நா

நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..


முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
 பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05
லோஷனால் எழுதப்பட்ட கதைநிலாக்காதல் 06







< இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை
எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக்
கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.


டமார்....


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஏனிந்த ஸ்ரியரிங்க் இவ்வளவு பெரிதாய் என் கண்முன்னே என்று அபத்தமாய் யோசிக்கும் முன்னே கறுப்பு நிறமாய் எங்கோ தூக்கி வீசப்பட்டான். கிரீச்சிட்ட வாகனங்கள் பின்னே சாவகாசமாய் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தன. திரும்பிய லொறி சிறிது தூரம் தள்ளி ஓய்ந்து நின்றது. தூரத்துப் காவற்துறை
அதிகாரி ஒருவர் பாய்ந்து வந்தார். பின்னைய வாகனங்களில் இருந்தவர்கள் இறங்கிவந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர் அல்லது வேதனையைக் கொட்டஆரம்பித்தனர். அதன் பின்னைய வாகனங்கள் விபத்துப் பற்றிய பிரக்ஞையின்றி குறுக்கு வழியால் நகர ஆரம்பித்திருந்தன.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


லாவண்யாவின் செல்பேசி அமைதியாக கிணுகிணுத்தது. அங்கலாய்ப்புடன் எடுத்தாள். ஹரிஷிடமிருந்து அழைப்பு,


"ஹலோ... உங்கட மிஸ்ட்கோல் இதில இருந்தது. நீங்கள்?"


ஆங்கிலத்தில் கதைத்த குரல் சத்தியமாக ஹரிஷுடையதல்ல.


"நான் லாவண்யா... ஹரிஷின் பிரண்ட்... நீங்கள்?"


"ஹரீஷ்...?? ஹரீஷ் ஒரு விபத்தில மாட்டியிருக்கிறார். இப்ப அவரை கொழும்பு பொது மருத்துவமனையில கொண்டுவந்து சேத்திருக்கு. அவரோட அம்மாக்கு அழைப்பெடுத்தோம். தொடர்பு கிடைக்கவில்லை. பற்றரி போட்டபோது கடைசியாக உங்கட அழைப்பு இதில் இருந்தது அதுதான் எடுத்தோம்"


"ஓகே.. நான் அங்கே உடனே வருகிறேன்"


ஸ்ரீ அங்கிளுக்கு ஈனக்குரலில் எடுத்தச்சொன்னதும், இவளேன் இப்படிப் பதறுகிறாள் என்று ஸ்ரீ அங்கிள் யோசித்ததும், அதே காசா அல்லது கூட வருமா என்று டிரைவர் யோசித்ததும்... அவரவருக்கு அவரவர் கவலைகள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சக்தியெல்லாம் வடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான் சந்தோஷ்.


நான்... ஹரிஷ்... லாவண்யா... வீடு... அம்மா... வைஷாலி... என்று அபத்தச் சிந்தனைகளெல்லாம் இறுதியாவதை உணர்ந்தான்.


"ஆ.. மாத்தயாட bag இல லப்டொப் இருக்கா? அதைக் கொண்டுவா" சொன்ன சிஐடி சந்தேஷைப் பார்த்தான்.


லப்டொப்பில் ஏதும் இருக்குதா என்று மீண்டும் அபத்தமாகச் சிந்திக்கத் தலைப்பட்டான், அவர்கள் பிடித்ததுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனத் தெரிந்தும்.


லப்டொப்பைத் திறந்த சிஐடி தவிர மற்ற இருவரும் பார்த்த பார்வைகளே அவர்களுக்கு லப்டொப் அந்நியம் என்று தெரிந்தது. லப்டொப்பையும் தங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள்.


Hibernate இல் இருந்த லப்டொப் unlock கடவுச்சொல் கேட்டது.


"பாஸ்வேர்டைச் சொல்லு" ஒரு எகத்தாளத்துடன் கேட்டான்.


"சந்தோஷாலி... s, a, n, t, h, o, s, h, a, l, i"


....


