நா

தமிழ் மென்பொருட்கள் பாஸ்வேர்டை திருடுகின்றன. ஆனால் அந்த மென்பொருட்கள் எதுவென்று நீங்களாகவே ஜோஸ்யம் பார்த்துக் கண்டுக்கோங்க என்று வந்த இடுகைச் செய்தியால் தமிழ் வலையுலகமே (கொஞ்சப் பேர் தானுங்க..தமிழ்ல இத உயர்வு நவிற்சி என்பாங்க) ஆடிப்போய் பீதிபிடித்திருந்து. இவ்வாறான பரபரப்புகளை என்னென்ன வழியில் ஏற்படுத்தலாம் என சில ஐடியாக்கள் இதோ...

ஐடியா நம்பர் 1. தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் திரட்டி ஒன்று நீங்கள் இடும் இடுகைகளைத் திரட்டும்போது உங்களது அக்கவுண்ட் பெயரையும், பாஸ்வேர்டையும் சேர்த்துத் திரட்டுகிறது. நான் அத்திரட்டியின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. எனினும் அத்திரட்டி தகர வரிசையில் ஆரம்பிக்கும் பெயரைக் கொண்டது. எனவே அத்திரட்டியிலிருந்து உங்களது பதிவை நீக்குமாறு கோருகிறேன். நீக்காது விட்டுவிட்டு பின்னர் "குய்யோ, முறையோ" என கலங்கிநின்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஐடியா நம்பர் 2. நீங்கள் அடிக்கடி பார்வையிடும் வலைப்பதிவு ஒன்று, அதை நீங்கள் பார்வையிட்ட பின்பு நீங்கள் உலாவியில் பயன்படுத்தும் அக்கவுண்ட் பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் வங்கி கணக்கிலக்கங்கள் போன்றவற்றை உங்கள் கீபோர்டின் கீஸ்றோக்குகளை வைத்து திருடுகிறது. அந்து வலைப்பதிவை மூடினாலும், Cache மற்றும் Cookies களில் தொடர்ந்து நின்று இந்த செயலை செய்வதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவ்வலைப்பதிவு எதுவென நீங்கள் கேட்டாலும் சொல்லமாட்டேன். ஆனாலும் உங்கள் நன்மைக்காக- அதன் முகவரி .blogspot.com என முடிவதுடன் தமிழ் எழுத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்குத் தீர்வாக இணையத்தொடர்பு இல்லாத கணினியிலிருந்து ஒரு நோட்பாட்டில் உங்கள் அக்கவுண்ட் பெயர்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் வங்கி இல்க்கங்களை தட்டச்சி சேமித்து உங்கள் கணினியில் வைத்துக்கொள்ளுங்கள். இணையத்தொடர்புள்ள கணினி எனின் அப்போதே உங்கள் அக்கவுண்ட் பெயர்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் வங்கி இலக்கங்களை திருடிவிடுவார்கள்.

ஐடியா நம்பர் 3. Google கம்பனியில் நீண்ட காலமாக வேலை செய்யும் எனது நண்பர் ஒருவர் (அவர் தனது பெயரை வெளிப்படுத்தவேண்டாம் எனக் கூறியிருக்கிறார்), தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம் வேகமாக அதிகரித்துச் செல்லவதாகவும், அவற்றில் அலசி ஆராயப்படும் கருத்துக்களால் தெளிவுபிறந்து தமிழர்கள் உலகை கொண்டுநடத்தும் நிலைக்கு வந்துவிடுவார்களோ எனப் பயந்து ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு தமிழ்ப்பதிவை தெரிவுசெய்து வலையுலகத்திலிருந்தே நீக்குகிறார்கள் எனக் கூறியிருந்தார். இதற்கு எந்தப் பதிவை நீக்கவேண்டுமென, தமிழ் எழுதுபொருள் ஒன்று கூகுளுக்கு உதவுவது எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். தமிழச்சியின் பதிவும் இவ்வாறு கூகுளால் நீக்கப்பட்டதொன்றே எனக்கூறுகின்றேன். இதற்குத் தீர்வாக யாரும் ஜீமெயிலையோ, புளெக்கரையோ பாவிக்கவேண்டாமெனக் கேட்கிறேன்.

