நா





ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

மின்சாரத்தின் பயங்கரம் பற்றிய ஒரு சலனப்படம்
இதை எனக்கு என் நண்பனொருத்தன் அனுப்பியிருந்தான். பார்த்தபின் அதிர்ச்சியாக இருந்தது. யூடியூப்பில் இது சம்மந்தமாகத் தேடினேன் கிடைக்கக் கஷ்டமாக இருந்தது. இந்த வீடியோ நிறையப் பேரினைச் சென்றடைந்தால் நல்லது. மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்யும்போதும் அதுசம்மந்தமான கருவிகளை பயன்படுத்தும்போதம் அவதானமாகச் செய்ய இந்த வீடியோவின் ஞாபகம் உதவிசெய்யும் என்பதில் தவறேயில்லை.


யூடியூப்பி்ல் ஏற்ற முயற்சித்தேன். தடுக்கிறார்கள். கடிதம் எழுதி கேட்கவேண்டும் என்ன பிரச்சினை என.

மேலும் இது கடந்த மே மாதம் டெல்லியில் நடந்ததாகக் கூறுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாம். :'(


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று)
பாலியல் வல்லுறவு என்ற சொல்லைவிட கற்பழிப்பு என்ற சொல்லையே அதிகம் கேட்டிருப்போம்; கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளும் மலிந்து கற்பழிப்பு என்ற சொல்லையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. கற்பு(??) என்பது பெண்ணுக்குரியது, ஒரு பெண்தான் கற்பழிக்கப்படலாம் என ஆண்டாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். முன்னைய வரியை காரண காரியங்களோடு சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் சொல்ல வந்தது இதுவல்ல. நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றைத் தவறானதென்கிறேன். மேலும் இவற்றை அறியவேண்டிய தேவையும் இருப்பதால் இங்கே கூற விளைகிறேன்.

நம்பிக்கை ஒன்று : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதில்லை.
விளக்கம் : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியும்; ஆளாகிறார்கள். ஆண்களின் தோற்றம், தொழில், உருவம், பலம், இனம், பாலியல் விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இராணுவத்தில், சிறையில், பூட்டிய அறையில், பொது கழிப்பிடங்களில், தொழில் செய்யும் இடங்களில், விடுதிகளில் என்று எங்குமே ஒரு ஆணின் மீதான பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படலாம்.
ஆண்களின் மீதான வல்லுறவின் போது, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண், பெண்கள் காட்டும் எதிர்ப்பைக்கூட காட்டாததான நிகழ்வுகளே அதிகம் உள்ளன. அல்லது அவன் எதிர்ப்பைக்காட்ட முடியாத அளவுக்கு உறைந்து போய்விடுகிறான் இவ்வாறான் ஒன்றை எதிர்பார்க்காததால்.

நம்பிக்கை இரண்டு : ஓரினச் சேர்க்கை (Homo-sexual) ஆண்கள் மட்டுமே பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.
விளக்கம் : ஓரினச்சேர்க்கை ஆண்களே பாலியல் வல்லுறவு செய்பவர்களின் அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்களின் அதிகமான இலக்காக இருக்கின்ற போதிலும் எதிரினச் சேர்க்கை (Hetro-sexual) ஆண்களும் பலவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்படும் ஆண்களில் 40 வீதமானவர்கள் எதிரினச் சேர்க்கை ஆண்களே.

நம்பிக்கை மூன்று : ஓரினச் சேர்க்கை ஆணொருவரே இன்னொரு ஆணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்.
விளக்கம் : ஆண் பாலியல் வல்லுறவு புரிந்த ஆண்களில் பலர் எதிரினச் சேர்க்கை ஆண்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரினச் சேர்க்கை ஆணொருவர் ஒரு பெண்ணையோ ஆணையோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது அவர் தான் பெண் மீது வன்புணர்வதாகவே யோசித்துக்கொள்வார். மேலும் ஆண்கள் மீதான் வல்லுறவின் போது அவரது மேலாதிக்கமும் அதிகமாக இருப்பதாக சந்தோசம் கொள்வார்.
இங்கே ஒரு கருத்துத் தெளிவாகிறது. அதாவது பாலியல் வல்லுறவு என்பது அதிகமாக கோபம், மேலாதிக்கம், கொடூரம், கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறிதளவு பாலியல் உணர்வாலுமே நடக்கின்றது.

பாலியல் வல்லுறவும் ஆண்களும்(இரண்டு)
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது