ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.
பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.
எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.
சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.
இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.
நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.
"எக்ஸ்கியூஸ் மீ..."
காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.
எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."
அதே அழகான பெண்.
ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.
"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"
"ஓ.கே." (இனி தமிழாக்கம்)
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"
மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.
"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"
"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"
என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு
"அப்படியொண்டும் இல்லை"
"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"
அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.
இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.
யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.
எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...
இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)
பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது