நா

நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையில் இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு நிகழவிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லாவிடின் படத்தைச் சொடுக்கி விபரம் அறிக.


சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் அமைப்புக்குழுவின் உறுப்பினராகிய கங்கோன் கோபியைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

1. கங்கோன் ஒரு கொள்கை வீரன் - இவர் வலையுலகிற்கு kanagagopi(at)gmail.com என்ற முகவரியூடுதான் அறிமுகம் எனினும், அனாயதேயமாக பின்னூட்டம் போடக்கூடாது என்ற கொள்கையால் bloggergopi(at)gmail.com என்ற முகவரியைப் பாவித்துத்தான் வேறு பெயரில் பின்னூட்டமிடுவார்.

2. கங்கோன் ஒரு கிரிக்கட் புலி - ஆளைப்பார்த்தா கிரிக்கட்டுக்கு அம்பயராத்தான் நிக்கமுடியும் என்று யோசித்தா அது உங்கட தப்பு. அண்ணன் மூன்று நான்கு நாளைக்கொருமுறை கிரிக்கட்டில 61, 61 ரண்களாக விளாசித்தள்ளுவார்.

3. கங்கோன் ஒரு மாய மனிதன் - ஆகா இவராவது மாயமாக ஆவதாவது. இவருக்குப் பின்னால ஆயிரம்பேர் மாயமாகலாம் என்கிறீர்களா? ம்ஹீம்... அண்ணன் பிரத்தியேக காரணங்களுக்காக Invisible ஆகத்தான் இருப்பார்.

4. கங்கோன் ஒரு பாரம்பரியக் காவலன் - அன்றைய காலங்களில் பிரியமானவருக்கு ( ஆரம்பத்தில் ) கடிதம் எழுதுவதும் கசக்கி எறிவதுமாக எத்தனையோ தாள்களை வீணாக்குவார்கள். அவ்வாறே இணையத்தையும் பாரம்பரியம் மாறாது அஞ்சல் எழுதுவதும் அதை Draft இல் போடுவதுமாய் இருப்பார்.

5. கங்கோன் ஒரு ஆங்கிலக் கனவான் - ஆங்கிலத்தில் ஏலவே விண்ணன் என்றாலும் இன்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், கடிதங்கள், போட்டிகள், பயிற்சிகள் என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார். அவருடைய விருப்பமான ஆங்கிலத் தளம் http://www.parapal-online.co.uk/eap.htm

6. கங்கோன் ஒரு பெரீய்ய ரூவீற்றர் - என்னதான் ருவிற்றர் இருந்தாலும் நான் BigTweet தான் பாவிப்பேன் என்று அடம் பிடிக்கும் அண்ணல் இவர்.

7. கங்கோன் ஒரு சமூக விலங்கு - சமூகத்தோட ஒன்றி வாழவேண்டும் என்ற வெறியால் twitter, gmail, chat, blogger, sms (www.smsgupshup.com) என்று எல்லாவற்றையும் ஒருசேரப் பாவித்து மூழ்கி முத்தெடுப்பவர்.

8. கங்கோன் ஒரு அநாமதேய ஆப்பாளர் - யாராவது அவரது வலைப்பதில் அநாமதேயமாக பின்னூட்டம் போட்டால் அவ்வளவுதான். IP tracer ஐ வைத்து அடுத்த நிமிடமே ஆப்படிப்பார்.

9 கங்கோன் ஒரு SLS தரமுடையவர் - தனது status கள் google chat ல் வேறாகவும், facebook இல் வேறாகவும் மற்றும் இதர தொடர்புகளில் வேறாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக Hellotxt இனைப் பாவித்து தனது தரத்தை சமநிலையில் வைத்திரு்ப்பார்.


படம் சொடுக்கி விபரம் அறிக

பிற்குறிப்பு 1 : Bavan, சந்துரு நீங்கள் எப்ப chat இனை விட்டுப் போறீங்களோ அப்பதான் கங்கோன் Visible இற்கு வருவார்.

பிற்குறிப்பு 2 : கங்கோன் பற்றி உங்களால மேலும் ஏதாவது எழுத முடியுமெண்டா பின்னூட்டத்தில் குதற இடமளிக்கப்படுகிறது. ஆனாலும் பார்த்துச் செய்யுங்கோ.

பிற்குறிப்பு 3 : இவ்வகையான சுபாங்கத்தனமான பதிவொன்றை சுபாங்கனும் தனது வலைப்பதிவில் இட்டுள்ளார்.

பிற்குறிப்பு 4 : இது நானாக எடுத்தது அல்ல அண்ணன்தான் தந்தவர் http://yfrog.com/enevidence1j

வேற என்ன, கலக்குங்கோ கலங்குஙகோ.. அப்படியே பதிவர் சந்திப்பிலும் கலக்குவம்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 





அன்புக்குரியவர்கள்: இதுக்குரிய ஹார்மோன் சுரக்கிறது குறைவு

ஆசைக்குரியவர்: இதுக்குரிய ஹார்மோன் நிறைய சுரக்கிறது.

இலவசமாய் கிடைப்பது: இலவசச் சாப்பாடு எண்டு உலகத்தில எதுவும் இல்லை (There is nothing called free lunch)

ஈதலில் சிறந்தது: கடவுளுக்கு ஈயாதிருப்பது.

உலகத்தில் பயப்படுவது: மதங்களைக் கண்டு.

ஊமை கண்ட கனவு: அது ஒன்றும் ரகசியமில்லை

எப்போதும்உடனிருப்பது: இரண்டு செல்பேசிகள்

ஏன் இந்த பதிவு: தொடர்பதிவுப் ஃபோபியா இதைக் கண்டு வரவில்லையாதலால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: அந்தந்த நிலையைப் பொறுத்து

ஒரு ரகசியம்: நாங்களெல்லாம் ஊத்தையில இருந்து வந்தனாங்களாம் - குர்ஆன், பைபிள் சொல்லுது.

ஓசையில் பிடித்தது: வேலை முடிந்து மடிக்கணினியை மூடும் டிக் ஓசை

ஔவை மொழி ஒன்று: மெல்லி நல்லாள் தோள்சேர்.

(அ)ஃறிணையில் பிடித்தது(வை) : உயர்திணையை வலிந்து தமதாக்கிக் கொண்டோர்

A – Available/Single? : Single and Available

B- Best Friend?: சந்தர்ப்பங்கள் தீர்மானிக்கின்றன

C- Cake or Pie ?: American Pie

D – Drink of choice? : Other than beer

E – Essential item you use every day? : Google

F – Favorite color? : எந்தக் கலர் எண்டாலும் எல்லாப் பொம்புளைப் பிள்ளைகளையும் பிடிக்கும்.

G – Gummy Bears Or Worms?: எது எடுத்தாலும் Big City இல 100 கிராம் 100 ரூபா.

H – Hometown? : பிறந்ததா, வாழ்ந்ததா, கூட நாள் வாழ்ந்ததா?

I – Indulgence? : அந்தாள் செய்யிறதுக்கெல்லாம் எங்க போறதாம்.

J – January or February? உடனிருந்தால் எதுவும்

K – Kids & their names? : இல்லாத மாட்டில எத்தனை லீற்றர் பால் கறக்கலாம்?

L – Life is incomplete without? : விஞ்ஞானம்

M – Marriage date? : Marriage க்குப் பிறகுதான் dating

N – Number of siblings? : எண் கணித சாத்திரத்தை நம்புதல் அழகல்ல.

O – Oranges or Apples? : ஓசியா வந்த Orange Phone உம், அன்பளிப்பா வந்த Apple iPod உம்

P – Phobias/Fears? : வலையுலகில தடுக்கி விழுந்தா விருதுகளுக்கு மேல விழுந்துடுவனோ..

Q – Quote for today?: ஒவ்வொரு நாளும் Quote தேடாதே.

R – Reason to smile? : ஆராவது இப்பிடிக் கேட்டா சிரிப்பு வந்துடும்

S – Season? : இரவில் குளிர் பகலில் வெயில்

T – Tag 4 People? : :-D

U – Unknown fact about me? : Thinking..

V – Vegetable's you don't like? : சோயா இறைச்சி

W – Worst habit? : Habit of worst thinking

X – X-rays you've had? : விழுந்து முழங்கால் நோவந்து

Y – Your favorite food? : முந்திரிக் கொட்டை

Z – Zodiac sign? : என்னாது?

அழைத்த நிலாவுக்கு நன்றிகளுடன்

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது.

 

டாக்டர் என்றால் டாக்டர்தான்
வேட்டைக்காரன் வர முன்னர் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

நானும் எனது நண்பர்கள் இருவரும் அமிர்தா உணவகத்திற்கு சென்று பூரி அருந்திக்கொண்டிருந்தோம் (உணவு அருந்துதல் என்று சொல்வார்களே, பூரியும் உணவுதானே). அன்று வெள்ளிக் கிழமை பக்கத்தில் கோயில் வேறு என்பதாலும் அமிர்தா ஒரு மரக்கறி உணவகம் என்பதாலும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலர் வந்திருந்தார்கள்.

எனது நண்பர்களில் ஒருவன் படத்தில் உள்ளவாறு தலைமயிரை அழகாக வைத்திருந்தான்.
வந்திருந்த தெரிந்த பையன் ஒருத்தன், அவனுடைய அலப்பறை தாங்காமல் தூரத்திலேயே அவனைக்கண்டு ஓடி ஒளிப்பவர்கள் ஏராளம், தனது அலப்பறையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டான்.

எனது நண்பனைப் பார்த்து "டேய் இவனப் பார்றா... வில்லு வடிவேலு மாதிரி இருக்கிறான்...ஹா ஹா" என்று தன்னுடன் வந்திருந்தவர்களுடன் ஆரம்பித்துவிட்டான் அலப்பறையை. எனது நண்பனுக்கு முகம் கொஞ்சம் ஒரு மாதிரிப் போய்விட்டது. எனக்கும் கடுப்பாகிவிட்டது. மனதில் பட்டென்று உதித்தது. அந்தப் பையனைப் பார்த்து

"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா" என்றேன். பிறகென்ன அவனுடன் வந்தவர்களும் சேர்ந்து சிரித்து பக்கத்தி்ல் இருந்த இரண்டு மூன்று மேசை ஆட்களே சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்திருக்கவேணும். அவன் அண்டைக்கு அதுக்குப் பிறகு ஏதும் கதைக்கவில்லை.

(டாக்டர் விஜய் பவர் அப்படி...)

மூஞ்சிப்புத்தக மொக்கைகள்
நேற்று எனது பால்ய நண்பன் ஒருத்தனின் பிறந்தநாள். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை என்னுடன் ஒன்றாகப் படித்தவன் அவன். உயர்தரம் (A/L) அரைவாசி வரைக்கும் எனக்கு பள்ளிக்கூடம் போக சைக்கிள் இருக்கவில்லை. அதுவரை கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் என்னை எனது வீடு வந்து தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போறவன் அவன். ஒண்டாத்தான் ரியூசனுக்குப் போறனாங்கள். இரண்டு பேரும் ஒரே உயரம். வகுப்பிலயும் வரிசைப்படி விட்டு இருத்திறதால நானும் அவனும் பக்கதத்தில பக்கத்திலதான் இருக்கிறானாங்கள்.


செத்துப் போட்டான் நாலைஞ்சு மாசத்துக்கு முதல்.

அவனது உடல் கூட எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா எண்டு தெரியேல.

மூஞ்சிப் புத்தகக்காரன் (Facebook) முந்தநாளில் இருந்து வந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவி எண்டு மொக்கை போடுறான். போய்ப் பார்த்தா கவலையாக் கிடந்தது. மூஞ்சிப் புத்தகத்தில செத்தாக்களின்ர விபரம் பற்றி அவங்களுக்குத் தெரிவிச்சா அஞ்சலிக்காக மட்டும் அவர்களது பக்கத்தைத் திறந்துவிட்டு மற்ற விடயங்களை, இப்படி வாழ்த்துத் தெரிவி போன்ற விபரீதங்களை நிறுத்திவைக்கிறார்களாம். இதுபற்றி ஆதிரை எழுதியிருக்கிறார். போய்ப் பாருங்கோ. இறப்புக்குப் பின் Facebook http://kadaleri.blogspot.com/2009/11/facebook.html

இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(

கூகுள் பரிசோதனைக்கூடத்தின் கடுகு ஒன்று
ஆர்ப்பாட்டமே இல்லாம வந்த கூகுளின் பாஸ்ற்பிளிபை எத்தனை பேர் பாவிக்கின்றீர்கள். மிக மிக எளிமையான, அருமையான கூகுளின் தயாரிப்புகளில் ஒன்று.

http://fastflip.googlelabs.com/


நீங்கள் ஏலவே அதனைப் பாவிக்கின்றவராக இருப்பின் உங்கள் நாளாந்தப் பார்வைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பாவிக்க ஆரம்பிக்கவில்லையா சென்று பாருங்கள். குறித்த சொல்லைத் தட்டச்சி தேவையானவற்றைப் மட்டும் நுனிப்புல் மேய்ந்து தேவையெனின் மேலும் அடிப்புல் பார்க்கலாம். நேரத்தை நிர்வகித்து செய்திகள், தகவல்களைப் பார்க்க அருமையான தளம் இது.

(FastFlip - Simply Superb)

நோக்கியா - வெடிக்குமா
நீங்கள் நோக்கியா charger பாவிக்கிறவரா? குறித்த காலப்பகுதியில் விற்கப்பட்ட charger கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவாறு இருக்குதாம். நோக்கியாவே சொல்லுது. இங்க போய்ப் பாருங்கோ...

http://chargerexchange.nokia.com/chargerexchange/en/

தங்களுக்கு இவ்வகைச் charger களால் ஏதாவது ஆபத்து ஏற்பட முன்னர் கொண்டுபோய் மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.


(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )

Charger க்கு என்ன தமிழ் வார்த்தை?


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (மூன்று)





நம்பிக்கை ஐந்து : கர்ப்பம் தரிக்கும் அபாயம் இருப்பதைத் தவிர, பெண்களைப்போல ஆண்கள் தங்கள் மீதான பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படுவதில்லை.



விளக்கம் : பால் ரீதியான பாதிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்தலை தவர்த்து, ஆண்களும் தங்கள் மீதான பாலியல் வல்லுறவின்போது பலவழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். சிலவேளைகளில் பெண்ணிலும் அதிகமாக.

ஆணொருவர் ஆணை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கும்போது மிக அதிகமான வன்முறை பாவிக்கப்படுகிறது. பெண்கள் மீதானதைப் போலன்றி ஆண்கள் மீதானதில் ஆயுதங்களும் பாவிக்கபடுகின்றன. அதிக இடங்களில் பலர் சேர்ந்து ஒரு ஆணை வல்லுறவுக்காளாக்குவது அதீத பாதிப்பை ஏற்படுத்துகின்றது பல வேளைகளில் அது தற்கொலைக்கான முடிவையும் தந்துவிடுகிறது.

