நா

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 

விளம்பரங்களால் மலிந்து கிடக்கும் உலகம் இது. விளம்பரங்களால் எவ்வளவு தூரம் வியாபாரம் அதிகமாக நடக்கிறது எனும் சந்தேகம் இன்னும் இருந்தாலும் அதீத விளம்பரங்களால் வெள்ளியையும் பிளாட்டினம் என்று சொல்லியே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.


மூன்று வாரங்களில் சிவப்பழகு(??) என்பதிலிருந்து எயிட்ஸை மூன்று நாட்களில் குணப்படுத்துவோம் வரை விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன். மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் பலன் தருவதை விட ஒரு வித பயத்தையே தருகின்றன.

கரீனா கபூர் தனது அழகின் இரகசியத்தை இதோ வெளிப்படுத்துகின்றார் என்று ஒரு புது Body Cream ஒன்றை அறிமுகப்படுத்துகின்றார்கள். கரீனாவுக்கே அன்றுதான் அப்படியொரு கீரீம் இருப்பதே தெரிந்திருக்கும் என்று கற்பூரம் அணைந்து சத்தியம் செய்யத் தயாராய் இருக்கிறேன். (கடவுளுக்குப் பயந்தல்ல, கற்பூரம் சுட்டாலும் பரவாயில்லை என்று).

சொப்பன ஸ்கலிதத்தால் உடல் மெலிந்து தள்ளாடுகின்றீர்களா? இதோ குறைந்த செலவில் இரண்டு நாட்களில் தீர்வு தருகின்றோம் என்று பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு.

இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே,


இதிலிருக்கும் பெண் மானநஸ்டவழக்கு (மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்) போட்டால் கூடக் குற்றமில்லை.

ம்ம்ம்... Body Cream க்கு என்ன தமிழ்? உடற்பசை ஏனோ ஒட்டுதில்லை.. :)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 

இந்த சூடு விழுகின்ற சங்கதிகளை இந்தியாவிலும், இந்தியச் சினிமாக்களிலும்தான் பார்த்திருக்கிறோம். இனி இலங்கையிலும் இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான் (??).

அவசரமாக காலி வீதிக்குப் போகவேணும் எண்டாலும் குறைந்தது 60 ரூபா அழவேண்டும் முச்சக்கரவண்டிக்காரர்களுக்கு. இந்தியா சினிமாவின் தாக்கத்தால் தமிழர்களிடையே ஆட்டோ என்ற சொல் பாவனையில் இருந்தாலும் இலங்கையில் திறீவீலர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சிங்களவர்களிடையே ஆட்டோ என்றால் அவர்களுக்கு விளங்காது.

குறைந்தது 60 ரூபா, கொஞ்சம் கூடத்தூரம் போனால் 100 ரூபா, வெள்ளவத்தையில இருந்து பம்பலப்பிட்டி முடிவுக்குப் போனால் 150 ரூபா என்று முச்சக்கரவண்டியில் இருந்து போகும்போது மனம் அமைதியாகப் போனதே கிடையாது. வழமையான முச்சக்கரவண்டி எனின் கதைச்சுப் பேசி குறைச்சுக்கொள்ளலாம். சிங்களத்தில அதுவும் கடினம். நான் கூடுதலாக நடைதான். காசும் மிச்சம் உடற்பயிற்சியும் ஆகுது.

மனசுக்குக் கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. தற்போது இலங்கையிலும் மீட்டர் போட்ட முச்சக்கரவண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. வழமையாக முச்சக்கரவண்டிகள் நிறுத்தத்தில இருந்து வீடுவாறதுக்கும் ஒரு காசு போட்டு, பிறகு போற இடத்துக்கும் அறாவிலையில (கொடுத்துப் பழகியதால் தெரிவதில்லை) காசு போட்டு அவன் இரண்டு மாசத்தில முச்சக்கரவண்டி வாங்கின காசை எடுத்துவிடுவான். இப்போது பரவாயில்லை. விளம்பரத்தைச் சுட்டிய மயூரேசனுக்கு குட்டி நன்றி.


சும்மா பகிடிக்குத்தான் யாராவது இதை உருவாக்கினார்களோ என்று கடைசியாக இருக்கிற அப்பிள் டக்ஸிக்கு தொலைபேசிக்கேட்டேன் இன்று.

சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். எனினும் விசாரித்துப் பார்த்தேன்.

உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.

ம்ம்ம்.. என் உடற்பயிற்சி குறையப்போகின்றது போல் தெரிகின்றது.