நா

இருவருக்கும் தெரியும் நாங்கள் காதலிக்கிறோம். எதிர்காலம் பற்றி நிறையக் கதைக்கிறோம். சிறிது எல்லைதாண்டிக் கதைத்தால் நன்றாக இருக்குமோ என்று சிலவேளைகளில் நினைத்தாலும் இதுவரை எல்லை தாண்டாமலே கதைக்கிறோம். நானும் நிறையக் கதைக்கிறேன். அவளும் நிறையக் கதைக்கிறாள்.

அடிக்கடி பார்த்துக் கதைக்கும் தூரமல்ல எங்கள் தூரம். நீண்ட விடுமுறைகள் கிடைத்தால் மட்டுமே அவளைப் பார்க்கும் வரம் கிடைக்கும். ஆதலால் காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.

கதைக்கின்ற போதெல்லாம் "ஐ லவ் யூ" சொல்லவேண்டும் போல இருக்கும். ஏனோ சொல்வதில்லை. அதற்காக "ஐ லவ் யூ" சொல்வதே இல்லை என்று தப்புக் கணக்கெல்லாம் போடவேண்டாம். குறுஞ்செய்தியில் "I Love You" தாராளமாய் பரிமாறிக்கொள்வோம். ஓ.. பரிமாறிக்கொள்வோம் என்றா சொன்னேன்.. ம்ஹீம்.. தாராளமாய் அனுப்பிக்கொள்வேன். அவள் ஒரு முறைகூட "I Love You" அனுப்பியதில்லை.

நான் இவ்வளவு முறை அனுப்பியிருக்கிறேனே நீங்கள் ஏன் ஒரு முறைகூட "I Love You" அனுப்புகிறீர்களில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தேன். அது நேரம் வரும்போது அனுப்புகின்றேன் எனப் பதில் வந்தது. அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!!

அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம். ஒவ்வொருநாளும் முடிந்து வருகையில் பொழுது சாய்ந்துவிடும். வீடு இருக்கும் இடமும் நகரமல்ல. முடிந்து பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு செல்லும்போது ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இருக்காது.

நேற்று பி.ப 6:25 இருக்கும். அவளிடமிருந்து அழைப்பு எடுக்குமாறு குறுஞ்செய்தி வந்தது.(Dialog Call Me SMS - Free)
"என்ன" என்று கேட்டேன்.
குரல் குழறியது.
"இடம் மாறி இறங்கிட்டன். வீட்டில இருந்து கனதூரம் போய் வேற எங்கயோ இறங்கிட்டன். போன்ல காசும் இல்லை வீட்டை கோல் பண்ண.. பக்கத்துக் கடையில விசாரிச்சனான். எங்கட வீட்டடி கன தூரமாம்.. இப்ப பஸ்கூட இல்லை... போன்ல பற்றறி சார்ச்சும் நல்லாப் போய்ட்டு.. எனக்கேன் இப்பிடி நடக்குது.. எனக்குப் பயமாக்கிடக்குது.." உண்மையாகவே குரல் குழறியது.
"இருங்கோ வாறன். கொஞ்ச நேரத்தால திருப்பி எடுக்கிறன்" சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்தேன்.

******

நான் திரும்ப அழைப்பெடுக்கும்போது அவள் தன் வீட்டில் நின்றிருந்தாள்.
"நீங்களெல்லாம் ஒரு மனிசனா.. அவனவன் தன்ர ஆளுக்கு ஏதுமொண்டெண்ட எப்பிடிப் பதறுறாங்கள்.. உங்களுக்கெல்லாம் காதலும் கத்தரிக்காயும்.. இனி எனக்கு கோல் பண்ண வேண்டாம்.." வாயில் தெறித்த வார்த்தைகளுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

******

அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன்.
"டேய் தம்பியா... அக்கா இப்பிடி வீட்டைத் தாண்டிப் போய் மாறி இறங்கிட்டாள். அவள்ட போன்ல காசும் இல்லை.. சார்ச்சும் இல்லை.. உடனடியா மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போ..பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்.. நடந்து வந்துகொண்டிருக்கிறாள்.. அவளுக்கு எந்த இடத்தில வாறன் எண்டு தெரியாது.. சும்மா அவளுக்கு கோல் பண்ணாத.. பற்றறி சார்ச் இல்லை.. இப்ப ஒருக்கா கோல் செய்... வடிவாக் கேள்.. அவள் அழுது குளறுவாள்.. கேட்டுக்கொண்டிருந்தியெண்டா இரண்டாம் தரம் அவளுக்கு கோல் செய்யமாட்டாய்.. கெதியில போ."