ஆண்கள் மீதான வல்லுறவு அதிகமாக குதவழியினூடானதாக இருப்பதால் விளைவாக குதவழி உட்கிழிவு அல்லது காயம் ஏற்படுகிறது. இது எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் Rape trauma syndrome என்படும் வல்லுறவின் பின்னான அவரைச் சுற்றியிருப்பவர்களையும் தொடர்ந்து கவலையிலாழ்த்தும் விளைவுக்கு உள்ளாக நேரிடுகிறது. Rape trauma syndrome http://en.wikipedia.org/wiki/Rape_trauma_syndrome ஆனது ஆண் பெண் இருவருக்குமே பொதுவான விளைவுகளையே தருகின்றது. இது பற்றிப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

தொடர்ந்து செல்லும் விளக்கங்களுக்கிடையில் அனுபவம் ஒன்றையும் பார்த்துவிடுவோம்.

எனது நண்பரொருவன் என்னிலும் ஆறேழு வயது கூடியவர், அவர் தனது பதின்ம வயதில் இருக்கும்போது காவற்துறையினரால் புலிச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையிலிருந்தவர். அதன்போது அவர் முதன்முறை சிறையிலிந்த சிலரால் வல்லுறவுக்காளாகியிருக்கிறார். இரண்டாம் முறையும் காவலாளியிடம் பணம் கொடுத்துவிட்டு இவரது சிறைக்கூண்டுக்குள் வெளி நபர் ஒருத்தர் வரும்போது இவர் வேண்டுமென்று அணிந்திருந்த காற்சட்டையுடன் மலம் கழித்துவிட்டார். வந்தவர் இவரை நையப்புடைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். (அவர் இப்போது என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் இப்பதிவுக்குத் தேவையில்லாததாகையால் தேவைப்படும்போது இன்னொரு தருணத்தில் கதைக்கிறேன். ). அதாவது ஆண்கள் மீதான ஆண்களின் வல்லுறவானது அதிகமாக குதவழியை நோக்கியதாகவே இருக்கிறது.


ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவானது சிறைக்கூடங்கள், இராணுவக் கட்டமைப்புக்கள், விடுதிகள் போன்ற இடங்களில் அதிகரித்த நிலையில் உள்ளன.

சரி அடுத்த நம்பிக்கையையும் அதற்கான விளக்கத்தையும், இருந்தால்
அதுசம்மந்தப்பட்ட அனுபவங்களையும் இன்னொரு பதிவில் பதிகிறேன்.




பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கூகுள் வேவும் கிலேசமும்
கூகுள் சில வேளைகளில் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் ஆரம்பிக்கும் சில தயாரிப்புகள் தானே தேடாத அளவுக்கு இணையத்தில் முகவரி இழந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு Knol (http://knol.google.com) ஐக் குறிப்பிடலாம். கூகுளைக் கன்னா பின்னாவென்று காதலிக்கும் எனக்கு கூகுள் வேவ் கூட சிறிது கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூகுள் வேவ் அடிப்படையி்ல் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பது மில்லியன் டொலர் கேள்வியாக எல்லோர் முன்னும் விழுந்து கிடக்கிறது. வேவ் ஒன்றினைத் தொடங்கிவிட்டு அடுத்து என்ன செய்யவது என்று யோசித்துக் கிடப்பது எல்லோரினதும் வாடிக்கையாகிவிட்டது. என்றாலும் preview வாக இருக்கும் கூகுள் வேவானது முற்றாக எல்லோருக்கும் திறந்து விடப்படும்போது தனக்கென இடத்தைப் பிடிக்கும்போல் தெரிகிறது.

செயலி உருவாக்குநர்களுக்குகாக (Application Developers) திறந்துவிடப்பட்டிருக்கும் வேவ் இப்போது புதிய புதிய செயலிகளால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வர்த்தக நோக்கிலான நிறுவனங்களின் பார்வையும் வேவின் மேல் அதிகமாக பட ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மூஞ்சிப்புத்தகம், ஹாய்5, Tagged, மைஸ்பேஸ் என்று மூழ்கி வெளியி்ல் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிடக்கும் மாண்புமிகு மாந்தர்களை எவ்வாறு வேவ் தனக்குள் உள்வாங்கப்போகிறது...!!!
இலங்கையில் இரு இணைய நிகழ்வுகள்
இணைய ஆர்வலர்களுக்கான பயன்தரு நிகழ்வொன்றும், இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்ரடாவது இனிய சந்திப்பும் இம்மாதமோ அல்லது வரும்மாதமோ நிகழவிருக்கிறது. இப்போதைக்கு இத்தகவலை மட்டுமே தரக்கூடியதாக இருந்தாலும் ஒரிரு கிழமைகளில் விபரங்களை வலைப்பதிவுகளில் பெறக்கூடியதாக இருக்கும்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்தில் சேராத இலங்கைப் பதிவர்கள் இங்கே (http://groups.google.com/group/srilankantamilbloggers) சென்று உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் செய்யவேண்டிய நல்லவைகளை கூட்டாகவும் சேர்ந்து செய்யவோம்.
மூத்தபதிவர் வந்திப் பாலகனின் வாழ்த்துப்பா

அழகிய இலங்கையின் மூத்தபதிவர் (வயதிலல்ல) அழகிய வந்தியத்தேவனின் பிறந்தநாள் இன்று. அவர் நலமோடு என்றும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

அவருக்காக ஒரு வாழ்த்துப்பாடல் இதோ...

ரும்காலம் எல்லாம் நலமாக என்று
ந்நாளில் வாழ்த்துவோம் இப்பாலகனை
திரும்பிய திசைகளெல்லாம் இவன் புகழ்
லதரங்க இசையாய் பரவட்டும்
த்திருநாட்டின் மூத்த பதிவனிவன் என்று
தேகம் சிலிர்த்து சேர்ந்து பாடுவோம்
யதொரு தடையாகா வந்திப் பாலகனை
ன்புற வாழ்த்துவோம் இந்தத் திருநாளில்.

(தமிழ்க்கொலைகளை மன்னித்தருள்க)
இந்தியச் சிலந்தி மனிதன்
அண்மையில் ரிஷான் இந்தியாவைச்சேர்ந்த ஜோதிராஜ் பற்றி ஒரு இந்தியச் சிலந்தி மனிதன் (http://rishansharif.blogspot.com/2009/11/blog-post.html) என எழுதியிருந்தார். அவை உண்மைதானா என அறிய முற்பட்டு தேடிய வேளையில் யூரியூப்பில் அவரின் நிறைய சலனங்கள் கிடைத்தன. அவற்றிலொன்று இது. இச்சலனத்தைப் பார்ப்பவர்கள் 0.46 நேரத்தில் அவரைப் பாருங்கள். எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கவேண்டும் அவருக்கு.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

 அச்சுவலை - அச்சோ ஒரு கவலை

எவரும் மறந்திடவேண்டாம்

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்

பூரணை விருந்து

மீண்டும் ஒரு சந்திப்பு

அச்சுவலை சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு

எங்கள் சந்திப்பு - எவரும் மறந்திட வேண்டாம்

இவ்வாறு எத்தனை பதிவுகள் ஆர்வமேலீட்டால் வந்திருந்தன. அதிலொன்றும் தப்பேயில்லை. இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு தந்த மகிழ்ச்சியும், கன்னி முயற்சியாயினும் அதன் காத்திரமும் இன்னொரு வலைப்பதிவர் சந்திப்புப் போல அழகுறை சுற்றப்பட்ட அல்லது தப்பாக விளங்கிக்கொள்ளப்பட்ட இருக்கிறம் சஞ்சிகையின் "அச்சுவலைச் சந்திப்பு" நடந்தபின் வரும் அதைப் பற்றிய பதிவுகளி்ல் அதிகமானவை மகிழ்ச்சி தருவனவாய் இல்லை.

அச்சுவலைச் சந்திப்பின் குறிக்கோள் என்னவாக இருந்தது? அது வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைத்தல். இது சாதாரணமாகச் சொல்லிவிட்டு செய்யக்கூடிய குறிக்கோள் அல்ல. இதன் நிறைவேற்றுகைக்கு மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தல் தேவைப்படுகிறது. அவ்வாறானவொரு ஒழுங்குபடுத்தலை காணக்கிடைக்கவில்லை.

வலைப்பதிவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும்போது இலங்கைப் பதிவர்கள் கொழும்பிலிருந்து மட்டும் வருபவர்களல்லர். இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள். மூன்று நாள் தொடர்ந்த விடுமுறையை அனுபவிக்காது சந்திப்பின் காத்திரத்திற்காக பணம், நேரம், உடலசதி பார்க்காது வருபவர்கள். இதனையெல்லாம் இருக்கிறம் சிந்திக்கவில்லையா? கல்முனையிலிருந்து சக பதிவர் முதல் நாள் இரவு பயணித்து இதற்காக வந்து மாலைவரை காத்திருந்து சந்திப்புத் தொடங்கி ஒரு மணித்தியாலங்களில் திரும்பிப் போய்விட்டார். மனதுக்கு உறுத்தலாக இருந்தது.

இருக்கிறத்தின் சந்திப்பில் குறைகளைப் பற்றியே கூறவேண்டியதன் காரணம் என்ன? இச்சந்திப்பை வெளியுலகிற்குக் காட்டிய முறை பிழையானது. இதனையே "அச்சுவலைச் சந்திப்பு - வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைக்கும்.." என்று வெளியுலகிற்கு காட்டாது, "இருக்கிறத்தின் கலந்துரையாடல் நிகழ்வு - வலைப்பதிவர்களும் அழைக்கப்படுகின்றர்" என்பது போலக் காட்டியிருந்தால் யாருமே குறை குற்றம் கூறியிருக்கமாட்டார்கள்.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம் ஒரு சஞ்சிகையாக, ஒரு நிறுவனமாக அதனைத் தக்கவைத்துக்கொள்ளவோ (ஏலவே அது ஓரளவு தன்னைத் தக்கவைத்திருக்கிறது புதிதாக வந்த மற்றைய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்போது) அதன் இருப்பை வெறும் காலாகாலம் வெளிவரும் சஞ்சிகையாகவன்றி ஏதோ புதுவிதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளவோ இன்றைய அவசர உலகில் அதிகம் கவனிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கவோ அல்லது வலைப்பதிவுகளினுள் உள்வாங்கப்படவோ வேண்டிய தேவை உளது. அவ்வாறானவோர் தேவையின் சிறுபகுதி இவ்வச்சுவலைச் சந்திப்பில் பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது.

இருக்கிறத்தின் இருப்பின் சிறுவரலாறு. சஞ்சிகைகள் பத்திரிகைகளின் இயல்புகள். வித்தியாதரனின் சுவாரசியமான சில அனுபவங்களும், தமிழ்மொழியின் தவறான பாவனையிலான சிறுகோபங்கள், இருக்கிறத்தின் மேம்படுகைக்கான கருத்துரைகள், இருக்கிறம் மலினப்பத்திரிகையல்ல என்றவோர் சிறுவிவாதம் மற்றும் இருக்கிறத்தினைச் சுற்றியே வந்த இதர நிகழ்வுகள் எல்லாம் எதிர்பார்த்துவந்ததினைப் பூர்த்திசெய்யத் தவறியதால் வலைப்பதிவர்களின் ஈர்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அச்சும் வலையும் அறிமுகப்ப்படும் சந்திப்பெனின் அதுசம்மந்தமாக ஏன் எதுவும் நிகழவில்லை? எவ்வளவு அருமையான வழிகள் உளளன. சிறு சிறு சுவாரசியமிகு போட்டிகள், அச்சிலிருந்து இருவர் வலையிலிருந்து இருவர் என குழுவாகி அறிமுகத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு செயற்பாடுகள் போல எவ்வளவோ உளன. அச்சு அச்சாகவும் வலை வலையாகவும் இருந்ததைத்தான் காணமுடிந்தது.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம்... நீங்கள் அடுத்தமுறை இவ்வாறானதோர் சந்திப்பை ஒழுங்குபடுத்துவதாகவிருந்தால் அதன் நிகழ்ச்சிநிரலை ஏலவே வெளியிடுங்கள். வருகையாளர்கள் உங்கள்மேல் குறையொன்றும் கூற முடியாது.

--------------------------------------------------------------------------------------------------

இருக்கிறத்தின் "அச்சுவலைச் சந்திப்பினை" ஆர்வத்துடன் எதிர்பார்த்து மிக மேல உள்ள பதிவுகளைப் போட்ட வலைப்பதிவர்கள்தான் சந்திப்பின் பின் இப்பதிவுகளைப் போடுகிறார்கள்.

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

அச்சுவலைச் சந்திப்பில் பதிவர்க(ள்/ளும்)

இருக்கிறம் ஏமாற்றியது

எமது "சந்திப்பு வறுமையும்" அச்சுவலைச் சந்திப்பும்

மிக மேலுள்ள பதிவுகளுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடனும் மகிழ்ச்சியுடனும் பின்னூட்டங்கள் கிடைத்ததோ அதைவிட காட்டமாகவும், கவலையுடனும் இவற்றுக்குப் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன். இவற்றைச் சாதாரணமாகப் புறம்தள்ளிவிட முடியாது. இருக்கிறம் நிர்வாகத்தினர் அடுத்தவோர் சந்திப்பில் இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு சிறப்புறச் செய்யவார்கள் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் எவ்வளவுதான் மேல எழுதியிருந்தாலும் தர்ஷாயணீ லோகநாதன் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட Status Message ஆயிரம் கதை சொல்லும். அது....

அச்சுவலைச் சந்திப்பு - சேறும் சகதியும்


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

நேரடி ஒளிபரப்பு - அச்சுவலைச் சந்திப்பு
இலங்கையில் (02-11-2009) திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடக்கவிருக்கும் அச்சுவலைச் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.






சந்திப்புக்கு வரவியலாதுள்ள அச்சு ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

நேரடி ஒளிபரப்பின் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (இரண்டு)
பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று) இற்கு இங்கே செல்லுங்கள்.

நம்பிக்கை நான்கு: வயதுவந்த ஆணொருவர் பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியாது.
விளக்கம் : பாலியல் வல்லுறவு நிகழ்வுகளில் 97 வீதமானவை ஆண்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருந்தாலும் பெண்களால் செய்யப்பட்ட வல்லுறவுகளும் பதிவுகளில் உள்ளன. பெண்களும் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார்கள்; நிகழ்த்துகிறார்கள்.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஒன்றுளது. அதாவது பெண்களால் வல்லுறவுக்காளாக்கப்படும் ஆண்கள் அதை வெளியில் சொல்வதில்லை. சொன்னால் தாங்கள் கோழைகள் ஆகிவிடுவோமோ என நினைக்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்நிகழ்வுகளில் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய பெண்ணே ஆணை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறாள். இதை வெளியில் கூறினாயானால் நீதான் என்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறிவிடுவேன் என்கிறாள். அதனால் இவ்வகை வல்லுறவுகள் பதிவுகளில் வருவதில்லை.
இவ்வகைக் நிகழ்வுகள் கிராமப் புறங்களைவிட நகரங்களிலும் மேற்குலக நாடுகளிலுமே அதிகமாக உள்ளது. இதன் போது ஆண் தனது பாலுறுப்பை பெண்ணினுள் செலுத்தவேண்டுமென்றில்லை. பெண் ஆண் மீது அதிர்வுக் கருவிகளை பாவிக்கிறாள்.
ஒரு பெண் பலவந்தமாக ஆணுறுப்பினை விறைப்புத்தன்மை ஆக்கமுடியாது என நினைக்கிறீர்களா? ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள், ஆணாக நீங்கள் உங்கள் பாலுறுப்பின் மீது மிக மிகக் குறைந்த கட்டுப்பாட்டையே வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் உடலில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத பகுதிகளில் ஒன்றாக உங்கள் ஆணுறுப்பும் உள்ளது.
உதாரணத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்தச் செய்தியை வாசித்துப் பாருங்கள். மூன்று பெண்மணிகள் ஒரு ஆணை கடத்திப் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய சம்பவம் பற்றியது..
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை
ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.

பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.

எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.

சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.

இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.

"எக்ஸ்கியூஸ் மீ..."

காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.

எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."

அதே அழகான பெண்.

ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.

"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"

"ஓ.கே." (இனி தமிழாக்கம்)

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"

மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.

"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"

"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"

என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு

"அப்படியொண்டும் இல்லை"

"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"

அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.

இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.

யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.

எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...

இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)

பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
முதல் சந்திப்பு, முழுமையான நிறைவோடு, எல்லாம் நலமாக நடந்து முடிந்தது. மொத்தமாக சந்தோசமான 3 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும்... ஒலி ஒளிபரப்பு சந்திக்கவிலயாதிருந்த பதிவர்களையும் வெளிநாட்டிலிருக்கும் பதிவர்களையும் சென்றடைந்தது கூடுதல் மகிழ்ச்சி.

ஒளிபரப்பு சாட்டிங்கினூடாக அவர்களின் கருத்துக்கள், கேள்விகள், நக்கல்கள் சந்திப்பை கூடுதல் சுவாரசியமாக்கியது. அவர்களின் கேள்விகள் சந்திப்பில் குறித்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருந்தது இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தி நிற்கிறது.

சந்திப்பிற்கு வந்த குழந்தைப் பதிவர்வரை கொஞ்சம் கதைக்க வையுங்கோ, பங்குபற்றிய பெண் பிள்ளைகளில் பரிவு கொண்டு அவர்களில் யாரையாவது பேச விடுங்கோ, சந்திப்பு நிறைவடையும் நேரம் எல்லோரின் முகங்களையும் தனித்தனியே காட்டுங்கோ என்று அன்புக் கட்டளைகளை சாட்டிங்க் மூலமாக ஒளிபரப்பினூடு வேண்டுகோள் விடுத்தமை சந்திப்பைக் கலகலப்பாக்கியது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது www.livestream.com இன் இலவச அடிப்படை கணக்கினூடாக. வழமையாக ஒளிபரப்புக்களை அவர்கள் சேமித்து வைப்பார்கள். இந்த முறையும் அவர்கள் சேமித்து வைப்பார்கள் நாங்கள் மீண்டும் பார்த்து மகிழலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ம்ஹீம்... கொஞ்சம் ஓவர்தான். ஆறுபணத்துக் குதிரையும் வேணும் ஆறுகடக்கப் பாயவும் வேணும் எண்டு நினைக்கிறது நல்லதில்லைத்தானே. கிட்டத்தட்ட 4 மணித்தியால ஒளிபரப்பினை சலனமாகச் சேமித்து வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நல்லாவா இருக்கு...

சுவாரசியமான சாட்டிங்க் வரலாற்றினையும் நகலெடுக்கத் தவறிவிட்டேன். கவலைதான் என்றாலும் சந்திப்பின் முழுமையான ஒலிப்பதிவு இருக்கிறது என்ற மகிழ்ச்சி இன்னும் நிலைக்கிறது. நிகழ்வினை முழுமையாகப் பதிந்த மதுவர்மனுக்கு (என்ர அண்ணாதான் :-))) நன்றிகள்.

சந்திப்பில் பங்குபற்றாதவர்கள் இதனைக் கேளுங்கள். பங்குபற்றியவர்களும் மீண்டும் ஒரு முறை கேளுங்கள் சுவாரசியமாகவும் அடுத்தமுறை நிறைய விடங்களைக் கதைக்கவும் உதவும்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8


இந்த எட்டுப் பகுதிகளையும் தரவிறக்கிப் பாவிப்பதற்கான சுட்டிகளும் இதோ...

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8

நேரடி ஒளிபரப்பினை கூடுதலாக 44 பதிவர்கள் ஒரே நேரம் பார்த்து சிறப்பு. கிட்டத்தட்ட 150 பேர்வரை நேரடி ஒளிபரப்பை இரசித்திருந்தார்கள். குசும்பனோட மொத்தமா (குசும்பனே மொத்தம்தான்) பத்து பேர் ஒன்றாக பார்த்து ரசித்தார்களாம்.

அருமையான ஒரு நாள்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 



நேரடி ஒளிபரப்பு - இலங்கைப் பதிவர் சந்திப்பு
இன்று (23-08-2009) ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடக்கவிருக்கும் இலங்கைப் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.



பதிவிற்கு வரவியலாதுள்ள இலங்கையிலுள்ள பதிவர்களும், வெளிநாட்டிலிருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களும் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

இது இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பாதலால் நேரடி ஒளிபரப்பின் முதல் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

A for Apple இன் ஆதியை இங்கே ரவியில் பெறலாம். இடையில் லோசன் அண்ணா கவர்ச்சியாக இந்த தொடர்பதிவை போட்டிருந்தார். அந்தம் நானாக இருக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும், என்னாது... அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டாரா? என்று கேட்டுக்கொண்டு யாராவது இந்தத் தொடர் பதிவை இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு கொசுறுத் தகவல் - இந்தத் தொடர்பதிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது ;-) . பழமைபேசி என்னை அழைக்கும்போது சென்ற ஆண்டு ஆகஸ்ட். :-))

A to Z தட்டச்சும்போது பயர்பாக்ஸ் location bar என்னத்தை காட்டுகிறது என்பதுதான் ஆதிப்பதிவின் நோக்கம். அதுவே உருமாறி வந்ததெல்லாம் சாதாரண சகஜம். என்னுடைய Location Bar இல் சில எழுத்துக்களைச் தட்டச்சும்போது வரும் இணையப் பக்கங்களை பொதுவில் வைக்கமுடியாதுள்ளமைக்கு வருந்துகிறன். :-) . அவற்றில் சில இலங்கையில் சட்டப்படி (???) தடையானவை.

A for http://www.answers.com
ஒரு ஆங்கில அகராதி என்பதற்கப்பால் நிஜமான அகராதியில் இல்லாத சொற்களுக்குரிய நாட்டு வழக்கங்கள், ஊர்வழக்கங்கள் Acronym களுக்குரிய விளக்கங்கள் என்று எல்லாவற்றையும் புட்டுப்புட்டு வைக்கும்.

B for http://www.blogger.com
ம்க்கும்... இதுக்கெல்லாம் விவரணம் வேணுமா?

C for http://www.cancerquest.org/
எதுக்கெடுத்தாலும் இது கான்ஸராக இருக்குமோ என்று கிலிப்படுத்துற உலகமப்பா இது. கிலி வேண்டாம் இங்க போங்கோ.

D for http://digg.com/
இன்றைய தமிழிஷ், தமிழர்ஸ், தமிழ் 10 களுக்கெல்லாம் முன்னோடி

E for http://www.esnips.com/
கோப்புக்களை பகிர்வதற்கு. நான் இசைக் கோப்புக்களை பகிர பாவிக்கிறேன். 5 GB இலவசமாகத் தருகிறார்கள்.

F for http://www.filehippo.com/
கணிணியைப் போமற் செய்தாலும் சரி, யாராவது புச்சா இந்த மென்பொருள் எங்கடா இருக்கு எண்டு கேட்டாலும் சரி இங்க போங்க. அவசியமான எல்லாம் இலவசமாக இருக்கு இன்றைய திகதியுடன். இந்த இணையத்தைக் காதலிக்கிறன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். :-)

G for www.gsmarena.com/
செல்பேசி வாங்கப் போறீங்களா... மிக மிக அருமையான இடம். Simply superb.

H for http://www.hypercloak.com/
"இந்த வீடியோவை உங்கள் நாட்டிலிருந்த பார்க்க முடியாது. மன்னிச்சுக்கோங்கோ" என்று கடுப்பேத்தும்போது இவரின் கைதான் உதவுகிறது. இலங்கையில இப்ப வேறதேவைக்குப் பயன்படுத்தினால் அதுக்கு நான் என்ன செய்யிறது? :-|

I for http://www.ilike.com/
ஆங்கிலப் பாடல்களும் சிலபல தமிழ் ஆல்பங்களையும் கேட்டு இரசிக்கலாம். நல்லாயிருக்கு.

J for http://jackiesekar.blogspot.com/
J ஐ தட்டச்ச இதுதான் வருது. "சாண்ட்விச் அன்ட் நான்வெஜ்" எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. :-D

K for http://keepvid.com/
சொந்தக் கணிணியா இருந்தா இணையப்பக்கத்திலிருக்கும் வீடியோக்களை தரவிறக்க ஏராளமான மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள். இது போற வழியில உதவினாலும் உதவும்.

M for http://www.megadownload.net/
காசுகுடுத்து வாங்குறத விட இந்த , தேடிப்பிடிச்சு தரவிறக்கிறதே ஒரு சுகம்தான்.

N for http://naayakan.blogspot.com/
உங்களுக்கு நீங்களே பொறுப்பு. பதிவுகளின் அரைவாசியில் தலை கிறுகிறுத்தால் அப்படியே ஜாக்கிசேகரோட நான்வெஜ்க்கு தாவுறது நலம்.

O for http://www.onemorelevel.com/
நிரம்ப போர் அடிக்குதா?... நீங்க Action, Classics, Puzzle, Sports, Strategy and Trivia இல எது. போய் ஜமாய்ங்கோ.

P for http://portableapps.com/
யூஎஸ்பி போர்ட் இல்லாத கணிணியும் இல்லை. யூஎஸ்பி இல்லாத இளைஞரும் இல்லை.

R for http://www.raaga.com/channels/tamil/
இசையால் வசமாகா இதயம் உளதோ...

S for http://www.simplepassword.com/
என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒட்டி உறவாடும் ஒரு இணையப் பக்கம். I am now a fear free man. :))

T for http://www.technotraits.com/2008/08/22-incredibly-useful-windows-shortcuts/
என்னுடைய புக்மார்க்குகளில் ஒன்று. உதவுமய்யா உதவும்.

V for http://www.vikatan.com/
இலங்கையில இந்தப் புத்தகத்தை வச்சிருந்தால் எம்மை இழக்கச் சந்தர்ப்பம் உண்டு. :-(

W for http://www.webook.com/
ஆங்கிலத்தில ஏதாவது எழுதி எழுத்தாளரா வரவேண்டும் என்ற அவா எங்கேயோ ஒளிந்திருக்கிறதா?

Y for http://www.santosha.com/asanas/
யோகாவின் எல்லா ஆசனங்களையும் படங்களுடன் கூடிய விளக்கங்களோடு பெற. சிலருக்கு மிக உபயோகமாக இருக்கும்.

Z for http://www.zamzar.com
எந்தவிதமான Document, Music, Video, Image மற்றும் Compressssed வடிவங்களையும் (formats) வேறு வடிவங்களுக்கு மாற்றித் தரும். Bookmark பண்ணி வச்சுக் கொள்ளுங்கோ. தேவையான நேரம் கைகுடுக்கேக்க நிச்சயமா மகிழ்வீர்கள்.

யாரையும் இந்தத் தொடர்பதிவுக்கு மாட்டுறதா இல்லை. கும்முவீங்க எண்டு தெரியும்.

பி.கு : சுபானு அவர்கள் சுவராசிய வலைப்பதிவர் விருது வழங்கும் தொடர் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். A for Apple இனையே பதின்மூன்று மாதம் கடந்து போடுகிறேன். இதை எப்ப பதிவிடுகிறேனோ எனக்கே தெரியாது. :-)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ (Aka) கௌபாய்மது

 

ஒவ்வொருவருக்கும் தனித் திரட்டி
"தனியொரு மனிதனுக்கு திரட்டி இல்லையெனின் இந்த ஜகத்தையே அழித்துடுவோம்"

பாரதி இன்றிருந்தால் பாடியிருப்பார். ஆச்சரியப்படுவதற்கிங்கொன்றுமில்லை. அந்த அளவுக்கு "நாளொரு திரட்டியும் பொழுதொரு மகுடமுமாக" தமிழ் வலையுலகம் பெருமிதம் அடைந்துகொண்டிருக்கிறது.

அதனால் பிளாக்கரில் நீங்கள் எவ்வாறு நீங்கள் விரும்பிய பெயரில் வலைப்பதிவை உருவாக்கலாமோ அவ்வாறே நண்பர் நிமலபிரகாஷன் உங்கள் விருப்பப் பெயரில் திரட்டி உருவாக்க சந்தர்ப்பம் வழங்க எண்ணியுள்ளார்.

சொந்தப் பதிவுகளையும் திரட்டி, மாறி மாறித் திரட்டி, திரட்டிகளையும் திரட்டி செத்துச் செத்து விளையாடுவோம்
வேட்டைக்காரன் ஓடவேண்டும்.
தியேட்டரை விட்டு அல்ல.. உண்மையாகவே ஓடவேண்டும் என்பது விகடன் வாசகர் ஒருவரின் வாழ்வாதாரப் பிரச்சினை.

ஒரு காட்டுல மான் எப்போ தூங்கும், சிங்கம் எப்போ தூங்கும்னு தெரிஞ்சுக்காம வேட்டைக்காரன் தூங்க முடியாது. நம்ம 'வேட்டைக்காரன்' நாட்டுக்குள்ள சட்டத்தைத் தூங்கவிடாமல் குற்றத்தை வேட்டையாடி ஒழிக்கிறவன்!'' - இயக்குநர் பாபுசிவன் பேச்சில் டெடர் காட்டுகிறார்.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சாதா மனிதனான் விஜய் கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்து வேட்டையாடுவதே இதன் ஸ்பெஷல் என அணுகுண்டை உச்சந்தலையில் போடுகிறார்.

இந்தப் படம் ஓடவேண்டும். இல்லாவிட்டால் விஜய் உடனடியாக அரசியலில் இறங்கிவிடுவார் என்பதே அந்த வாசகரின் கவலையும் பிரச்சினையுமாகும்.
அனாமதேயங்களின் கொசுத்தொல்லை
வழமைபோல அநாமதேயங்களின் தொல்லை(???) அதிகமாக இருப்பதாக ஏராளமான புகார் வந்துள்ளதாகவும், அதனைப் புலனாய்வு செயய யாரையாவது நாடவேண்டுமெனவும் சி.ஐ.டி டிப்பார்ட்மெண்ட் கூறுகிறது.

அநாமதேங்களின் பின்னூட்டங்கள் ஒரு பிரச்சினையாக எனக்குத் தெரியவில்லை. யாதொரு அநாமதேயமும் போய் எனது பெயரில் யாருக்காவது பின்னூட்டம் போட்டால் அதை நானே போட்டதாக எடுத்துக்கொள்வது அந்த வலைப்பதிவரின் நிறைவுத்தன்மையை (maturity) கேள்விக்குறியாக்குவதாகவே எனக்குப் படுகிறது.

அநாமதேயம் வந்து எனது பதிவில் "மது நாயே... யூனிவர்சிட்டியில் நீ அடித்த கூத்துக்கள் எனக்குத் தெரியாதா?" என்று பின்னூட்டமி்ட்டால் அதைப் பற்றி நான் எதற்கு கவலைப் படவேண்டும். அது உண்மையாக இருந்தாலும் ஏனதற்கு நான் பதிலிறுக்க வேண்டும்.

அநாமதேயங்களின் வசைகளை கண்டும் காணாது விடும் மனப்பாங்கு இருந்தால் அதிக தடவைகள் அதில் சுவாரசியமே கண்டு கொள்வீர்கள். சில பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கும். அநாமதேயங்களின் பங்கு அதில் அதிகமாக இருக்கும்.

பாவிக்கும் வார்த்தைகள் தப்பாகப் போகும்போது அநாமதேய தெரிவை மூடிவிடப் பரிசீலிக்கலாம். இது எனது பக்க உணர்வு... அவ்வளவுதான்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 





ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

மின்சாரத்தின் பயங்கரம் பற்றிய ஒரு சலனப்படம்
இதை எனக்கு என் நண்பனொருத்தன் அனுப்பியிருந்தான். பார்த்தபின் அதிர்ச்சியாக இருந்தது. யூடியூப்பில் இது சம்மந்தமாகத் தேடினேன் கிடைக்கக் கஷ்டமாக இருந்தது. இந்த வீடியோ நிறையப் பேரினைச் சென்றடைந்தால் நல்லது. மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்யும்போதும் அதுசம்மந்தமான கருவிகளை பயன்படுத்தும்போதம் அவதானமாகச் செய்ய இந்த வீடியோவின் ஞாபகம் உதவிசெய்யும் என்பதில் தவறேயில்லை.


யூடியூப்பி்ல் ஏற்ற முயற்சித்தேன். தடுக்கிறார்கள். கடிதம் எழுதி கேட்கவேண்டும் என்ன பிரச்சினை என.

மேலும் இது கடந்த மே மாதம் டெல்லியில் நடந்ததாகக் கூறுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாம். :'(


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று)
பாலியல் வல்லுறவு என்ற சொல்லைவிட கற்பழிப்பு என்ற சொல்லையே அதிகம் கேட்டிருப்போம்; கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளும் மலிந்து கற்பழிப்பு என்ற சொல்லையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. கற்பு(??) என்பது பெண்ணுக்குரியது, ஒரு பெண்தான் கற்பழிக்கப்படலாம் என ஆண்டாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். முன்னைய வரியை காரண காரியங்களோடு சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் சொல்ல வந்தது இதுவல்ல. நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றைத் தவறானதென்கிறேன். மேலும் இவற்றை அறியவேண்டிய தேவையும் இருப்பதால் இங்கே கூற விளைகிறேன்.

நம்பிக்கை ஒன்று : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதில்லை.
விளக்கம் : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியும்; ஆளாகிறார்கள். ஆண்களின் தோற்றம், தொழில், உருவம், பலம், இனம், பாலியல் விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இராணுவத்தில், சிறையில், பூட்டிய அறையில், பொது கழிப்பிடங்களில், தொழில் செய்யும் இடங்களில், விடுதிகளில் என்று எங்குமே ஒரு ஆணின் மீதான பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படலாம்.
ஆண்களின் மீதான வல்லுறவின் போது, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண், பெண்கள் காட்டும் எதிர்ப்பைக்கூட காட்டாததான நிகழ்வுகளே அதிகம் உள்ளன. அல்லது அவன் எதிர்ப்பைக்காட்ட முடியாத அளவுக்கு உறைந்து போய்விடுகிறான் இவ்வாறான் ஒன்றை எதிர்பார்க்காததால்.

நம்பிக்கை இரண்டு : ஓரினச் சேர்க்கை (Homo-sexual) ஆண்கள் மட்டுமே பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.
விளக்கம் : ஓரினச்சேர்க்கை ஆண்களே பாலியல் வல்லுறவு செய்பவர்களின் அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்களின் அதிகமான இலக்காக இருக்கின்ற போதிலும் எதிரினச் சேர்க்கை (Hetro-sexual) ஆண்களும் பலவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்படும் ஆண்களில் 40 வீதமானவர்கள் எதிரினச் சேர்க்கை ஆண்களே.

நம்பிக்கை மூன்று : ஓரினச் சேர்க்கை ஆணொருவரே இன்னொரு ஆணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்.
விளக்கம் : ஆண் பாலியல் வல்லுறவு புரிந்த ஆண்களில் பலர் எதிரினச் சேர்க்கை ஆண்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரினச் சேர்க்கை ஆணொருவர் ஒரு பெண்ணையோ ஆணையோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது அவர் தான் பெண் மீது வன்புணர்வதாகவே யோசித்துக்கொள்வார். மேலும் ஆண்கள் மீதான் வல்லுறவின் போது அவரது மேலாதிக்கமும் அதிகமாக இருப்பதாக சந்தோசம் கொள்வார்.
இங்கே ஒரு கருத்துத் தெளிவாகிறது. அதாவது பாலியல் வல்லுறவு என்பது அதிகமாக கோபம், மேலாதிக்கம், கொடூரம், கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறிதளவு பாலியல் உணர்வாலுமே நடக்கின்றது.

பாலியல் வல்லுறவும் ஆண்களும்(இரண்டு)
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 


ஜிமெயில் நுட்பம்
ஜிமெயிலின் சக்திவாய்ந்த இன்னொரு அம்சம்தான் "Search Mail". மடல்கள் வரும்போது அனைத்தையும் வாசிக்கமுடிவதில்லை. சிலவற்றை பின்னர் வாசிப்போம் என்று (பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்குக) விட்டுவிட்டு எங்கே போச்சுடா என்று தேடுவோம். ஜிமெயில் ஏலவே உள்ள அதாவது முன் பக்கத்தில் தெரியாத வாசிக்காத மடல்களை எவ்வாறு தேடி எடுப்பது என குழம்பியிருப்போம். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியதுதான் "Search Mail" அம்சம்.

"Search Mail" பொத்தானுக்கு முன்னாலுள்ள எழுத்து வெளியில் "is:unread" என மேற்கோட்குறிகள் இல்லாது தட்டச்சிவிட்டு பொத்தானை அமுக்கிவிடுங்கள். வாசிக்காத மடல்கள் அனைத்தும் டாண் என்று வந்து சிரிக்கும்.


கலகம்.காம் கலகம் விளைவிக்கிறதா?
கலகம்.காம் தமிழர்களுக்கு எதிரானது; அது பற்றி அவதானமாயிருங்கள். குளோபல் தமிழ் நியூஸ் உரிமையாளர் யார்; இவர் ஏன் சிங்கள மொழிக்கென ஒரு பகுதியை வைத்துள்ளார். NTamil நிரல்கள் அபாயகரமானவையா? சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுக்களைத் திருடுகின்றனரா? நான் செல்லும் இந்த இணையப்பக்கம் பாதுகாப்பானதா?

இவ்வாறான கேள்விகளும் குழப்பங்களும் எம்மைச்சுற்றிக்கொண்டிருக்கின்றன். இவை பற்றி அவதானமாக இருத்தலும் அவசியமாகின்றது. ஏனெனில் இவை எமது அந்தரங்கம் சம்மந்தமானது; சிலவேளைகளில் எமது உயிர் சம்மந்தமானது (இலங்கையில் உள்ளவர்களுக்கு). தமிழச்சியின் வலைப்பக்கம் திருடப்படதிலிருந்து திலீபனின் வலைப்பக்கம் முடக்கப்பட்டது வரை சிலர் பீதி கிள்ப்புவதும், சிலர் பீதி அடைவதும் இயல்பாகவே நடந்தேறுகின்றன.
நீங்கள் இணைய உலாவு நிலையங்களுக்குச் சென்றால் உங்களது கடவுச்சொற்கள், கடனட்டை இலக்கங்கள் போன்றவற்றை திருடுவதற்கு அவர்கள் நீங்கள் பாவிக்கும் கணிணியிலேயே சில மென்பொருட்களை தயார்செய்யது விட்டிருப்பார்கள். ஆனால் இணையத்தில் குறித்த ஒரு பக்கத்திற்குச் செல்லும்போது உங்களது விபரங்களை திருடுவதற்கான செயற்பாடு ஏறத்தாழ முற்றிலும் ஜாவாஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் பிளாஷ் போன்றவற்றாலேயே ஏற்படுத்தப்படுகிறது.