ஐடியா நம்பர் 4. பயர்பாக்ஸ் உலவியைப் பாவிக்கும்போது உங்களது வெப்காமினது இணைப்பை கணினியிலிருந்து கழற்றிவிடுங்கள். பயர்பாக்ஸ் உலாவியானது வெப்காம் on இல் இருந்தால், உங்களை வீடியோ செய்து அமெரிக்காவில் இயங்கும் செக்ஸ் பற்றிய வீடியோக்களைக் கொண்ட இணையத்தளமொன்றுக்கு விற்றுவிடுகிறது. எனது நண்பர்கள் இருவர் (அவர்களும் வலைப்பதிவு வைத்தருக்கிறார்கள் எனினும அவர்களின் பெயரை நான் கூறுவது நட்புக்குச் செய்யும் துரோகம்) அவ்விணயத்தளத்தில் தங்கள் வீடியோவைக் கண்டு தற்கொலைக்கு முயற்சித்தது போல் நீங்களும் செய்யவேண்டாம்.

ஐடியா நம்பர் 5. நீங்கள் திரட்டிகளினூடு ஒவ்வொரு வலைப்பூவாக வாசிப்பவரா? அவதானம்! தமிழ்ப்பதிவுகளின் திரட்டி ஒன்று நீங்கள் அதிக நேரம் கணினியில் இருப்பவர்களா எனக்கண்டறிந்து, உங்கள் IP address இனை வைத்து உங்க இடத்தைக் கண்டுபிடித்து அங்கே தங்கள் ஆட்களை அனுப்பி வீட்டிலுள்ள பொருட்களை களவாடுகிறது. நீங்கள் கணினியில் இருக்கும்போதே மற்ற அறைகளுக்குள் புகுந்து பொருட்களை வழித்துச் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு எல்லா நாடுகளிலும் ஆட்கள் இருப்பதாக அறிகிறேன். ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.

இவற்றுக்கு எதிர்ப்பரபரப்பை ஏற்படுத்த விரும்புவோர், இப்பதிவை இட்டது நானாக இருந்தால் "கௌபாய்மதுவுக்கு மூன்று கேள்விகள்", "கூகுளில் வேலைசெய்யும் கௌபாய்மதுவின் நண்பனுக்கு நான்கு கேள்விகள்","தகரத்தில் ஆரம்பிக்கும் திரட்டிக்கு ஐந்து கேள்விகள்" என ஒரே நேரத்தில் பல இடுகைகளை இட்டு அசத்தலாம்.

பி.கு: தகர வரிசை என்பது த, தா, தி, தீ,........, தௌ என பன்னிரெண்டு எழுத்துக்களுமாகும்.

முக்கிய குறிப்பு: வாசகர்களே, இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. சும்மா ஒரு ஜாலிக்காக பதிகிறேன். ஒருவரது இடுகைக்கு நையாண்டியான பதிவிடுவது ஒன்றும் புதிதல்லவே. இப்பதிவு எல்லை மீறியிருக்கிறது என நீங்கள் நினைத்தால் பின்னூட்டமிடுங்கள்..நீக்கிவிடுகிறேன் - கௌபாய்மது

 

சில வேளைகளில் உங்க பெண்தோழி(அதாங்க கேர்ள்பிரண்ட்) எதுக்கெடுத்தாலும் கூச்ச சுபாவமா இருந்து அந்த தோழியுடனான நட்பு உடைஞ்சு மனமொடிஞ்சு போயிருங்கிறீங்களா? வாங்க எப்படி அப்படிப்பட்ட பெண்களுடன் நட்பை நீடிக்கச் செய்யிறது என்று பார்ப்போம்.

