சம்பவம் ஒன்று.
ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கியிருந்த நண்பன் ஒருவன் 'ஏதாவது நல்ல சண்டைப் படமாப் பாத்து ஆங்கிலப்படம் ஒண்டு போட்டுவிடு' என்றான். சரி சுவாசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கட்டுமே என்று Wanted படத்தைப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வந்திருந்தபோது படமும் முடிந்திருந்தது. 'எப்பிடிப் படம் இருந்தது, நல்லதா?' கேட்டேன். 'சூப்பர் படம், அதில ஒருத்தன் இருக்கிறான் அவன் சுட்ட புல்லட்டை திருப்பியும் துவக்கு குழாய்க்குள்ள எடுக்கிறான், நல்லா இருந்திச்சு' என்றான்.
படம் பார்த்தவர்கள் இருக்க மற்றவர்களுக்கு :- படத்தில் ஒருவனுக்கு பின் மண்டைக்குள்ளால் புகுந்து நெற்றியைத் துளைத்து முன்வரும் புல்லட்டை குறைந்த வேகத்தில் (slow motion) காட்டுவார்கள். பின்னர் அந்தப் புல்லட் எங்கிருந்து வந்தது எனக் காட்டுவதற்காக காட்சிகளைப் புல்லட்டை பிரதானமாக வைத்து பின்னோக்கிக் காட்டி அது எங்கிருந்து வந்தது என்பற்காக மீண்டும் புல்லட் துப்பாக்கிக் குழாயை அடைவதாக காட்டியிருப்பார்கள்.
சம்பவம் இரண்டு.
நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் இடது கையின் ஐந்து விரல்களிலும் நகங்களை வளர்த்து வைத்திருந்ததை பார்த்தேன். 'இடது கைவிரல்களில் நகம் வளர்ப்பது நல்லதல்ல, வெட்டி விடு' என்றேன் (அவன் வலது கைப்பழக்கம் உடையவன்). ஏன் எனறு என்னை வித்தியாசமாக நோக்கினான். 'இல்ல... இடது கையை மலம் கழுவப் பாவிக்கிறதுதான, சோப் போட்டுக் கழுவினாலும் நகம் இருந்தால் எச்ச சொச்சங்கள் இருக்க வாய்ப்பிருக்கு' என்றேன். 'சீ... நான் ரொய்லற் ஸ்பிரேயர் (toilet sprayer) மட்டும்தான் பாவிக்கிறனான், கை இல்லை' ஒரு புன் முறுவலோடு சொன்னான். 'ஓ... அப்படியா' என்றேன். வேறன்ன சொல்ல.
சம்பவம் மூன்று.
தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது, வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும். அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’ எனக் கூற, அனைவரும் சிரித்தனர். அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு வரவில்லை.
அம்பிகா எனும் வலைப்பதிவருடையது.
*********
ஒரு சம்பவம் அர்த்தப்படுத்தப்படுவது அவரவர் புரிதல்களுக்கேற்பவே. ஆரம்ப அர்த்தப்படுத்தல்களில் தவறு கண்டுபிடிக்க முயல்வது சரியாகப் படுவதில்லை எனக்கு. ஊரிலிருந்து வந்த நண்பன் இன்னும் நான்கைந்து ஆங்கிலப் படங்களை பார்த்தால் தனது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறுவயது முதலே பெற்றோர்களால் இடது கைவிரல் நகங்களை வளர்க்காதே எனறு அறிவுறுத்தப்பட்ட நான் அதற்குள் மட்டுமே இருந்திருக்கிறேன் வெளியில் சிந்திக்காது. மூன்றாவது சம்பவத்தில் வரும் சிறுமியின் புரிதல் கவலைக்குரியது. வீட்டில் நடந்த ஏதோவொரு நிகழ்வு ஆழப்பதிந்திருக்கிறது அச்சிறுமிக்கு.
ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.
இச்சம்பவங்களின் புரிதல்களூடு மதங்களையும் அதன் அபத்தங்களையும் எழுதவேண்டும் என சிந்திக்கிறேன். பதிவின் போக்கு இன்னொரு நிலைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ | கௌபாய்மது.
10 பின்னூட்டங்கள்.
வாங்கோ வாங்கோ....
ஏதோ பின்நவீனப்பதிவு போல கிடக்குது.
விளங்கிற மாதிரியும் இருக்கு, விளங்காத மாதிரியும் இருக்கு...
பின்னூட்டங்களை அவதானித்திற்று பிறகும் வாறன்.
:)
//ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.//
சத்தியமான அனுபவ வார்த்தைகள். இவற்றோடு எவற்றையெல்லாமோ சம்பந்தப்படுத்திப்பார்க்கும் மனதை அடக்க முடியவில்லை. அனுபவங்கள்தான் சிறந்த ஆசான்கள்.
மூன்று சம்பவங்களை உங்கள் பாணியில் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி இருபது நிறையவே ரசிக்க வைக்கிறது.
அடிக்கடி எழுதவும்..
அண்ணே பதிவு சூப்பர்!! சற்று நின்று நிதானித்து வாசித்தே விளங்கி கொண்டேன்!!
மூன்று சம்பவங்களின் புரிதலும் இறுதியில் உங்கள் விளக்கமும் நன்று அண்ணே!!
தொடர்ந்து எழுதலாமே???
பதிவு எனக்கு பிடித்த முறையில் உள்ளது. தொடரட்டும்
வித்தியாசமாக அருமையாக இருக்கிறது பதிவு
என் பகிர்வையும், உங்கள் புரிதல்களோடு சேர்த்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!
உங்கள் புரிதல்களுக்கான விளக்கம் அருமை.
உண்மையான பதிவு!
நல்லதொரு ஆராய்ச்சிப் பதிவு. இடக்கையோ வலக்கையோ இங்கே நகத்துக்கு பெயிண்ட் அடிப்பது ஸ்டைல் ஹிஹிஹி.
மது கொஞ்சம் குழம்பி பின்னர் தெளிந்தேன், நல்லாயிருக்கு புரிதல்கள் பற்றிய பதிவு.
மதங்களையும் அதன் அபத்தங்களையும் பற்றி எழுதுங்கள், ஆனால் அதிகம் எதிர்ப்பு வரும், ஆனாலும் எழுதுங்கள்
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