம், பள்ளிக்கூடம், வேலைத்தளம் என்று ஏதோ ஒரு விதத்தில குழுவாகும்போது ஏற்படுகிற எல்லாருக்குமான இயல்பு. இதுல தமிழன் மட்டும் தனிய நிண்டு ஒண்டும் புடுங்கவில்லையையா.

பொதுவான இயற்கையான தன்மையை ஏன் தமிழனுக்கு மட்டும் போட்டு நீங்களும் கேவலமாகி, மற்றாக்களையும் கேவலமாக்குகின்றீர்கள்.

-------------------------------------------------------------------------------

இது ஒரு இடமும் வரவில்லை. பொதுவாகக் கதைக்கிறேன். மேல நான் கூறிய இரண்டு பிரச்சினைகளுக்கும் கீழே சொல்லப்போற பிரச்சினைக்கும் சம்மந்தம் இருக்கோ எண்டு பாருங்கோ.


இயற்கையின் படி மனிதன் வாழுறான். இயற்கையை மீறி சில இடங்களில போறான். ஒவ்வொரு காரியத்துக்கும் காரணத்தை தேடும் ஆற்றல் மனிதனிட்ட இருக்குது. அதனாலதான் விஞ்ஞானம் வந்தது. மற்றவனுக்கு அடிக்காதே என்று காரணத்தோட சொல்லக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. எந்தெந்த இடத்தில பொய் சொல்லக்கூடாது... அல்லது எந்த வயதில பொய் சொல்லக்கூடாது என்று காரணத்தோட சொல்லுற ஆற்றல் மனிதனுக்கு இருக்கு. அதாவது மதங்கள் அல்லது கடவுளர் சொல்லுகின்ற நல்வழிகளை காரணத்தோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. ஒரளவு படிப்பறிவு அல்லது அனுபவ அறிவு வேணும் என்பது இயற்கை.

இப்படியான பொதுப்படையான, மனிதனால் காரணங்களோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மதம் அல்லது கடவுள் எனும் பெயர் கொண்டு சொல்லிவிட்டு அதுதான் மனிதனை நல்வழிப்படுத்துது என்று சொல்வது எவ்வளவு கேணைத்தனமானது.


பிற்குறிப்பு : ரிஷான் ஷெரிப்பின் இந்த பதிவையும் புல்லட்டின் பதிவையும் கார்க்கியின் பதிவையும் வாசிச்சு வந்த உணர்வின் கலவைதான் இந்தப் பதிவு.