1. முதல்ல எந்தெந்த வகையான் கூச்ச சுபாவம் உங்க தோழிக்கு இருக்கு என்று கணித்துக் கொள்ளுங்க.

  • நீங்க கதைக்கும்போது உங்க தோழி பயந்த மாதிரி இருந்தா அல்லது பின்னாடி பின்னாடி போனா அல்லது வேறெங்கோ பார்த்துக்கொண்டு கதைத்தா தோழி 'கதைத்தலுக்கு கூச்சம் உடையவர்'.
  • உங்களோடு சரளமாக கதைக்கிறா, ஆனா தனது கடந்தகாலம் பற்றி மூச்சுகூட விடுவதாக இல்லை எனின் தோழி 'வெளிப்படையா இருக்க கூச்ச சுபாவம் உடையவர்'. இதன்போது நீங்க, உங்க தோழி தான் யார் என்பதை மறைப்பது போல உணர்வீர்கள். ஆனா உங்க தோழியின் கடந்த காலத்தில அவ சிலவேளைகளில் எங்காவது காயப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி கதைக்க அவ பயப்படலாம்.
  • நீங்க உங்க தோழியை தொடும்போது அவ பின்வாங்கினாலோ அல்லது எதிர்மறையான சமிக்ஞை (அதாங்க சிக்னல்) யை காட்டினாலோ, தோழி 'உடல் ரீதியா கூச்ச சுபாவம் உடையவர்'.
2. ஏன் உங்க தோழி கூச்ச சுபாவமுடையவர் என ஆழ்ந்து சிந்தியுங்கள். அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். காரணத்தை அறிந்த பின் தோழியுடன் அதைப்பற்றி கதையுங்கள்.

3. உங்க தோழி பயப்படாத வகையில் மென்மையா கதையுங்க(முரட்டு ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்பதெல்லாம் கப்ஸா. சினிமாவுக்குத்தான் பொருந்தும்).
  • நீங்க உங்க காதலை தோழியிடம் வெளிப்படுத்தப் போறீங்க என்றால் ரொம்ப ஜாக்கிரதையா, நீங்க கதைக்கிற நேரம் சரியானதா, அவ நீங்க கதைக்கிறதில ஆர்வமா இருக்கிறாரா, அவ பதிலளிக்க விரும்புகிறாரா என்றெல்லாம் அவதானியுங்கள்.(இந்த ஜட்ச்மெண்ட் பிழைச்சா அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க.)
  • உங்கமேல பழிபோடாத வகையிலும், உங்க மனநிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவாறும் ஒரு கேள்வியோட உங்க உரையாடலை ஆரம்பியுங்க. "ஏன் நீங்க என்னோட கதைக்கிறதே இல்லை?" போன்ற அல்பமான கேள்விகளை விடுத்து "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?" என்று கேட்பது நலம்.
4. தோழியோட நம்பிக்கைக்கு பாத்திரமானவரா இருக்க முயற்சி பண்ணுங்க. (முயற்சியே ஒழிய நாடகமெல்லாம் போட்டு நடிச்சுடாதேங்க. பின்னாளில் ரொம்ப பாதிச்சுடும்.)
  • வெளிப்படையாவும், உண்மையாவும் கதையுங்க. நீங்க பின்பால் (Pinball) விளையாடியிருக்கிறீங்களா? அதிலுள்ளதுபோல இந்த வகையான் உரையாடல் உங்களுக்கு போனஸ் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்.
5. நீ்ங்க இருவரும் உரையாடல்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபின், தொடுகைரீதியான உறவுக்கு போங்க. மென்மையாகவும், அரவணைப்புடனும், நேர்மையுடனும் தோழிய நெருங்குங்க. அவங்களோட முன்னங்கையை மெதுவாகப் பிடித்து நல்ல விடயங்களை பற்றி, உங்க எதிர்காலம் பற்றி ரொம்ப உரையாடுங்க.