"ஓகோ... எல்லாம் திறந்தபடியே இருக்கு. மெயில்.. பேஸ்புக்...ம்ம்ம்... ருவிட்டரும் பாவிக்கிறியோ? இதென்ன தமிழ்மணம், ஏதும் LTTE சைற்றா?"


மற்ற இருவரும் இன்னும் தங்களையும், லப்டொப்பையும் மாறிமாறிப் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.


bag இனை எடுத்து துழாவிய சிஐடியின் கையில் டயலொக்கின் டொங்கிள் (Internet broadband connection) அகப்பட்டது. சந்தோஷைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.


லப்டொப்பில் அடித்து இணைக்க வெளிக்கிட்டவனுக்கு டயலொக் டொங்கிள் வழமைபோலவே விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது. அங்கே இங்கே என்று இடத்தை மாற்றி இணைப்பை ஒருவாறு இணைப்பை எடுத்துவிட்டான்.


ஜிமெயிலில் சில சொற்களைப் போட்டுத் தேடிப்பார்த்தான். எதுவுமில்லை. பேஸ்புக்கை மேய்ந்தான். ருவிற்றருக்கு வந்தவன் ஆர்வமானான். சந்தோஷ் வெறுமையாக, எந்தவித பிரக்ஞையுமின்றி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


ஹரீஷ் இமைகளைப் பிரித்தபோது ஏகப்பட்ட கவலை ரேகைகளை முகத்தில் அப்பியபடி லாவண்யா நின்றிருந்தாள். கைகளை தூக்கும்போது வலி உயிர்போவதை உணர்ந்தான். தலையில் கட்டு.


"ஹரீஷ், சீரியஸ் இல்லை. அசையாம இருங்கோ. அம்மா வந்துகொண்டிருக்கிறா. பிரச்சினை இல்லை"


"சந்தோஷ் எங்கே?" கேட்டபின்தான் லாவண்யாவைப் பார்த்தான். அவனுக்கு என்ன உணர்ச்சியைக் காட்டுவதென்றே புரியவில்லை.


"ஓம்... சந்தோஷின் போன் வேலைசெய்யுதில்லை. நான் அவனுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறன். நீங்க அமைதியா படுங்கோ"


கண்களால் லாவண்யாவை கிட்ட வரச்சொன்ன ஹரீஷ், கிசுகிசுத்தான், "சந்தோஷ் கடத்தப்பட்டுவிட்டான், செய்தி கேக்கேலயா?"


"வாட்" என்றபடி அருகிலிருந்த கதிரையில் பொத்தென்று இருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


வைஷாலி....


லண்டனில் ருவிட்டிக்கொண்டிருந்தாள்.


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


சந்தோஷின் ருவிற்றரில் சிஐடி ஆர்வத்துடன் மூழ்கியிருந்தான்.


"santhosh
@vaishali I wil find n send u once I reached office
3 hours ago via Echofon"


இதுதான் கடைசியாக சந்தாஷ் ருவீற்றியது. ஆனால் லைவ்வாக வைஷாலியின் ரூவீற்கள் வந்துகொண்டிருந்தன.


"vaishali
@santhosh where r u? send me immediately.
1 minutes ago via Web"

Twitter DM களைப் பார்த்தான். சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான். ஜீமெயில் உரையாடல்களைப் பார்ததான். மீண்டும் சிரித்தான். பேஸ்புக் அஞ்சல்களைப் பார்த்தான், சிரித்தான்.
கடைசியாக திறந்திருந்த பேஸ்புக் உரையாடல்கூட வைஷாலியிடமிருந்து.


"மாத்தயா... லவ்வு கலக்கலாய் இருக்கு.. பாரின் பொண்ணு.. போட்டோ இல்லையா" நக்கலாகக் கேட்டான். சந்தோஷுக்கு சிரிப்பதா அழுவதா புரியவேயில்லை.


திடீரென்று ஏதோ யோசித்தவனாக, லப்டொப்பில் கோப்புக்களை தேடினான் சிஐடி. பின்னர் இருவரிடமும் "இவனில எப்பெப்ப சஸ்பெக்ற் பண்ணினாங்கள், திகதிகளைச் சொல்லுங்கோ"


"போன மாதம் 17, 18 அதோட முந்தநாள்" மேசையிலிருந்த பேப்பர் துண்டொன்றைப் பார்த்துச் சொன்னான் மற்றவன்


அதே நாட்களில், குறித்த நேரங்களில் பேஸ்புக், ஜீமெயில், உரையாடல்கள், ரூவீற்றுக்கள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவனது செய்தி சேகரிப்புகளுடன் அவனுக்கும் வைஷாலிக்குமிடையான சமாச்சாரங்களே அதிகமாக இருந்தன.


நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்த அவன் "பையன்ல விசயம் இல்லைப்போல.. வேலையும் லவ்வுமாய்த்தான் மாத்தயா இருக்கிறார். அந்த திகதிகளில் மாத்தயா பாரின் பொண்ணோட விளையாடிக்கொண்டு இருந்திருக்குது. ரூவீற்ருக்கள் எல்லாம் Echofon இற்கூடாகத்தான் மாத்தயா செய்திருக்கு. லப்டொப்பிலயும் பெரிசா ஒண்டுமில்ல. பையனிலயும் விசயமில்லைப்போல.. சும்மா இரண்டு தட்டுத் தட்டிப்போட்டு ஒரு மணித்தியாலத்தால கொண்டுபோய் அந்த இடத்தில விட்டுட்டு வாங்கோ.. வார்ணிங்க் பண்ணிட்டு விடுங்கோ" என்றவன் சந்தோஷின் ருவிற்றரைப் பார்த்துவிட்டு கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தான்.


Echofon இல் தட்டச்சினான்.


"@vaishali I LOVE YOU MY DEAR VASHU KUTTI" send இனை அழுத்திவிட்டு சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான்.


சந்தோஷுக்கு என்ன நடக்குதெண்டு புரியவில்லை. லப்டொப்பில் என்னத்தைச் செய்கிறானே என்று கவலைப்படும் நிலையிலும் அவன் இல்லை.


சிறிது நேரத்தில் வந்த Twitter DM இனை திறந்தான் சிஐடி.


"vaishali Wot happnd2U santhosh.Thtz a public tweet.Plz rmov it.My acca's too in it.Plzzz :("


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


பின்னர் சந்தோஷ் வீடு வந்து சேர்ந்ததும், லாவண்யா தொடர்பு கொண்டதும், சந்தோஷ் மருத்துவமனைக்கு வர முயற்சித்ததும், ஹரீஷ் வரவேண்டாம் வீட்டிலேயே இரு என்றதும், லாவண்யாக்கும் ஹரீஸுக்குமிடையான அரும்புக் காதல் மருத்துவமனையிலேயே மலர்ந்ததும் (யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)
என்று நட்பு, காதல், சென்ரிமென்ட், புரிந்துணர்வு எல்லாம் கைகோத்துக் கலகலத்தது. சந்தோஷின் ருவிட்டர் கதைகேட்டு ஹரீஸும் லாவண்யாவும் லவீற்ற (love + tweet) ஆரம்பித்ததும் வேறு கதை.


- சுபம் -


மதுவதனன் மௌ | cowboymathu


(எல்லாம் இப்போதைக்குச் சுபமாக இருந்தாலும், இன்னும் நான்கு மாதங்களில் வைஷாலி லண்டனிலேயே இன்னொரு பையனை லவ்வப் போவதையும், சந்தேஷுக்கு டாடா காட்டப்போவதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்.)

 

சம்பவம் ஒன்று.

ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கியிருந்த நண்பன் ஒருவன் 'ஏதாவது நல்ல சண்டைப் படமாப் பாத்து ஆங்கிலப்படம் ஒண்டு போட்டுவிடு' என்றான். சரி சுவாசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கட்டுமே என்று Wanted படத்தைப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வந்திருந்தபோது படமும் முடிந்திருந்தது. 'எப்பிடிப் படம் இருந்தது, நல்லதா?' கேட்டேன். 'சூப்பர் படம், அதில ஒருத்தன் இருக்கிறான் அவன் சுட்ட புல்லட்டை திருப்பியும் துவக்கு குழாய்க்குள்ள எடுக்கிறான், நல்லா இருந்திச்சு' என்றான்.

படம் பார்த்தவர்கள் இருக்க மற்றவர்களுக்கு :- படத்தில் ஒருவனுக்கு பின் மண்டைக்குள்ளால் புகுந்து நெற்றியைத் துளைத்து முன்வரும் புல்லட்டை குறைந்த வேகத்தில் (slow motion) காட்டுவார்கள். பின்னர் அந்தப் புல்லட் எங்கிருந்து வந்தது எனக் காட்டுவதற்காக காட்சிகளைப் புல்லட்டை பிரதானமாக வைத்து பின்னோக்கிக் காட்டி அது எங்கிருந்து வந்தது என்பற்காக மீண்டும் புல்லட் துப்பாக்கிக் குழாயை அடைவதாக காட்டியிருப்பார்கள்.

சம்பவம் இரண்டு.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் இடது கையின் ஐந்து விரல்களிலும் நகங்களை வளர்த்து வைத்திருந்ததை பார்த்தேன். 'இடது கைவிரல்களில் நகம் வளர்ப்பது நல்லதல்ல, வெட்டி விடு' என்றேன் (அவன் வலது கைப்பழக்கம் உடையவன்). ஏன் எனறு என்னை வித்தியாசமாக நோக்கினான். 'இல்ல... இடது கையை மலம் கழுவப் பாவிக்கிறதுதான, சோப் போட்டுக் கழுவினாலும் நகம் இருந்தால் எச்ச சொச்சங்கள் இருக்க வாய்ப்பிருக்கு' என்றேன். 'சீ... நான் ரொய்லற் ஸ்பிரேயர் (toilet sprayer) மட்டும்தான் பாவிக்கிறனான், கை இல்லை' ஒரு புன் முறுவலோடு சொன்னான். 'ஓ... அப்படியா' என்றேன். வேறன்ன சொல்ல.

சம்பவம் மூன்று.

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது, வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும். அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’ எனக் கூற, அனைவரும் சிரித்தனர். அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு வரவில்லை.

அம்பிகா எனும் வலைப்பதிவருடையது.

*********

ஒரு சம்பவம் அர்த்தப்படுத்தப்படுவது அவரவர் புரிதல்களுக்கேற்பவே. ஆரம்ப அர்த்தப்படுத்தல்களில் தவறு கண்டுபிடிக்க முயல்வது சரியாகப் படுவதில்லை எனக்கு. ஊரிலிருந்து வந்த நண்பன் இன்னும் நான்கைந்து ஆங்கிலப் படங்களை பார்த்தால் தனது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறுவயது முதலே பெற்றோர்களால் இடது கைவிரல் நகங்களை வளர்க்காதே எனறு அறிவுறுத்தப்பட்ட நான் அதற்குள் மட்டுமே இருந்திருக்கிறேன் வெளியில் சிந்திக்காது. மூன்றாவது சம்பவத்தில் வரும் சிறுமியின் புரிதல் கவலைக்குரியது. வீட்டில் நடந்த ஏதோவொரு நிகழ்வு ஆழப்பதிந்திருக்கிறது அச்சிறுமிக்கு.

ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.

இச்சம்பவங்களின் புரிதல்களூடு மதங்களையும் அதன் அபத்தங்களையும் எழுதவேண்டும் என சிந்திக்கிறேன். பதிவின் போக்கு இன்னொரு நிலைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | கௌபாய்மது.

 

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

விளம்பரங்களால் மலிந்து கிடக்கும் உலகம் இது. விளம்பரங்களால் எவ்வளவு தூரம் வியாபாரம் அதிகமாக நடக்கிறது எனும் சந்தேகம் இன்னும் இருந்தாலும் அதீத விளம்பரங்களால் வெள்ளியையும் பிளாட்டினம் என்று சொல்லியே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.