வீடு வரும்வரை தம்பிப் பயல் நான் தொலைபேசித்தான் தான் வந்ததைச் சொல்லவே இல்லை.

*****

நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. என்னடா செய்யிறது..ம்ம்..
தொலைபேசி அடித்தது... பார்த்தேன்... அவள்தான்...

எடுத்தேன்.

"சொல்லுங்கோ"

"சொறீ. தம்பி இப்பதான் எல்லாம் சொன்னவன்..அவன் மூன்றாம்தரம் கோல் பண்ணேக்க பற்றறி சார்ச் எல்லாம் போய்ட்டுது.. வீட்ட வந்துதான் சார்ச்சில போட்டனான்."

"ம்ம்ம்ம்"

"ஐ லவ் யூ" - (இது அவளேதான் நானல்ல)

சொல்லிவிட்டு துண்டித்துவிட்டாள்.

முறுவலுடன் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..

"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"


பிரியமுடன்
மதுவதனன் மௌ | கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

27 பின்னூட்டங்கள்.

கன்கொன் || Kangon June 10, 2010 at 11:04 AM

ஹா ஹா ஹா ஹா....


// அடப்பாவிங்களா... இதுகூட கல்யாணத்தின் பின்னர்தானா!!! //

ROFL....


// அவள் வீடு செல்ல முன் நடந்தவற்றைச் சொல்லத்தான் வேண்டும்.
நான் உடனடியாக அவளது தம்பிக்கு அழைப்பெடுத்தேன். //

இதுக்குப் பிறகும் கதைக்கிறாங்களா? :-o

அனுபவம் என்று லேபிளில் போட்டிருப்பதால்,
வாழ்த்துக்கள் அண்ணா... ;)

கன்கொன் || Kangon June 10, 2010 at 11:05 AM

சொல்ல மறந்திற்றன்,
மொழிநடை நல்லாயிருக்கு....

Subankan June 10, 2010 at 11:09 AM

வாழ்த்துக்கள் அண்ணா... ;)

Bavan June 10, 2010 at 11:11 AM

//"ம்ம்ம்... நாளைக்கும் இவள் மாறிப்போய் இறங்கமாட்டாளா.....??"//

போனில சார்ஜ்ஜீம் இல்லாமப் போகாதா?...:P

கதை நல்லாயிருக்கு..:)

கன்கொன் || Kangon June 10, 2010 at 11:12 AM

// கதை நல்லாயிருக்கு..:) //

மங்குனி...
அது கதையல்ல...

அனுபவமென்று லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.... :@

Bavan June 10, 2010 at 11:14 AM

//மங்குனி...
அது கதையல்ல...

அனுபவமென்று லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.... :@//

"உங்களின் சொந்தக்கதை" என்று வந்திருக்க வேண்டும் மன்னிக்கவும்..:P

Mathuvathanan Mounasamy / cowboymathu June 10, 2010 at 11:15 AM

கதை எழுதுறது ஒரு அனுபவம்,
அதை காதல் உணர்வுடன் எழுதுவது வித்தியாசமான அனுபவம்,
அதுதான் அனுபவம் என்ற வகை போடப்பட்டுள்ளது என்பதை சகலருக்கும் அறியத்தருகிறேன் :) :) :)

anuthinan June 10, 2010 at 11:24 AM

அண்ணே பல காலம் பதிவுலகில் இல்லாமல் இருந்ததுக்கு இதுவும் ஒரு காரணமோ! வித்தியாசமான அனுபவத்தை பெற போய் இருந்தீர்கள் போல!


கதையும்,அதன் மொழிநடயையும் நன்கு ரசித்தேன்!

எனக்கு என்னவோ அவர் உங்களுக்கு காதல் சொன்னபிறகு இப்படியான சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாகும் என்று நினைக்கிறேன்


செம கலக்கல் பதிவு அண்ணா

ஆதிரை June 10, 2010 at 11:25 AM

பின்னூட்டம் இடலாமோ???

இடுவதெனில், எப்படி???

ஆழ்ந்த சிந்தனையில்.....

