நா

நியாபகம் ≠ ஞாபகம்

நான்கைந்து பதிவர்கள் நியாபகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஐயனார் அய்யனாராவதற்கும், ஔவையார் அவ்வையாராவதற்கும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை காரணம் காட்டலாம் பிழையானதெனினும்கூட. ஞாபகம் எவ்வாறையா (எவ்வாறய்யா அல்ல) நியாபகம் ஆகிறது. உங்களது நீண்டகாலப் பழக்கம் நியாபகம் என்ற இல்லாத; தவறான சொல்லை ஞாபகம் என மாற்றக் கஷ்டப்படுத்தலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே சொல்லிக் கொடுக்காதீர்கள்.

A for Apple

இந்தத் தலையங்கத்தில் நிறையப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் மணியால் இந்தப் விளையாட்டுக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் அது என்ன என்று ஆராயவிழைந்தேன்.

பின்னோக்கிப் பின்னோக்கிச் சென்று விளையாட்டின் ஆரம்பத்தைப் பிடிப்போமென்றால் முடியவில்லை. யாராவது இந்த A for Apple இன் ஆரம்பத்தைச் சொன்னால் நலம். எப்படி இந்த உபயோகமான விளையாட்டு ஆரம்பித்தது இப்போது எப்படி மாறியிருக்கிறது என அறிய அவா, அவ்வளவுதான். இரண்டு மூன்று நாட்களில் நானும் பங்குகொள்கிறேன்.

இந்த நல்ல விளையாட்டை நினைக்க ஆங்கிலப் பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.


Customer care இற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது...
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்

காலுறை நாத்தம்

நாற்றம் என்பதுதான் எழுத்துவழக்காக இருப்பினும் நாத்தம் எனும் பேச்சுவழக்குக்கு வீச்சு அதிகம்தான் (நியாபகம் என்பது பேச்சு வழக்கல்ல). நாற்றம் பிடித்தவனே என்பதை விட நாத்தம் புடிச்சவனே என்பதில் effect இருக்கிறது.

சரி, இப்ப விடயம் என்னவென்றால் எங்கட பாதங்களில வழமையாக குஜாலா இருந்துகொண்டிருக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் நாங்கள் காலறையைப் போட்டால் வாற ஈரப்பதம் கண்டால் கூட்டமாச் சேந்து கும்மி அடிச்சு (எங்கட வலைப்பதிவர்கள் அடிக்கிறத விடக் கம்மிதான்) துர்நாற்றமுடைய சல்போரஸ் விளைவொன்றை வெளியேற்றுவார்கள் (says Doris J. Day, M.D., an assistant professor of dermatology at New York University).

இதை நீக்க என்ன செய்யலாம்... காட்டன் (cotton ) காலுறைகளையும், மூச்சுவிடக்கூடிய சப்பாத்துக்களையும் பாவியுங்கள் என்கிறார் அவர். அதாவது அணியும் சப்பாத்து காற்றை உள்வாங்கக் கூடிய பதார்த்தங்களால் (தோல் மற்றும் துணிவகை) ஆனதாக இருக்கவேண்டும். காலுறையை அணியும் முன் ஈரப்பதனுறிஞ்சும் பவுடர்களை பாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம். இந்த நாத்தப் பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று இரவுகளில் தேயிலை ஊறிய நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். தேயிலையிலுள்ள டனிக் அமிலம் (Tannic acid) காலின் துர்நாற்றத்தைப் போக்கும். இதுக்கு மேலயும் பிரச்சினை எனின் வைத்தியர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதே சிறப்பு.


நாற்றம் என்பது உண்மையில் வாசத்தினை குறிக்கும் சொல். அந்தப் பூவின் நாற்றம் என்னை கவர்ந்திழுத்தது போன்ற வசனங்கள் தமிழில் இயல்பு. நாற்றத்திற்கு எதிர்ச்சொல் துர்நாற்றம். அவள் நாத்தம் புடிச்சவள் என்பதன் நிஜ அர்த்தம், அவளுக்கருகில் போனாலே வாசம் வீசும் என்பதுதான். ஆனா நாங்கள் சிறிது சிறிதாக அர்த்தத்தை மாற்றிவிட்டோம்.



மதுவதனன் மௌ.

 


டயலொக் கிட்ஸ் (Dialog Kidz)
இலங்கையில் டயலொக் ரெலிகொம் நிறுவனம் தற்போது புதிய செல்பேசி இணைப்புவகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் Dialog Kidz. இது சிறுவர்களுக்கானது ஏனெனில் இணைப்பு வயதுவந்தவர்களின் குறிப்பாகப் பெற்றோரின் பெயரில்தான் இருக்கமுடியும் என்பதுடன் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அழைப்புக்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் இணைப்பின் சொந்தக்காரரால் மட்டுப்படுத்தப்பட முடியும் அத்துடன் அவ்விணைப்புக்கு வரும் குறுந்தகவல்கள் அனைத்தையும் இணைப்பின் சொந்தக்காரர் அதாவது பெற்றோர் தமது செல்பேசியூடாகப் பெறமுடியும்.

ஒருவகையில் தடுமாறும் வயதில் செல்பேசிகளால் திசைமாறும் சிறுவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க பெற்றோருக்கு வழிவகை செய்யதால் டயலொக்கிற்கு நன்றி கூறலாம்.

ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்


குசேலப்பிரபு
குசேலன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை (பொறாமைத்தீ கொழுந்துவிட்டெரிவது தெரிகிறது). ஒரு சில காட்சிகளை யூடியூப் பார்க்க வழிவகை செய்தது. பிதுங்கி வழியும் பிரபுவைப் பார்க்க பாவமாக இருந்தது. விரலுக்கேத்த வீக்கம் இருக்கவேணும்.

பில்லா (புதியது) திரைப்படம் நான் மிகவும் இரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. பழைய பில்லா, பழைய டொன், புதிய டொன் என ஒன்றையும் நான் முதலில் பார்த்திருக்கவில்லை. அத்துடன் ரகுமான் பில்லாவி்ல் வில்லன் என்பது அவர் படத்தில் வெளிப்பட்ட பின்னர்தான் தெரியும். ஆகவே ஆங்கிலப் படமொன்றைப் பார்த்த திருப்தி.

அதைவிட இப்போது அதிக திருப்தி பில்லாவில் பிரபு மண்டையைப் போட்டதுதான். இல்லாவிடின் பில்லா 2 இல் வந்து தானும் பிதுங்கி எங்களையும் விழிபிதுங்க வைத்திருப்பார்.


வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?
நீங்கள் ஏதாவதொரு இடத்தில் பாவிக்கும் கணிணியில் இணைய இணைப்பும் இல்லை வேர்ட 2007 உம் இல்லை. ஆனால் வேர்ட் 2007 கோப்பொன்றை எவ்வாறு பார்வையிடுவது. இதோ அதற்கான வழி.

1. கோப்பின் extensionஐ zip என மாற்றுங்கள். அதாவது கோப்பு hello.docx இனை hello.zip என மாற்றுங்கள்.
2. Winzip, Winrar அல்லது உகந்த மென்பொருள் கொண்டு unzip (extract) செய்யுங்கள்.




3. extract செய்ய folder இனுள் word எனும் folder இருக்கும். அதனுள் document.xml எனும் கோப்பிருக்கும். அதனை document.html என மாற்றுங்கள். இப்போது அதனை பயர்பாக்ஸிலோ அல்லது வேறு உலாவியிலோ திறந்து பார்த்து ஆரம்ப வேர்ட் 2007 கோப்பின் உள்ளடக்கங்களைப் பாருங்கள்.கோப்புக்கள் பற்றிய விளக்கப் படம்


வேர்ட கோப்பில் படங்கள் ஏதாவது இருந்திருந்தால் அவை media எனும் folder இனுள் இருக்கும்.


folder, unzip மற்றும் extension என்பவற்றுக்குரிய இந்தப் பதிவிற்குப் பொருந்தக்கூடிய வகையிலான ஆங்கிலச் சொற்கள் தெரிந்தவர்களை தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மதுவதனன் மௌ.

 

பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது பெண்கள் எப்போதும் இடது கைப் பக்கம் ஓடிவந்து நிற்பார்கள். பாதி வீதியைக் கடந்தவுடன் வலது பக்கம் இயல்பாகவே மாறுவார்கள். எப்படி அநேகமான பெண்கள் இப்படி இசைவாக்கமடைகிறார்கள் என அதிசயித்திருக்கிறேன். விளக்கத்திற்காக பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். நீங்களும் மஞ்சள் கடவையைக் கடக்கும் போது ஒருமுறை அவதானித்துப் பாருங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக இன்னொரு பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ ஜிமெயில் பாவித்துவிட்டு லாக்அவுட் பண்ணாது வந்துவிட்டீர்களா. உடனடியாக எங்காவது அருகில் உள்ள இணையத்தொடர்ப்புக்குச் சென்று உங்கள் ஜிமெயிலுக்குச் சென்று கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ திறந்து வைத்துவிட்டு வந்த அக்கவுண்டை லாக்அவுட் பண்ணமுடியும். மேலும் உங்களது ஜிமெயில் வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா எனவும் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக இங்கே செல்லுங்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுஜாதா எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் புணர்ச்சி விதிகளின் படி இந்த இருவேறு புணர்ச்சிகளையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது.

தங்கம் + காசு = தங்கக்காசு
சங்கம் + காலம் = சங்ககாலம்

முன்னையது திரிதல் விகாரப் புணர்ச்சியாக இருக்க, பின்னயது கெடுதல் விகாரப் புணர்ச்சியாக உள்ளது. ஆனால்

வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்

என திரிதல் விகாரப் புணர்ச்சியாகத்தான் வரும். யாராவது தமிழ் வல்லுநர்கள் இதைத் தெளிவித்தால் நலமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.

 

ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு கட்டுரை. "The Power of Sleep" என்று துறை போந்த வல்லுநர்களால் ஆராயந்து பெற்ற முடிவுகளைக் கொண்டு முறையான நித்திரை எப்படி ஒருவனை(ளை) கவர்ச்சியாக, உடல் வாகாக மற்றும் உறுதியாக வைத்திருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இரவில படுக்கைக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே சாப்பிடுங்கள் அதுவும் சோற்றைச் சாப்பிடுங்கள் என்று கூறுயிருக்கிறார்கள் (இன்னும் என்னென்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று எழுதினால் காப்பிரைட் சட்டம் என்மீது பாயலாம்). நல்லதொரு கட்டுரை. வேலை முடிந்து அந்தத் தூக்கம் பற்றிய கட்டுரையை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசி தாண்டி இரண்டுமணியாகிக்கொண்டிருந்தது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

விமர்சனங்கள் கூறுவதிலிருந்து படத்தின் பின்னே கிடக்கும் அந்த உண்மை புரிந்துவிட்டது. குசேலன் நட்பின் வீரியத்தைக் காட்டும் படம். பசுபதி - ரஜினி நட்பல்ல; கமல் - ரஜினி நட்பு. ஒரு சினிமாவுக்குப் பின்னால் நிஜ நட்பொன்றின் வலிமை கண்டு சிலாகித்தேன். ரஜினி தனது கமலுடனான நட்பைப் பாராட்டும் முகமாக; தசாவதாரம் 100 நாட்கள் கடந்தும் ஓடவேண்டும் என்பதற்காகவும், குசேலன் தசாவதாரத்தின் வரப்போகும் நாட்களின் வசூலை எந்தவித்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் குசேலனை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ரஜினியின் மகோன்னத மனத்திற்காக தசாவதாரம் இன்னொரு முறை பார்க்கப் போகிறேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஆரம்பக் கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக "நான் தமிழ்99 முறையிலேயே தட்டச்சுகிறன்" என ஊற்றுப் பேனாவொன்றால் ஒரு தாளில் எழுதவேண்டியதை " நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம். நாம் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடென்கிறார்கள். மேலும் சீன மற்றும் ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுகிறார்கள் என ஆராயவிருக்கிறார்கள். நல்ல முடிவுகள் வந்தால் மாறுவோம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பிரேம்குமாரின் வலைப்பூவி்ல் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான படம். தரவிறக்கி வைத்துள்ளேன். பார்க்காதவர்கள் மறக்காமல் ஒரு முறை பார்த்துச் செல்லுங்கள் இங்கே

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.

 

இலங்கையில சார்க் மாநாடு என்றுமில்லாத எடுபிடிகளோட நடக்குது. இன்று காலையில் பேரூந்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். சார்க் மாநாடுக்கு கலந்து கொள்ள வந்த ஒருவர் ஷாப்பிங்குக்கு வந்ததால் கொழும்பு கல்கிஸ்ஸவில் வைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்டார்கள். நடந்து செல்ல அனுமதிக்கிறார்களாம் என யாரோ ஒருவர் அலம்பக் கேட்டு 26 ரூபா டிக்கட் எடுத்திருந்த பேரூந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் வாகனங்களை மறித்த இடத்தில் எங்களையும் மறித்துவிட்டார்கள். வாகனங்களை அனுமதித்த பின் ஏதோ ஒரு பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பின்னர் தான் பார்த்தேன். அதே பேரூந்து, அதே நடத்துனர். வேறென்ன மேலும் 17 ரூபாவுக்கு அழவேண்டியதாகிவிட்டது.

கொழும்பில் டிஜிட்டல் பிரின்டிங்க் கடையின் முகப்பில் இரண்டு இஷான் சர்மா உயர விளம்பரம் ஒன்று மாட்டியிருந்தார்கள். ஒரு வெண்தோல் நங்கை பீச் மணலில் சிக்கன உடையில் காட்டவேண்டிய பாகங்களை ஆர்வமூட்டக்கூடிய வகையில் காட்டிக்கொண்டு தொடையில் பட்டிருக்கும் மணல் தெரியுமளவுக்கு இருந்தாள் (பிரின்டிங்க் குவாலிட்டி), நங்கையின் கைகளுக்கு இடையால் ஒரு வாசகம்..24 our service. படத்தைப் பார்த்துட்டு இது பிரின்டிங்க் கடையா இல்ல, 24 மணித்தியாலமும் இப்படியான பெண்கள் இருக்கும் கடையா என்று யோசிக்கவேண்டியிருக்கு.

மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.

குசேலன் கொழும்பில் இன்று ஆகஸட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஒத்துவராத மாதம். அதனால்தான் சர்ச்சையில் சிக்கியுள்ளாரோ தெரியவில்லை. லக்கியின் குசேலன் விமர்சனம் பார்த்தேன். கதையைச் சொல்லாத நல்ல விமர்சனம் (ஒருவேளை கதை இல்லையோ). அவரோட விமர்சனத்தில இது இருந்தது..."குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!".

மதுவதனன் மௌ.