மூன்று வாரங்களில் சிவப்பழகு(??) என்பதிலிருந்து எயிட்ஸை மூன்று நாட்களில் குணப்படுத்துவோம் வரை விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன். மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் பலன் தருவதை விட ஒரு வித பயத்தையே தருகின்றன.

கரீனா கபூர் தனது அழகின் இரகசியத்தை இதோ வெளிப்படுத்துகின்றார் என்று ஒரு புது Body Cream ஒன்றை அறிமுகப்படுத்துகின்றார்கள். கரீனாவுக்கே அன்றுதான் அப்படியொரு கீரீம் இருப்பதே தெரிந்திருக்கும் என்று கற்பூரம் அணைந்து சத்தியம் செய்யத் தயாராய் இருக்கிறேன். (கடவுளுக்குப் பயந்தல்ல, கற்பூரம் சுட்டாலும் பரவாயில்லை என்று).

சொப்பன ஸ்கலிதத்தால் உடல் மெலிந்து தள்ளாடுகின்றீர்களா? இதோ குறைந்த செலவில் இரண்டு நாட்களில் தீர்வு தருகின்றோம் என்று பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு.

இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே,


இதிலிருக்கும் பெண் மானநஸ்டவழக்கு (மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்) போட்டால் கூடக் குற்றமில்லை.

ம்ம்ம்... Body Cream க்கு என்ன தமிழ்? உடற்பசை ஏனோ ஒட்டுதில்லை.. :)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 

இந்த சூடு விழுகின்ற சங்கதிகளை இந்தியாவிலும், இந்தியச் சினிமாக்களிலும்தான் பார்த்திருக்கிறோம். இனி இலங்கையிலும் இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான் (??).

அவசரமாக காலி வீதிக்குப் போகவேணும் எண்டாலும் குறைந்தது 60 ரூபா அழவேண்டும் முச்சக்கரவண்டிக்காரர்களுக்கு. இந்தியா சினிமாவின் தாக்கத்தால் தமிழர்களிடையே ஆட்டோ என்ற சொல் பாவனையில் இருந்தாலும் இலங்கையில் திறீவீலர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சிங்களவர்களிடையே ஆட்டோ என்றால் அவர்களுக்கு விளங்காது.

குறைந்தது 60 ரூபா, கொஞ்சம் கூடத்தூரம் போனால் 100 ரூபா, வெள்ளவத்தையில இருந்து பம்பலப்பிட்டி முடிவுக்குப் போனால் 150 ரூபா என்று முச்சக்கரவண்டியில் இருந்து போகும்போது மனம் அமைதியாகப் போனதே கிடையாது. வழமையான முச்சக்கரவண்டி எனின் கதைச்சுப் பேசி குறைச்சுக்கொள்ளலாம். சிங்களத்தில அதுவும் கடினம். நான் கூடுதலாக நடைதான். காசும் மிச்சம் உடற்பயிற்சியும் ஆகுது.

மனசுக்குக் கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. தற்போது இலங்கையிலும் மீட்டர் போட்ட முச்சக்கரவண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. வழமையாக முச்சக்கரவண்டிகள் நிறுத்தத்தில இருந்து வீடுவாறதுக்கும் ஒரு காசு போட்டு, பிறகு போற இடத்துக்கும் அறாவிலையில (கொடுத்துப் பழகியதால் தெரிவதில்லை) காசு போட்டு அவன் இரண்டு மாசத்தில முச்சக்கரவண்டி வாங்கின காசை எடுத்துவிடுவான். இப்போது பரவாயில்லை. விளம்பரத்தைச் சுட்டிய மயூரேசனுக்கு குட்டி நன்றி.


சும்மா பகிடிக்குத்தான் யாராவது இதை உருவாக்கினார்களோ என்று கடைசியாக இருக்கிற அப்பிள் டக்ஸிக்கு தொலைபேசிக்கேட்டேன் இன்று.

சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். எனினும் விசாரித்துப் பார்த்தேன்.

உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.

ம்ம்ம்.. என் உடற்பயிற்சி குறையப்போகின்றது போல் தெரிகின்றது.