Nimal June 10, 2010 at 11:46 AM

நாங்களும் எத்தின காதல் கதை எழுதீட்டம்... காதல் கதை எழுதிறது நல்ல 'அனுபவம்' தான்... :-)

அது சரி இப்ப முன்ன விட அதிகமா பதிவு வாறதுக்கும் ஏதாவது காரணம்...?

வந்தியத்தேவன் June 10, 2010 at 12:19 PM

இது கதையா? இல்லை சொந்த அனுபவமா?
சொந்த அனுபவம் என்றால் நீங்கள் செய்தது பிழை. அவரின் தம்பியை ஏன் அவளைப் பிக்கப் பண்ண அனுப்ப்பினீர்கள்? நீங்கள் போயிருந்தீர்கள் என்றால் இன்னும் சில ஐ லவ் யூக்கள் வந்திருக்கும்.

maruthamooran June 10, 2010 at 2:39 PM

மது....

அட அடடா…. ரொம்ப நல்லாயிருக்கு. அனுபவிச்சு எழுதின மாதிரி கிடக்கு. ‘காதல்’ என்றாலே அவ்வளவு அழகான அனுபவிக்க இனிமையான உணர்வு என்று பலர் சொல்லி அறிந்திருக்கிறேன்.

அதை இந்த கதையிலும் காண்கிறேன். இலகுவான மொழி நடையில் இயல்பாக இருக்கிறது. காதல் என்றாலே ஒரு புத்துணர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கிறது. அது உண்மைதான் போலும்.

Mathuvathanan Mounasamy / cowboymathu June 10, 2010 at 3:35 PM

கங்கோன்,

கதை எழுதும்போது அனுபவித்தேன். அவ்வளவுதான். அதிகமாக ஒரு பெண்ணின் காதல் அவளது தம்பிக்குத் தெரிந்திருக்கும். அதுதான் அவ்வாறு எழுதினேன். :)

-------------------------------------

சுபாங்கு,

வாழ்த்துக்கள் கதைக்குத்தானே. நன்றி

-------------------------------------

என்பவன்,

நன்றி. உண்மையாக இருந்திருந்தாலும் நல்லாயிருந்திருக்கும் :)

--------------------------------------

வாங்கோ அனுதினன்,

//எனக்கு என்னவோ அவர் உங்களுக்கு காதல் சொன்னபிறகு இப்படியான சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாகும் என்று நினைக்கிறேன் //

ஆகா.. நான் கற்பனையிலதான் சந்தர்ப்பங்களை உருவாக்கவேணும்.. ஏனெனில் இது கதை :))

தர்ஷன் June 10, 2010 at 3:37 PM

//காதல் செய்கிறோம் தொலைபேசிகள் காதுகளாகிக் கிடக்க.//

ரசித்தேன்

கன்கொன் || Kangon June 10, 2010 at 3:38 PM

// அதிகமாக ஒரு பெண்ணின் காதல் அவளது தம்பிக்குத் தெரிந்திருக்கும். //

தம்பி இல்லாட்டி அண்ணனுக்கெல்லோ தெரியிது...

அண்ணன் வெருட்டுவானே?

Mathuvathanan Mounasamy / cowboymathu June 10, 2010 at 3:38 PM

வாடா ஆதிரை,

உன்ர குழப்பம் விளங்குது.. என்னவோ உனக்கு குழப்பம் தீர்ந்துவிட்டதுதானே.. :)

-------------------------------
வாப்பா கேடயக்குறிப்பு புகழ் பனர்சி,

நீங்கள் எழுதின காதல் கதையுமசரி, கவிதையும் சரி வேற. அது நீங்கள் கூட்டாக எழுதியது. இது நான் தனிய எழுதினதாக்கும்.. ஹீ ஹீ..

பதிவு அதிகம் இப்ப ஏனெண்டால் முதல் நேரமிருந்து அதிகமாக எழுதுறதில்லை.. :)

இனியன் June 10, 2010 at 3:40 PM

//பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்//

அவளுடைய தம்பிக்கு எதற்கு, மேல்குரிய அடையாளங்களை நீங்கள் கூறவேண்டும்?

மற்றபடி, உங்கள் அனுபவ விளக்கம் மிக அருமை, பதற்றம் பற்றிக்கொண்டது படிக்கும்போதே,...