6. இதுக்குமேல என்னங்க? தோழியோட நல்ல வாழ்கையை ஆரம்பிச்சாச்சு. சந்தோசமா இருங்க.


பி.கு:
  1. உங்க தோழியோட பெயர் ரம்யாவா இருக்கப்போய் "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?"ன்னு கேட்டு காரியத்தை கெடுத்துடாதீங்க. சந்தியான்னு வர்ற இடத்தில உங்க தோழியோட பெயரை போட்டுக்கோங்க. :)
  2. இந்த ஆறு படிமுறைக்கப்புறம் அதாவது திருமண வாழ்க்கையில பிரச்சினை ~X( வர்றப்போ "எங்கடா அந்த பயல் கௌபாய்மது, நம்பள மாட்டிவிட்டுட்டானே"ன்னு கூச்சல் போடாதீங்க.
  3. இந்த அட்டு பிகருக்கு என்னென்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு:pன்னு ஆஹா எப்.எம்ல வர்ற விளம்பரம் மாதிரி feel பண்ணாதீங்க.

 

கீழே இருக்கிற செய்தியை முதல்ல பாருங்கோ. தினமணியில் வந்தது. வாசிச்சவுடன ஏதோ கொஞ்சம் எழுதவேணும்போல இருந்தது.


(படத்தில் மவுஸை சொடுக்குங்கோ, இது வேறு பக்கததுக்குப் போகாது)

அய்யப்பனுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொணடு, ரவி விரைவா குணமடையவேணும் எனவும் நினைத்துக்கொண்டு இதைபற்றி கதைக்கப்போறன்.

இந்த சம்பவம் நடந்தபின் அந்த ஊரில் யாரார் என்னென்னவெல்லாம் கதைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்,

"அம்மனுக்கு ஏதோ நாம் செய்யல, குறை வந்திடு்ச்சி, அதால கொழந்தைய பலி எடுத்துட்டாங்க"

"அப்பன்காரன் போன வருஷம் அம்மனுக்கு செஞ்சிபோட்ட நகையில செப்பு கலந்துபுட்டான், சாமி புள்ளய கொண்டுபோயிடுச்சி"

"இந்த வருஷம் ஊருக்கு ஏதோ பெரிய அழிவு வரப்போவுது, அம்மன் குறி காட்டிட்டா"

"சாமிமேல பக்தி இல்லாம தீமிதிச்சா இப்பிடி ஏதாவது நடக்கும்னு சொன்னேன், கேட்டீங்களா"

நிச்சயமாக இவையும் இன்னும் வேறுவேறாகவும் அந்த ஊர் ஜனங்கள் கதைத்திருப்பார்கள். மறுப்பதற்கு யாரும் இல்லை.

தீமிதித்தல் என்பது சரியானதா? சரியானதாயினும்கூட ஒரு சிறுவயதுப் பாலகனோடு தீயுள் இறங்குவது சரியானதா? இதையெல்லாம் எங்கள் சமூகம் என்றுதான் சிந்தித்து தன்னைத் திருத்திக் கொள்ளப்போகிறதோ!

இப்பிடி தீமிதிக்கிறது பிழை, அதை நிறுத்துங்கோ என ஏதாவது சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினால், அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்.

இதெல்லாம் எங்களுக்கொரு சாபக்கேடு, வேறென்ன.

 

மாலைப்பொழுதா, காலைப்பொழுதா அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இது ஆறு சிறுவர்களுக்கும் ஆனந்தப்பொழுது, அனுபவிக்க முடிகிறது. இந்த ஆறு சிறுவர்களும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்; எங்கோ ஒன்றுகூடி இங்கே வந்திருப்பார்கள்; ஆனால் ஒருவன் மட்டும் முன்னதாகவே ஆற்றுக்குள் குதித்து விட்டான்.