அதாவது உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலையில் வைத்தால் இந்த தாக்குதல்களை நிறுத்தலாம். உலாவியிலுள்ல option இல் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலைக்கு கொணரலாம். ஆனால் அங்கேயும் பிரச்சினை உளது. எங்கள் கூகுள் ஆண்டவரும் அவரது சொந்த பந்தங்களும் ஜாவாஸ்கிரிப்ட செயற்படுநிலையில் இருந்தாலன்றி இயங்க மாட்டார்கள். இது கூகுளுக்கென்றல்லாது வேறு பலப் பல இணையப் பக்கங்களுக்குப் பொருந்தும்.

அப்போ என்ன செய்வது. அதற்காக இருப்பதுதான் NoScript பயர்பாக்ஸ் Add-on. அதனை இங்கே இறக்கலாம். இந்த NoScript add-on இனை நிறுவிய பின்னர் நீங்கள் குறித்த இணையப் பக்கங்களுக்கு முற்றிலுமாகவோ பகுதியாகவோ ஜாவாஸ்கிரிப்டை அனுமதிக்கலாம். கலகம்.காம் கலகம் தருமென நினைத்தால் அப்பக்கத்திற்கு அனுமதிக்காது விடலாம். ஆரம்ப இயல்பாக இந்த add-on எந்தப் பக்கத்திற்கும் ஜாவாஸ்கிரிப்டை அனுமதிப்பதில்லை. ப்ளாஷ் உள்ளடக்கங்களையும் செயற்படா நிலையில் வைத்து உங்களது அனுமதியில் மட்டும் செயற்பட வைக்கும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். என்னடா இது ஒவ்வொரு பக்கத்திற்கும் வந்து Javascript not allowed என்று சொல்கிறதே என்று. ஒரு முறை அனுமதி கொடுத்தீர்களானால் பின்னர் அந்தப் பக்கத்திற்குத் தொல்லைதாராது. ஆனால் போகப் போக பழகிவிடும்.

ஆறுபணத்துக் குதிரையும் வேணும்; ஆறு கடக்கப் பாயவும் வேணும் எண்டா ஒண்டும் பண்ணமுடியாது. :-D

பி.கு : இங்கு நான் கலகம்.காம், NTamil பெயர்களைப் பாவித்திருப்பது வலைப்பதிவுலகில் அதைப்பற்றிய கதைகள் உலாவுவதால் மட்டுமே. தனிப்பட்ட ரீதியில் நான் எந்த தாக்குதல் அறிகுறியும் இவற்றிலிருந்து பெற்றதில்லை. கூடுதல் தகவலாக நான் இவற்றுக்கு இன்னும் ஒருபோதும் சென்றதில்லை. :-)

NoScript இணைய முகவரி : http://noscript.net/
NoScript add-on முகவரி : https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
தெரிந்தால் சொல்லுங்கோ
Text box இற்கு சிறப்பான தமிழ் வார்த்தை என்ன? எழுத்து வெளி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அப்படியே Add-on க்கும் என்ன தமிழ் வார்த்தை. முந்திப் பாவித்தேன் முற்றிலும் மறந்துவிட்டேன் :-(

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கணிணியும் மயிரும்
கணிணி முன்னால் நிறைய நேரம் இருந்தால் (இது சும்மா இருக்கிறதில்லை, அதைப் பாவிக்குறதுதான்) தலை மயிர அதிகமாக உதிரும் என்பது உண்மையெனினும் அதற்கான காரணம் கணிணிப் பாவனையல்ல. சரியான உறக்கமின்மை, ஓய்வின்மை, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தமே காரணங்கள்.


இறந்தபின் மயிர் வளருமா?
இதற்கான விடை இந்த நேரத்தில் பலபேருடைய ஐயத்தை தீர்த்துவைக்கும் என்பதாலும், அநேகமானோர் இந்தக் கேள்விக்கான விடை பற்றிய குழப்பத்தை நீண்டகாலமாகவே கொண்டிருப்பதாலும் அவசியமாகிறது.

மயிர் என்பது புரோட்டீனாலான ஒரு இழை. அதன் வளர்ச்சிக்கான செயற்பாடான வளர்சிதை மாற்றத்துக்கான (metabolism) ஊட்டப்பொருட்கள் (nutrient) இன்றி அது வளராது. நகத்தின் வளர்ச்சிக்கும் இதுவே செயற்பாடு.

இறந்தபின் நீர் உலர்தலாலும் சுருங்குதலாலும் முகத்தில் ஏலவே இருந்த தாடியோ மீசையோ வளர்ந்தது போலவும், தலைமயிர் நீண்டது போல் தெரிவதும் ஒரு மாயையே. நீரினுள் கிடக்கும் இறந்த உடல்களுக்கு இந்த மாயையும் தெரியாது என்பதைக் கவனத்திற் கொள்க.

விரல் நுனி சுருங்கி உலர்வதால் இறந்த உடலில் நகம் வளர்வது போல் தெரிவதும் ஒரு செயற்பாடே. இறந்த பின் இரத்த ஓட்டமின்றி எந்தவித ஊட்டப்பொருட்களும் எந்தவித வளர்சிதை மாற்றங்களுக்கும் செலுத்தப்படாது என்பதால் இறந்தபி்ன் மயிரோ நகமோ வளர்வது இல்லை.
மயிர்ச் சந்தேகம்
"சும்மா மசிர்க் கதை கதையாத" எனப் பாவிப்பதிலிரும் "என்ன மயிரா போச்சு" என்பதிலும் மயிரானது தாழ்நிலைப் பொருளாகவும் உயர்நிலைப் பொருளாகவும் பாவிக்கப்படுவதன் காரணம் என்ன? :-) யாராவது பின்னூட்டமிடுங்கோ தெரிந்தால்.

தலைமுடி உதிர்தல் கவலைப்படுதற்குரிய நிகழ்வா?
ஒவ்வொருநாளும் முழுகும்போதும், தலைவாரும்போதும் அடப்பாவி இவ்வளவு மயிர் உதிர்கின்றதே என்ற கவலை பெண்களுக்கும் இருக்கின்றதெனினும் ஆண்களுக்கு அதிகம்தான். இந்த அர்த்தமில்லாக் கவலையால் வரும் மன உளைச்சலால் மேலும் அதிகமாக மயிர் உதிரும் என்பதை யாரும் உணர்வதில்லை.

சாதாரண் மயிருதிர்வு பற்றி அறிந்திருத்தல் மிக்க அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக 10 தொடக்கம் 100 மயிர்கள் உதிர்ந்துகொண்டேயிருக்கும். இது ஒரு இயற்கையான சாதாரண நிகழ்வு. அப்போ முற்றிலும் வழுக்கையானவர்களுக்கு இது நிகழ்வதில்லையே என்று கேட்டால் அப்பாவித்தனமாக முகத்தை வைப்பதைத் தவிர வேறொன்றுமறியேன். இந்தச் சாதாரண நிகழ்வுக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் அவசியமில்லை. உலகம் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல இதுவும் நடந்துகொண்டே இருக்கும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது