நா

ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

13 பின்னூட்டங்கள்.

நிமல்-NiMaL June 21, 2009 at 5:59 PM

வித்தியாசம்... நல்லா இருக்கு...

அது சரி இது எழுத எங்க நேரம் கிடைக்குது, நல்ல காலம் முகாமைக்கு தமிழ் தெரியாது... ;)

மதுவதனன் மௌ. June 21, 2009 at 6:18 PM

நன்றி நிமல்,

ஹி ஹி.. கன நேரம் மினக்கடவில்லை. டக்கெண்டு எழுதினதுதான்.. பஸ்சில போகேக்க கரு கிடைச்சுது.. வீட்டை வந்து எழுதிட்டன்.

முகாமைக்குத் தமிழ் தெரியாது.. :D

உண்மைதான்.

jackiesekar June 21, 2009 at 6:44 PM

கதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

மதுவதனன் மௌ. June 21, 2009 at 6:57 PM

வாங்கோ ஜக்கிசேகர்,

நன்றி,

உங்களப் பாத்தவுடன அந்தக் கில்மா ஜோக்கு கதைதான் ஞாபகம் வருது :D

T.V.Radhakrishnan June 21, 2009 at 7:54 PM

வித்தியாசமான கதை...வாழ்த்துக்கள் மது

மதுவதனன் மௌ. June 21, 2009 at 9:40 PM

வாங்கோ ராதாகிருஷ்ணன்,

நன்றி,

ஏதோ முடிந்தத எழுதியிருக்கிறன் பாப்பம் :)

மதன் June 21, 2009 at 11:00 PM

வணக்கம் மது கதை சூப்பர்..பல நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பு இலை உனக்கு சிறுகதையும் எழுத தெரியுமென்பது எனக்குதான் அந்த வியப்பு இல்லையே.. நீ ஆண்டு 8 இல் எழுதிய பல சிறுகதைகள் எனக்கு நினைவு இருக்கு..
....என்னருமை ரீச்சரே.. என்று முடித்த கதை உட்பட.

மதுவதனன் மௌ. June 22, 2009 at 9:30 PM

வாடா மதனராசு,

அது ஒரு காலம்டா... அந்தக் காலத்திறமையெல்லாம் எங்க போனதெண்டும் தெரியவில்லை.

அந்த நேரம் ஏதோ ஒரு பீலிங்கில எழுதினது.. அந்தக் கதை இப்பவும் இருக்குது.. நீ சொன்னாப் பிறகுதான் ஞாபகம் வருது. அடுத்தடுத்த பதிவில போடுவம்..

உன்ர பின்னூட்டத்தைப் பாக்க சந்தோசமா இருக்குடா..

மயாதி June 25, 2009 at 7:29 AM

ஹாய் மது,

இன்றுதான் கதையை வாசிக்க நேரம் கிடைத்தது.
வித்தியாசமான பாணியில் உங்கள் கதை இருக்கிறது, நான் எப்பவும் வித்தியாசங்களை விரும்பும் சராசரி மனிதன். எனக்கு நன்றாக பிடிச்சிருக்கு.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மதுவதனன் மௌ. June 28, 2009 at 1:45 PM

வாங்கோ மாயாதி,

வாழ்த்துக்கு நன்றி,

உங்கள் ஊக்கங்கள் இன்னும் கதை எழுதத் தூண்டுகின்றன.. நேரம்தான் பிரச்சினையாக இருக்கின்றது..

rathnapeters July 7, 2009 at 10:49 PM

நன்றாக உள்ளது, சில இடங்கள் எனக்கு விளங்கவில்லை.

மதுவதனன் மௌ. July 9, 2009 at 6:32 AM

வாங்கோ rathnapeters,

நேர வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு வாசியுங்கள். விளங்கும் என நம்புகிறேன்.

sanchayan July 30, 2009 at 11:23 AM

Memento படத்தின் திரைக்கதை சாயலில் உள்ளது. மிகவும் வித்தியாசமன யோசனை, கதை நடக்கும் காலத்தை குறித்துக் காட்டியது சூப்பர்,
மொத்தைலே "ஆத்தலா" இருக்கு

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