ஒவ்வொருவருக்கும் தனித் திரட்டி
"தனியொரு மனிதனுக்கு திரட்டி இல்லையெனின் இந்த ஜகத்தையே அழித்துடுவோம்"

பாரதி இன்றிருந்தால் பாடியிருப்பார். ஆச்சரியப்படுவதற்கிங்கொன்றுமில்லை. அந்த அளவுக்கு "நாளொரு திரட்டியும் பொழுதொரு மகுடமுமாக" தமிழ் வலையுலகம் பெருமிதம் அடைந்துகொண்டிருக்கிறது.

அதனால் பிளாக்கரில் நீங்கள் எவ்வாறு நீங்கள் விரும்பிய பெயரில் வலைப்பதிவை உருவாக்கலாமோ அவ்வாறே நண்பர் நிமலபிரகாஷன் உங்கள் விருப்பப் பெயரில் திரட்டி உருவாக்க சந்தர்ப்பம் வழங்க எண்ணியுள்ளார்.

சொந்தப் பதிவுகளையும் திரட்டி, மாறி மாறித் திரட்டி, திரட்டிகளையும் திரட்டி செத்துச் செத்து விளையாடுவோம்
வேட்டைக்காரன் ஓடவேண்டும்.
தியேட்டரை விட்டு அல்ல.. உண்மையாகவே ஓடவேண்டும் என்பது விகடன் வாசகர் ஒருவரின் வாழ்வாதாரப் பிரச்சினை.

ஒரு காட்டுல மான் எப்போ தூங்கும், சிங்கம் எப்போ தூங்கும்னு தெரிஞ்சுக்காம வேட்டைக்காரன் தூங்க முடியாது. நம்ம 'வேட்டைக்காரன்' நாட்டுக்குள்ள சட்டத்தைத் தூங்கவிடாமல் குற்றத்தை வேட்டையாடி ஒழிக்கிறவன்!'' - இயக்குநர் பாபுசிவன் பேச்சில் டெடர் காட்டுகிறார்.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சாதா மனிதனான் விஜய் கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்து வேட்டையாடுவதே இதன் ஸ்பெஷல் என அணுகுண்டை உச்சந்தலையில் போடுகிறார்.

இந்தப் படம் ஓடவேண்டும். இல்லாவிட்டால் விஜய் உடனடியாக அரசியலில் இறங்கிவிடுவார் என்பதே அந்த வாசகரின் கவலையும் பிரச்சினையுமாகும்.
அனாமதேயங்களின் கொசுத்தொல்லை
வழமைபோல அநாமதேயங்களின் தொல்லை(???) அதிகமாக இருப்பதாக ஏராளமான புகார் வந்துள்ளதாகவும், அதனைப் புலனாய்வு செயய யாரையாவது நாடவேண்டுமெனவும் சி.ஐ.டி டிப்பார்ட்மெண்ட் கூறுகிறது.

அநாமதேங்களின் பின்னூட்டங்கள் ஒரு பிரச்சினையாக எனக்குத் தெரியவில்லை. யாதொரு அநாமதேயமும் போய் எனது பெயரில் யாருக்காவது பின்னூட்டம் போட்டால் அதை நானே போட்டதாக எடுத்துக்கொள்வது அந்த வலைப்பதிவரின் நிறைவுத்தன்மையை (maturity) கேள்விக்குறியாக்குவதாகவே எனக்குப் படுகிறது.

அநாமதேயம் வந்து எனது பதிவில் "மது நாயே... யூனிவர்சிட்டியில் நீ அடித்த கூத்துக்கள் எனக்குத் தெரியாதா?" என்று பின்னூட்டமி்ட்டால் அதைப் பற்றி நான் எதற்கு கவலைப் படவேண்டும். அது உண்மையாக இருந்தாலும் ஏனதற்கு நான் பதிலிறுக்க வேண்டும்.

அநாமதேயங்களின் வசைகளை கண்டும் காணாது விடும் மனப்பாங்கு இருந்தால் அதிக தடவைகள் அதில் சுவாரசியமே கண்டு கொள்வீர்கள். சில பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கும். அநாமதேயங்களின் பங்கு அதில் அதிகமாக இருக்கும்.

பாவிக்கும் வார்த்தைகள் தப்பாகப் போகும்போது அநாமதேய தெரிவை மூடிவிடப் பரிசீலிக்கலாம். இது எனது பக்க உணர்வு... அவ்வளவுதான்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது