நா


ஜிமெயில் நுட்பம்
ஜிமெயிலின் சக்திவாய்ந்த இன்னொரு அம்சம்தான் "Search Mail". மடல்கள் வரும்போது அனைத்தையும் வாசிக்கமுடிவதில்லை. சிலவற்றை பின்னர் வாசிப்போம் என்று (பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்குக) விட்டுவிட்டு எங்கே போச்சுடா என்று தேடுவோம். ஜிமெயில் ஏலவே உள்ள அதாவது முன் பக்கத்தில் தெரியாத வாசிக்காத மடல்களை எவ்வாறு தேடி எடுப்பது என குழம்பியிருப்போம். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியதுதான் "Search Mail" அம்சம்.

"Search Mail" பொத்தானுக்கு முன்னாலுள்ள எழுத்து வெளியில் "is:unread" என மேற்கோட்குறிகள் இல்லாது தட்டச்சிவிட்டு பொத்தானை அமுக்கிவிடுங்கள். வாசிக்காத மடல்கள் அனைத்தும் டாண் என்று வந்து சிரிக்கும்.


கலகம்.காம் கலகம் விளைவிக்கிறதா?
கலகம்.காம் தமிழர்களுக்கு எதிரானது; அது பற்றி அவதானமாயிருங்கள். குளோபல் தமிழ் நியூஸ் உரிமையாளர் யார்; இவர் ஏன் சிங்கள மொழிக்கென ஒரு பகுதியை வைத்துள்ளார். NTamil நிரல்கள் அபாயகரமானவையா? சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுக்களைத் திருடுகின்றனரா? நான் செல்லும் இந்த இணையப்பக்கம் பாதுகாப்பானதா?

இவ்வாறான கேள்விகளும் குழப்பங்களும் எம்மைச்சுற்றிக்கொண்டிருக்கின்றன். இவை பற்றி அவதானமாக இருத்தலும் அவசியமாகின்றது. ஏனெனில் இவை எமது அந்தரங்கம் சம்மந்தமானது; சிலவேளைகளில் எமது உயிர் சம்மந்தமானது (இலங்கையில் உள்ளவர்களுக்கு). தமிழச்சியின் வலைப்பக்கம் திருடப்படதிலிருந்து திலீபனின் வலைப்பக்கம் முடக்கப்பட்டது வரை சிலர் பீதி கிள்ப்புவதும், சிலர் பீதி அடைவதும் இயல்பாகவே நடந்தேறுகின்றன.
நீங்கள் இணைய உலாவு நிலையங்களுக்குச் சென்றால் உங்களது கடவுச்சொற்கள், கடனட்டை இலக்கங்கள் போன்றவற்றை திருடுவதற்கு அவர்கள் நீங்கள் பாவிக்கும் கணிணியிலேயே சில மென்பொருட்களை தயார்செய்யது விட்டிருப்பார்கள். ஆனால் இணையத்தில் குறித்த ஒரு பக்கத்திற்குச் செல்லும்போது உங்களது விபரங்களை திருடுவதற்கான செயற்பாடு ஏறத்தாழ முற்றிலும் ஜாவாஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் பிளாஷ் போன்றவற்றாலேயே ஏற்படுத்தப்படுகிறது.

அதாவது உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலையில் வைத்தால் இந்த தாக்குதல்களை நிறுத்தலாம். உலாவியிலுள்ல option இல் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலைக்கு கொணரலாம். ஆனால் அங்கேயும் பிரச்சினை உளது. எங்கள் கூகுள் ஆண்டவரும் அவரது சொந்த பந்தங்களும் ஜாவாஸ்கிரிப்ட செயற்படுநிலையில் இருந்தாலன்றி இயங்க மாட்டார்கள். இது கூகுளுக்கென்றல்லாது வேறு பலப் பல இணையப் பக்கங்களுக்குப் பொருந்தும்.

அப்போ என்ன செய்வது. அதற்காக இருப்பதுதான் NoScript பயர்பாக்ஸ் Add-on. அதனை இங்கே இறக்கலாம். இந்த NoScript add-on இனை நிறுவிய பின்னர் நீங்கள் குறித்த இணையப் பக்கங்களுக்கு முற்றிலுமாகவோ பகுதியாகவோ ஜாவாஸ்கிரிப்டை அனுமதிக்கலாம். கலகம்.காம் கலகம் தருமென நினைத்தால் அப்பக்கத்திற்கு அனுமதிக்காது விடலாம். ஆரம்ப இயல்பாக இந்த add-on எந்தப் பக்கத்திற்கும் ஜாவாஸ்கிரிப்டை அனுமதிப்பதில்லை. ப்ளாஷ் உள்ளடக்கங்களையும் செயற்படா நிலையில் வைத்து உங்களது அனுமதியில் மட்டும் செயற்பட வைக்கும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். என்னடா இது ஒவ்வொரு பக்கத்திற்கும் வந்து Javascript not allowed என்று சொல்கிறதே என்று. ஒரு முறை அனுமதி கொடுத்தீர்களானால் பின்னர் அந்தப் பக்கத்திற்குத் தொல்லைதாராது. ஆனால் போகப் போக பழகிவிடும்.

ஆறுபணத்துக் குதிரையும் வேணும்; ஆறு கடக்கப் பாயவும் வேணும் எண்டா ஒண்டும் பண்ணமுடியாது. :-D

பி.கு : இங்கு நான் கலகம்.காம், NTamil பெயர்களைப் பாவித்திருப்பது வலைப்பதிவுலகில் அதைப்பற்றிய கதைகள் உலாவுவதால் மட்டுமே. தனிப்பட்ட ரீதியில் நான் எந்த தாக்குதல் அறிகுறியும் இவற்றிலிருந்து பெற்றதில்லை. கூடுதல் தகவலாக நான் இவற்றுக்கு இன்னும் ஒருபோதும் சென்றதில்லை. :-)

NoScript இணைய முகவரி : http://noscript.net/
NoScript add-on முகவரி : https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
தெரிந்தால் சொல்லுங்கோ
Text box இற்கு சிறப்பான தமிழ் வார்த்தை என்ன? எழுத்து வெளி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அப்படியே Add-on க்கும் என்ன தமிழ் வார்த்தை. முந்திப் பாவித்தேன் முற்றிலும் மறந்துவிட்டேன் :-(

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கணிணியும் மயிரும்
கணிணி முன்னால் நிறைய நேரம் இருந்தால் (இது சும்மா இருக்கிறதில்லை, அதைப் பாவிக்குறதுதான்) தலை மயிர அதிகமாக உதிரும் என்பது உண்மையெனினும் அதற்கான காரணம் கணிணிப் பாவனையல்ல. சரியான உறக்கமின்மை, ஓய்வின்மை, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தமே காரணங்கள்.


இறந்தபின் மயிர் வளருமா?
இதற்கான விடை இந்த நேரத்தில் பலபேருடைய ஐயத்தை தீர்த்துவைக்கும் என்பதாலும், அநேகமானோர் இந்தக் கேள்விக்கான விடை பற்றிய குழப்பத்தை நீண்டகாலமாகவே கொண்டிருப்பதாலும் அவசியமாகிறது.

மயிர் என்பது புரோட்டீனாலான ஒரு இழை. அதன் வளர்ச்சிக்கான செயற்பாடான வளர்சிதை மாற்றத்துக்கான (metabolism) ஊட்டப்பொருட்கள் (nutrient) இன்றி அது வளராது. நகத்தின் வளர்ச்சிக்கும் இதுவே செயற்பாடு.

இறந்தபின் நீர் உலர்தலாலும் சுருங்குதலாலும் முகத்தில் ஏலவே இருந்த தாடியோ மீசையோ வளர்ந்தது போலவும், தலைமயிர் நீண்டது போல் தெரிவதும் ஒரு மாயையே. நீரினுள் கிடக்கும் இறந்த உடல்களுக்கு இந்த மாயையும் தெரியாது என்பதைக் கவனத்திற் கொள்க.

விரல் நுனி சுருங்கி உலர்வதால் இறந்த உடலில் நகம் வளர்வது போல் தெரிவதும் ஒரு செயற்பாடே. இறந்த பின் இரத்த ஓட்டமின்றி எந்தவித ஊட்டப்பொருட்களும் எந்தவித வளர்சிதை மாற்றங்களுக்கும் செலுத்தப்படாது என்பதால் இறந்தபி்ன் மயிரோ நகமோ வளர்வது இல்லை.
மயிர்ச் சந்தேகம்
"சும்மா மசிர்க் கதை கதையாத" எனப் பாவிப்பதிலிரும் "என்ன மயிரா போச்சு" என்பதிலும் மயிரானது தாழ்நிலைப் பொருளாகவும் உயர்நிலைப் பொருளாகவும் பாவிக்கப்படுவதன் காரணம் என்ன? :-) யாராவது பின்னூட்டமிடுங்கோ தெரிந்தால்.

தலைமுடி உதிர்தல் கவலைப்படுதற்குரிய நிகழ்வா?
ஒவ்வொருநாளும் முழுகும்போதும், தலைவாரும்போதும் அடப்பாவி இவ்வளவு மயிர் உதிர்கின்றதே என்ற கவலை பெண்களுக்கும் இருக்கின்றதெனினும் ஆண்களுக்கு அதிகம்தான். இந்த அர்த்தமில்லாக் கவலையால் வரும் மன உளைச்சலால் மேலும் அதிகமாக மயிர் உதிரும் என்பதை யாரும் உணர்வதில்லை.

சாதாரண் மயிருதிர்வு பற்றி அறிந்திருத்தல் மிக்க அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக 10 தொடக்கம் 100 மயிர்கள் உதிர்ந்துகொண்டேயிருக்கும். இது ஒரு இயற்கையான சாதாரண நிகழ்வு. அப்போ முற்றிலும் வழுக்கையானவர்களுக்கு இது நிகழ்வதில்லையே என்று கேட்டால் அப்பாவித்தனமாக முகத்தை வைப்பதைத் தவிர வேறொன்றுமறியேன். இந்தச் சாதாரண நிகழ்வுக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் அவசியமில்லை. உலகம் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல இதுவும் நடந்துகொண்டே இருக்கும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 


பிரேம் கோபால் Vs ஏ ஆர் ரஹ்மான்
நானும் நேற்று தமிழ் இணையங்களுக்கு சென்றபோது பிரேம் கோபால் எனும் பெயர் அதிகமாக அடிபடுவதைப் பார்த்தேன். அவர் ஏதோ டான்ஸ் போட்டாராம், தமிழனின் உணர்வுகளை வெளிப்படுத்தினாராம் என்று. இது வழமையான உடான்ஸ் விவகாரமாக இருக்கும் என நினைத்து பார்க்காமலே விட்டுவிட்டேன். என் நண்பன் வேறு அதைப் பற்றிய பதிவிட்டிருந்தான். சரி பார்த்து விடுவோமே என்று இன்று காலைதான் பார்க்கத் தலைப்பட்டேன்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும். நிஜமாகவே சொல்கிறேன். பார்க்கும்போது தொண்டை அடைத்தது. கண்ணீர் வழிந்தோடாவிட்டாலும் தேங்கி நின்றது. அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு ஏழு நிமிட உணர்ச்சிக் குவியலது. எல்லாத் தமிழ் மனங்களும் வேண்டி நிற்கும் தேவையது. ஆனாலும் 'பிரேம் கோபால் பிரதிபலிக்கின்ற உணர்வை வைத்திருக்கின்ற எல்லாத் தழிர்களினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில எங்கள் போராட்டம் சரியான வழியில் சென்றதா? செல்கின்றதா?' என்ற கேள்வி மனதை இன்னும் கனக்கச் செய்தது.

இதேநேரம் ஏ ஆர் ரஹ்மானும் ஏனோ நினைவுக்கு வந்து சென்றார். பிரபலமில்லாத பிரேம் கோபால் வாழ்ந்து காட்டிய அந்து ஏழு நிமிடங்களுக்குரிய மதிப்பு எவ்வளவு அபரிமிதமானது என்று எல்லோருக்குமே புரிகிறது. பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்.

செய்யவேண்டிய நிலையிலிருப்பவர்கள் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதுகூட தப்பாகவே படுகிறது. இதைப்பற்றி குறள் கூட இருக்கிறது ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னூட்டத்திலிடுங்கள்.

முத்துக்குமாரை நினைக்கவும் கவலையாக இருந்தது.

மதுவதனன் மௌ (aka) கௌபாய்மது

 

நீங்கள் மட்டுமா குழந்தைகளையும் விடுங்கள்

இணையத்தில் மெய்மறந்து என்னவோ செய்துகொண்டிருப்போம். எங்கள் பிள்ளையோ அல்லது தம்பி தங்கைகளோ வந்தால் "இப்ப உனக்கு என்ன வயது இன்ரநெற் எல்லாம் தேவையில்லை" என்று கூறி தவிர்த்துவிடுவோம் (எல்லோரும் அப்படியல்ல சும்மா கீழே விடயத்தைச் சொல்ல ஒரு பில்டப்பு). இதனால் அவர்களும் இன்ரநெற் மீதான ஆர்வத்தால் இணைய உலாவு நிலையங்களுக்குக் சென்று தவறான கையாள்கைக்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறோம். அதைவிடுத்து இணையத்தைக் குழந்தைகள் எவ்வாறு பயனுள்ள வழியில் பயன்படுத்தலாம் என்பதை சொல்லத்தவறி விடுகிறோம்.

இதோ, உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தை பயனுள்ள வழியில் காட்ட சில இணையத்தளங்களைப் பட்டியலிடுகிறேன்.

1. ஓவியம் சிற்பம் போன்ற கலைகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க

சின்ன வயதிலேயே கலைகள் பற்றிய விவரணத்தை இந்த இணையம் வாயிலாகக் கொடுத்தீர்களால் பிள்ளைக்கு வளரும்போது தான் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அறிவு தானாக வரும். நீங்கள் விரும்பியதைப் புகுத்தாமல் தானே தேர்ந்தெடுத்து அதிலேயே ஜெயித்தும் காட்டும் அந்த குட்டி.

2. விஞ்ஞானத்தை சின்ன மனசில இலகுவாய் புகுத்த

மதங்களைப் போலல்லாது காலத்துக்குக் காலம் மாறி தன்னைத்தானே திருத்திக்கொண்டு மனிதனையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காது விட்டீர்களானால் நாளைக்கு நண்பர்கள் மத்தியிலே அசடு வழியும். வேண்டாம் அந்த நிலை... இப்போதே ஆரம்பியுங்கள் விஞ்ஞானத்தைப் புகுத்த.

3. இயற்கையின் அதிசயங்களையும் அதன்வழி வந்த மிருகங்களையும் காட்டுவதற்கு

எல்லாமே இயற்கையின் தெரிவு. நாம்தான் ஏதோ சிறு சறுக்கலில் இயற்கையை மீறி என்னென்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் இயற்கை மற்றும் இன்றும் இயற்கைவழி நடக்கும் ஏனைய மிருகங்கள் பற்றி அறிவது சுவாரசியம் எம்மைப் பற்றிய அறிவையும் வளர்க்கும். பிள்ளைகளோடு சேர்ந்து நீங்களும் படியுங்கோ.

4. குழந்தையின் ஆரம்ப வளர்ச்சிக்கு. ஆரம்ப வளர்ச்சி என்று சும்மா விட்டுடாதேங்கோ. அதுதான் இறுதி இயல்பின் அடித்தளம் கூட

இரண்டு வயதுக் குழந்தைக்கு வயது வந்த மனிதனொருவனைப் போல இருமடங்கு மூளை இணைப்புக்கள் இருக்கும். அதாவது சின்ன வயதிலேயே மூளையின் வளர்ச்சி வீதம் அதிகம். அத்துடன் அந்த வயதில் மூளை உள்வாங்குபவைகளே பின்னாளின் பிரதிபலிப்புக்கள்.

5. இசையால் வசமாகா இதயம் ஏது? அந்தச் சின்ன இதயமும் தான்

நீங்கள் பாடிக்காட்டியே பயந்து போன (:-D) பிள்ளைக்கு கொஞ்சம் இசையையும் கற்றுக் கொடுங்கோ.

என்ன ஒரே ஒரு கவலை என்றால் தமிழில் இவ்வாறான இணைத் தளங்கள் இல்லை.


மதுவதனன் மௌ (aka) கௌபாய்மது.

 

காலை உணவை முடித்துக்கொண்டு ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய கலைஞர், அண்ணா சிலைக்கு முன்பாக ஏழு மணித்தியால சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டு மதிய உணவுக்காக ஒரு மணிக்கு மீண்டும் வீடு சென்றடைந்தார்.

மதுவதனன் மௌ.