நா

தன்னையே எரித்துக் காவியமாக்கிய முத்துக்குமரனின் சம்பவம் பற்றிய சிங்கள மக்களின் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் இணையப் பத்திரிகையில் பின்னூட்டங்களாகப் பாருங்கள். அவை ஆங்கில மொழியில் இருப்பதுடன் பின்னூட்டமிட்டவர்களில் சிலர் தமிழர்களும் அடங்குவர்.
இங்கே சென்று பார்க்க.  http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39113 

கூகுள் - CO2 - வெப்பம்
கூகுள் தேடுதல் சுற்றுப் புறச் சூழலைப் பாதிக்கிறது என்ற செய்தி கடந்த மாதத்தில் விடப்பட்டது. அதாவது நாங்கள் செய்யும் இரண்டு கூகுள் தேடுதலானது, ஒரு கோப்பை தேநீருக்கான நீரை கொதிக்கவைக்கும்போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை வெளிவிடும். அதாவது கூகுள் தனது தேடுதல் மேன்மைக்காக பாவிக்கும் கணிணிகள் வெளிவிடும் வெப்பமும் அதனால் வரும் விளைவுமே இது. உறுதிப்படுத்த இங்கே பார்க்க.

நான் கூகுளின் கன்னாபின்னா விசிறி. அவனின்றி அணுவும் அசையாது; கூகுள் இன்றி அவனும் அசையான் என்பது எனது கருத்து. கூகுள் தனது குரோமை சந்தைப்படுத்த செய்யும் வழிமுறைகளில் சிறிது வெறுப்பும் கொண்டவன். மேற்சொன்ன செய்தியை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தர்க்கமாக சிந்திக்கத் தலைப்படுகிறேன்.

ஏதோ மற்றத் தேடுபொறிகளான Yahoo, Live மற்றும் Ask என்பவற்றில் நாங்கள் தேடுதல் செய்ய மறுமுனையில் இருக்கும் நபர் அதைப் பார்த்து காகிதக் கோப்புக்களில் தேடி திரும்ப தட்டச்சி எங்களுக்கு அனுப்புகிறார் என்ற மாதிரியல்லவா இது இருக்கிறது. நல்லா கயிறு விடுறாங்கள். அவர்களும் கணிணிகளையும் தரவுத் தளங்களையும்தான் பாவிக்கிறார்கள். அவையும் வெப்பத்தையும் காபனீரொட்சைட்டையும் வெளிவிடும்தான். ஒரு கோப்பை தேநீருக்காக இல்லாதுவிடினும் முக்கால் கோப்பைக்கானதாக இருக்கும்.

கூகுளின் தேடுமுறைமைக்கான அல்கோறிதம் மிகச்சிறப்பு. அது செயற்படுத்தப்படும்போது நவீன கணிணிகள் தேவைப்படுவதோடு கூடியளவு வெப்பம், காபனீரொட்சைட் வெளிவிடப்படுவது சரியாக இருக்கலாம். ஆனால் கூகுளில் நாங்கள் விரும்பும் விடயத்தை மூன்று முயற்சிகளில் துல்லியமாகப் பெறலாமெனின் மற்றவைகளில் ஐந்து ஆறு முறை முயற்சித்தே ஆகவேண்டும். இப்போது வந்துள்ள கூகுளின் எங்கள் விருப்பத்துக்குரிய முறையில் மாற்றியமைக்கக் கூடிய தேடல் முறை முயற்சிகளை ஒன்றாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


எனக்கு இந்தச் செய்தி சொல்வதென்னமோ இதுதான். கூகுளைப் பாவிக்கும்போது தேடும் முயற்சிகளை குறைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது கூகுள் தேடுதலில் சரியான முடிவுகளைப் பெற சரியான, இலகுவான மற்றும் நுட்பமான ஏராளமான வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதுக்கும் சந்தோசம். சுற்றுப்புறச் சூழலுக்கும் சாதகம்.

"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது".

பிற்குறிப்பு : கூகுள் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் பாறைகளை உருகி வழிந்தோடச்செய்வதாகவும் Yahoo, Live, மற்றும் Ask போன்றன உருகும் நீரை மீண்டும் பனிக்கட்டியாக்குகின்றன என்பது போன்ற கருத்துத் தொனிக்கும் :-) இந்தச் செய்தியை வாசித்தபோது வந்த ஒரு பதிவு இது. உங்கள் கருத்துக்களும் வேண்டும் எனக்கு.

சக்தியைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே கறுப்பு நிற பின்புலத்தைப் பாவித்திருக்கிறேன். ;-)

பிற்சேர்க்கை :
கூகுளின் (உத்தியோகபூர்வமானதில்லையெனத் தெரிகிறது) சக்தி சேமிப்புத் தேடுபொறியானது அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அதிலேயே தேடினால் பிற்காலத்தில நாங்கள் எல்லாவற்றையும் தேடித்திரியவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். இருந்தாலும் WWW.BLACKLE.COM இற்குச் சென்று பார்த்து விடுங்கள்

மதுவதனன் மௌ.

 

மல்டிபிள் செலக்ஷன்

இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். அந்த நேரமெல்லாம் முற்றாக நகலெடுத்து வேர்டிலே ஒட்டி தேவையற்றவற்றை நீக்கி என்று... அந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்.

மல்டிபிள் செலக்சனை விளக்கும் படம்

இதனை நீ்ங்கள் Ctrl விசைய அழுத்தியபடி மௌஸ் சுட்டியால் தேர்வுசெய்வதன் மூலம் அடையமுடியும் (Ctrl + தேர்வு).

"பழகப் பழகப் பயர்பாக்ஸ் இனிக்கும்"

வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்

பதிவிட தாமதம் ஆகிவிட்டதுதான் பரவாயிலை, சொல்லியாக வேண்டும். வாரணம் ஆயிரம் பற்ற நேர்மறையான விமர்சனங்கள் வலையுலகிலும் வந்து போயிருந்தன். எனக்கு அது ஒரு திருப்தியான அனுபவமாகத்தான் இருந்தது.


நானும் இன்னும் மூன்று நண்பர்களும் கொண்கோர்ட் தியேட்டருக்குச் சென்றிருந்தோம். ஏசி குளிர் அன்று கடுமையாக இருந்தது. ஒரு நண்பன் "வானரம் ஆயிரம் எண்டா என்னடா அர்த்தம்" என்று அப்பாவியாய்க் கேட்டதற்கு "அடேய் அது வாரணம் ஆயிரம்டா" (திருப்தி) என்ற கலாய்த்தலுடன் படம் பார்க்க ஆரம்பித்தோம். படத்தைப் பற்றி நான் என்ன வேற சொல்லவேண்டிக் கிடக்குது. ஏலவே பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்களே.

சமீரா ரொம்ப அழகு (திருப்தி). புகைவண்டில் முதல் சந்திப்பில் காட்டும் முகபாவங்கள் இப்போதும் கண்முன்னே. சூர்யா ஒன் மேன் ஆர்மியா படத்த நகர்த்த முயற்சித்திருக்கிறார். என்ன செய்யிறது ஒருவர் இழுத்து தேர் ஓடாதே. அடியே கொல்லுதே பாட்டின்போது நண்பனொருவனின் கால் வழமைக்கு மாறாக கட கட என்று ஆடிக்கொண்டிருந்தது. (ஏசி அவனுக்கு நேரே அடித்துக்கொண்டிருந்தது, பையனால் ஏசியை தாங்க முடியவில்லை).

"டேய்... என்னடா இப்பிடிக் கால் ஆடுது?"

"அது... நான் பாட்டுக்கு கால் ஆட்டிக்கொண்டிருக்கிறன்.."

"ம்ம்ம்... அது பாட்டுக்கு கால் ஆடிக்கொண்டிருக்குது" இது இன்னொரு நண்பன். (திருப்தி)

இப்படி குட்டிக் குட்டித் திருப்திகளோடு முதல் பாதி நகர்ந்தது. ஐயகோ இரண்டாம் பாதி நகரவே இல்லை. வெளியே வந்தபோது மூன்று படம் பார்த்த நேரம் சென்ற உணர்வு.

சரி படம் முடிஞ்சு ஒரு ஹோட்டலுக்குக் சென்று மத்தியானச் சாப்பாட்டுக்கு சொல்லவிட்டு இருக்கத்தான் பார்த்தேன் என்னோட செல்பேசியை எங்கோ தவற விட்டுவிட்டேன். தியேட்டரில்தான் இருக்கவேண்டும். பக்கத்து நண்பனின் செல்பேசியை வாங்கி ரிங்க் செய்தேன். ரிங்க் போகிறது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் தியேட்டருக்குச் சென்றேன்.

அடுத்த காட்சியில் மக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தியேட்டர் பணியாளர்களிடன் சென்று என்ர பிரச்சினையை சொன்னன். இடை நடுவில் உள்ளே சென்ற நான் இருந்த இருக்கையை பார்த்தோம். இருந்தவரும் சந்தோசமாக எழும்பி தானும் சேர்ந்து தேடினார். கிடைக்கவில்லை. வெளியில் வந்து பணியாளர் ஒருவரின் செல்பேசியில் எனது பேசிக்கு ரிங்க் செய்தேன். எனது இருக்கையில் இருந்தவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருப்பார் போல் தெரிகிறது, தொடர்ந்து தேடுவதிலேயே இன்பமடைந்து "இந்தாருங்கள் இருக்கைக்கு அடியிலே கிடந்தது" என கொணர்ந்து தந்தார்.

நன்றி கூறி வாங்கி; செல்பேசி தந்த பணியாளர் "வேற யாருமெண்டால் போனை எடுத்திருப்பாங்கள், ரீ குடிக்க ஏதாவது தந்துட்டு போங்கோ" எனறு தனது தூய உள்ளத்தை வெளிப்படுத்தினார். சரி என்று அவருக்கு 200 ரூபா கொடுத்துவிட்டு மொத்தத்தில் 550 ரூபா கொடுத்து படத்தை கஷ்டப்பட்டு பார்த்து முடித்திருந்தாலும் போன் திரும்பக் கிடைத்ததே என்ற திருப்தியில் (போன் மீள்க் கிடைத்தபோது உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்) வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்த பின்னும் போன் கிடைத்த திருப்தி நிலைத்திருந்து.

இந்த திருப்தி வாரணம் ஆயிரம் படத்துக்குப் போனதாலதான வந்தது. எனவே வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்.

மதுவதனன் மௌ.