(மவுஸ் சுட்டியை படத்தின்மேல் கொண்டுவந்து சிறிது நேரம் வைத்திருங்கள்)

இது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். இந்த மனோநிலை உங்களுக்கும் இருந்திருக்கும். சிறுவர்கள் ஏதாவதொன்று செய்யும்போது, யார் முதலில் செய்கிறார்களோ அவர்தான் அந்தநேரத்து ஹீரோ.

நான் அன்று ஒருநாள் என்னுடைய வீட்டக்கு முன்னால் இருக்க்கின்ற மைதானத்தில் இரண்டு சின்னப் பையன்களுக்கு லன்ச் சீற்றில் பரசூட் விட்டுப் பழக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வீதியால் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று மணியடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பையன்களும் மற்றவரின் முகத்தை மாறிமாறிப் பாத்தார்கள். ‘ஐஸ்கிரீம் வாங்கித்தாங்கோ’ என்று என்னிடம் கேட்போம் என்றுதான். இறுதியில் சின்னப்பையன் சொன்னான் ‘அங்க ஐஸ்கிரீம் வண்டில் போகுது’. எனக்கும் தெரியும் அவ்வீதியால் ஜஸ்கிரீம் வண்டி போகின்றதென்று, ஆனாலும் அவன் கூறியதன் அர்த்தம் தங்களுக்கு வாங்கித் தாங்கோ என்பது புரியாமலா இருக்கும்.

சரியென்று அவன்களுக்கு இரண்டு வாங்கிக்கொடுத்தேன். அவர்கள் அதைச்சுவைத்துக் கொண்டிருந்தவேளை சின்னப்பையன் கூறினான் “நான்தானே முதல்ல சொன்னனான் ஜஸ்கிரீம் வண்டி போகுது என்று”. பெரியவர்கள் இவ்வாறு கூறினால் அது நிச்சம் ஒரு கேலிக்கூத்தே. ஆனால் சிறுவர்களுக்குள் இவ்வாறு யார் முதற்காரணம் எனப்போட்டி நிலவுவது வழமையானதும் ரசிக்கக்கூடியதுமாகும்.

மேலே படத்தில் அழகாக பதிவாக்கப்பட்ட இரம்மியமான சூழ்நிலையுடன் சிறுவர்களின் அந்த இரசிக்கத்தகு மனோபாவமும் பதிவாக்கப்பட்டிருப்பதுதான் அருமை (மேலே பாயும் ஐந்து சிறுவர்களை விடவும் கீழே ஒருவன் முன்னதாகவே பாய்வது உங்கள் கலைக்கண்களுக்குத் தெரிகிறதுதானே!). ஒரு பையன் நிர்வாணமாகக் குதிப்பது மேலும் சூழ்நிலையை இரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இந்தவயதில் ஆபாசமாகத் தெரியாத நிர்வாணம், வயது வரவர ஆபாசமாகத் தெரிவது இயற்கையாலா அல்லது மனிதர்களின் நடத்தையாலா?

 

வணக்கம் வாசிக்கும் எல்லோருக்கும்,

இதோ இன்னொரு வலைப்பூ உங்களுடன் உறவாட ஆரம்பிக்கிறது. வலைப்பூக்களுக்கு நானொன்றும் புதியவனல்ல, ஆனால் இத்தகைய வலைப்பூவை நான் ஆரம்பிப்பது இதுவே முதற்தடவை.

Blog என்றவொன்று உளதாம், Googleகாரன் இலவசமாகக் கொடுக்கின்றானாம் என நண்பர்கள் மூலம் அறிந்து பாய்ந்து சென்று ஒரேநேரத்தில் ஒன்பது Blogகளை உருவாக்கி அதில் ஒன்றைத் தவிர மற்ற யாவற்றுக்கும் பெயராக “On progress…” எனப்போட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நான் http://cowboymathu.blogspot.com என்ற இணைய முகவரியில்தான் எனது முதலாவது வலைப்பூவான “அர்த்தமென்ன பழமொழிக்கு...” இனை உருவாக்கினேன். அதில சில பழமொழிகளின் அர்த்தங்கள் பற்றி சில இடுகைகளை இட்டேன். பல நண்பர்களுக்கு அதன் முகவரியை மின்னஞ்சலிலும், குறுஞ்செய்திச் சேவை (SMS) இலும் அனுப்பி அதனைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைத்து இரண்டு மூன்று பின்னூட்டங்களையும் பெற்று களிப்புற்றேன்.

இவ்வாறு களிப்புற்றிருந்தவேளை ஒர் இனிய நண்பனின் வாய்ச்சொல்லொன்றுதான் என்னை மேலும் ஒன்பது வலைப்பூக்களை ஒரேநேரத்தில் உருவாக்க வைத்தது. வேறொன்றுமில்லை, எனது வலைப்பூவைப் பார்த்த அவன் தானும் http://cowboymathu1.blogspot.com என்ற முகவரியில் ஒரு வலைப்பூவை ஆரம்பித்துவிட்டதாகக் கூறினான். அவ்வளவுதான் “எனது தனித்துவம் பறிபோய்விட்டதே” எனக் கலங்கிநின்றேன். உடனே சென்று அந்த முகவரியைச் சோதித்துப் பார்த்தேன். முகத்திலே ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்! அவன் கூறியது பொய்.

ஆனாலும் அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற மகா கலக்கத்தில் cowboymathu1, cowboymathu2, …….., cowboymathu9 எனஒன்பது வலைப்பூக்களுக்கான முகவரிகளை பெற்றுப் பேருவகை அடைந்தேன். எல்லா வலைப்பூக்களுக்கும் ஒரே பெயர் (Title), அது “On Progress…”; ஒரே விவரணம் (Description), அது “For future use”.

எனினும் எனது முதலாவது வலைப்பூவில் இரண்டாவது இடுகைக்கே யோகன்-பாரிஸிடமிருந்து பின்னூட்டம் வந்து கண்டு ‘ஆகா! எனது வலைப்பூ நாடுகடந்தும் மணம்வீசுகிறேதே’ என பிறவிப் பெரும்பயன் அடைந்தேன். இப்போது அந்த வலைப்பூ செயற்பாட்டில் இல்லையெனினும் முதல் காதல்போல, முதல் முத்தம்போல முதல் வலைப்பூவாக ஞாபத்துக்காக அழிக்காது வைத்துள்ளேன். ஞானம் பிறந்து மற்ற ஒன்பதினையும் அழித்துவிட்டேன்

பின்னர்தான் எனக்கு பகீயின் ஊரோடி வலைப்பூ யாரோவொரு நண்பன் மூலம் அறிமுகமாகியது. எதோவொரு விதத்தில் அதில் கவரப்பட்டு அதன் வாசகனாகி, அதிலிருந்த தொடுப்புக்களூடு வேறு வலைப்பூக்களுக்கும் சென்று, அவற்றினூடு தமிழ்மணத்துக்குச் சென்று ‘ஆகா இப்படியெல்லாம் தமிழ் வலைப்பூக்களினூடு ஒரு புரட்சியே நடந்துகொண்டிருக்கிறதே’ என சிலாகித்து நானும் பங்காற்றுவோம் எனும் எண்ணத்தின் விளைவே நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது.

இந்த வலைப்பூவுக்கான அட்டைப்பலகையை எனக்கானதாய் மாற்றும் முயற்சி என்னுடைய மூன்று முழுநாட்களை விழுங்கிவிட்டது. உதவிசெய்த ஊரோடி பகீயிற்கும், உதவிக்குறிப்புக்களை தனது வலைப்பூவினூடு வழங்கிய ரவிசங்கருக்கும், ஆர்வத்தைத் தூண்டிய தமிழ்மணத்துக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது நா இனை அசைக்கத் தொடங்கிவிட்டேன்.