கேள்விகளினூடு தெளிவு பிறக்கிறது. கேள்விகளினூடு மாயைகள் உடைகின்றன. கேள்விகளினூடு எம் இருப்பிற்காக அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றோம். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அருவமானதை ஏன் அவன் என்கிறோம்? போன்ற கேள்விகள் இருப்பிற்கான தேடல்களுக்கு விடை தருகின்றன.
கேள்விகளினூடு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பதொருபுறம் இருக்க, எமக்குச் சார்பான விடைகளுக்காக கேள்விகள் கேட்பதும் எமது வளத்துக்கான படியாகின்து.
மனிதன் சமூக விலங்கு. வாழுமிடமெல்லாம் இன்னொருவருடனான தொடர்பாடல் தொடர்கின்றது. தொடர்பாடலில் வெற்றி பெறுவதில் தங்கியிருக்கிறது எங்கள் உயர்ச்சி. வீட்டில் அப்பாவிடம் காரணம் கூறி காசு பெறவும், பாதகமின்றி கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நேர்முகத்தேர்வொன்றில் வெற்றி பெறவும், நாடுகளுக்கிடையான பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான பதில்களுக்கான சரியான கேள்விகளே வெற்றிபெறச்செய்கின்றன.
* இலகுவான கேள்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
மொழிப்புலமை, அதியுயர் அறிவுத் திறமையான கேள்விகளை விடுத்து அடிப்படையான கேள்விகளிலிருந்து ஆரம்பியுங்கள்.* ஒரு விடயத்தை அறிவதற்கான கேள்வியெனின், குறிப்பிட்டுக் கேளுங்கள்.
கணினி சம்மந்தமாக உங்களுக்கு என்னென்ன தெரியும் எனக்கேட்பதை விடுத்து, உபுண்டுவில் வேலை செய்திருக்கிறீர்களா, ஜாவா மொழி தெரியுமா, இணைய வடிவமைப்பில் எத்தனை வருடம் வேலை செய்திருக்கிறீர்கள் போன்றன உங்களுக்கான விடையை சிறப்பாகப் பெற்றுத்தரும் * உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வி கேட்காதீர்கள்.
எதிராளியின் கேள்விகளோ அல்லது பதில்களோ சிலவேளைகளில் எம்மைப் பொறுமை இழக்கச் செய்யும், கோபத்தைத் தூண்டும். அந்நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கான விடையை இழைக்கும் சந்தர்ப்பம் இங்கே அதிகம். * கேட்கும் கேள்விகள் குறித்தான அறிவை இயலுமானவரை ஏலவே பெற்றிருங்கள்.
சாடைமாடையாக அறிந்ததை வைத்து கேள்விகள் கேட்காதீர்கள். இப்போது தொலைபேசி வரை இணையம் வந்துவிட்டது. கட்டாயம் அவ்விடயம் பற்றி கேள்வி கேட்கத்தான் வேண்டுமெனின் தொலைபேசியூடாக கூகுள் செய்யுங்கள். அறிவைப் பெறுங்கள். பிறகு கேளுங்கள். * அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுங்கள். எதிர்க் கேள்விகளுக்காக சிந்தியுங்கள்.
எதிராளிக்கு நீங்கள் அமையாக தோற்றமளிக்கும்போது, உங்கள் கேள்வியின் மீதான விடையை சிறப்பாகச் சொல்லவேண்டும் என்று மனநிலை உருவாகும். கேள்வி சம்மந்தமான நிறைந்த அறிவும் உங்களுக்கு இருப்பதான தோற்றைத்தை அது உண்டாக்கும். எதிராளியின் மறு கேள்விகளுக்காக இயலுமானவரை சிந்தித்துப் பதிலளியுங்கள். * பெருந்தன்மையோடு கேள்வி கேளுங்கள்
எதிராளியை கீழ்த்தரமாகவோ, கேள்விகுறித்தான அறிவற்றவராகவோ நினைக்கவேண்டாம். பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.நீங்கள் கேட்கும் முறையான கேள்வியில்தான் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும்.
கணியனும், பரதனும் நண்பர்கள். இருவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் மதகுரு ஒருவரிடம் சென்றனர். கணியன் மதகுருவிடம் சென்று 'இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, புகைப்பிடிக்கலாமா?' என்று கேட்டதற்கு 'தவறு மகனே, இறைவனை தூய மனதுடன், தீய செயற்பாடுகளின்றித்தான் பிரார்த்திக்கவேண்டும்' என்றார். பின்னர் பரதன் அதே மதகுருவிடம் சென்று 'நான் புகைபிடித்துக்கொண்டிருக்கும்போது இறைவனைப் பிரார்த்திக்கலாமா?' என்று கேட்டதற்கு, 'தாராளமாக மகனே, இறைவனைப் பிரார்த்திப்பதற்கு காலநேரம் பார்க்கத் தேவையில்லை' என்றார்.
கேள்விகள் கேட்பதில், கேட்கும் முறையில் எம் வளர்ச்சி தங்கியிருக்கிறது.
பி.கு : பதிவு கேள்விகள் சம்மந்தப்பட்டாகையால், இலகுவான விளங்குகைக்காக குட்டிக்கதை மதம், இறைவன் சம்மந்தப்பட்டிருக்கிறது. இறைவன் இருக்கின்றது என்றோ, மதகுரு என்பவர் தூய்மையானவர் என்றோ, பிரார்த்திப்பதால் நாடும் வீடும் நலம்பெறும் என்றோ யாரும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டாம். அவை குறித்தும் கேள்விகளைத் தொடுங்கள். தெளிவு பெறுங்கள்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ - கௌபாய்மது