Mathuvathanan Mounasamy / cowboymathu June 10, 2010 at 3:49 PM

வாங்கோ வந்தி,

//அவரின் தம்பியை ஏன் அவளைப் பிக்கப் பண்ண அனுப்ப்பினீர்கள்?//

நான் மோட்டார் பைக் எடுத்துக்கொண்டு போறதெண்டா அவளடிக்குப் போக 5 லீட்டர் பெற்றோலாவது தேவை. அவ்வளவு தூரம் (கதையில்தான் எல்லாம்)

--------------------------------------

வாங்கோ மருதமூரான்,
நன்றி. காதல் அருமையான உணர்வுதான். சிலவேளை உண்மையாகவே இப்பிடி நடந்து எழுதியிருந்தா மொக்கையாக இருந்திருக்குமோ? :))

எல்லாரும் சொல்லுறீங்கள். கதை நல்லாயிருக்குப்போலதான் கிடக்கு. :))

------------------------------------

வாங்கோ தர்ஷன்,

காதலர்கள் பார்க்கக்கூடிய தூரத்தில இருந்தாலே போன் பில் எகிறும். தூரத்தில எண்டா பிறகென்ன.

Mathuvathanan Mounasamy / cowboymathu June 10, 2010 at 3:56 PM

வாங்கோ இனியன்,

{{இனியன் said...

//பச்சைக் கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறாள்//

அவளுடைய தம்பிக்கு எதற்கு, மேல்குரிய அடையாளங்களை நீங்கள் கூறவேண்டும்?

மற்றபடி, உங்கள் அனுபவ விளக்கம் மிக அருமை, பதற்றம் பற்றிக்கொண்டது படிக்கும்போதே,...}}

அவள் பச்சைக் கலர் சட்டை போட்டிருக்கிறாள் என எனக்குத் தெரிகிறது என்பதிலிருந்து அன்று காலை அவள் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போதோ அல்லது பின்னரோ என்னுடன் கதைத்திருக்கிறாள். நான் கேட்டிருக்கிறேன் "என்ன கலர் சட்டை இண்டைக்கு போட்டிருக்கிறியள்" எனறு. அவள் சொல்லியிருக்கிறாள். அதை நான் அன்று முழுதும் ஞாபகம வைத்திருந்திருக்கிறேன்.

அவள் தம்பிக்குச் சொன்னது ஏனெனில்,
அவள் பதட்டத்துடன் வீதியில் நின்றுகொண்டிருப்பாள் அல்லது நடந்து வீடுநோக்கி வந்துகொண்டிருப்பாள். மோட்டார் பைக்கில் செல்லும்போது சட்டையை வைத்து அவளை இனங்காண உதவுமே என்றுதான். தம்பி அவள் என்ன கலர் சட்டையோடு காலையில் போனாள் என்பதை கவனித்திருக்கமாட்டான். மேலும் போன்ல சார்ச் இல்லை. ஆகவே தம்பிக்கு சட்டைக் கலர்தான் உதவியிருக்கும்.

அந்த ஒரு வரிக்குள் எவ்வளவு ரொமான்ஸ் கிடக்குது பாத்தீங்களா.. :))

balavasakan June 10, 2010 at 4:26 PM

நல்ல கதை வாழ்த்துக்கள் !! இன்னும் கனக்க ஐ லவ் யூக்கள் கிடைக்க..

யோ வொய்ஸ் (யோகா) June 10, 2010 at 6:04 PM

பால வாசகனை வழி மொழிகிறேன்..

அனுபவம் நல்லாயிருக்கு

Anonymous June 10, 2010 at 8:18 PM

இதில மதுஇஸம் ஒண்டையும் காணோமே?? எங்கே எங்கள் மாட்டுப்பையன்??? மதுஇஸம் இல்லாமல் மாட்டுப்பையனா???

நிலாமதி June 10, 2010 at 11:24 PM

அழகான காதலுக்கு திசை காட்டிய ..... அனுபவம். சொல்லிய விதம் அழகு .......பாராடுக்கள். என்னை தெரியுமா?

ARV Loshan June 11, 2010 at 11:35 AM

ரசித்தேன்...
தலைப்பு கலக்கல்..
கதை இயல்பான அழகான காதல் கதை.

வசனங்கள் மதுவின் வழமையான பேச்சுக்கள் போலவே ரொம்பவே இயல்பாக இருக்கின்றன.. ;)
எல்லாம் நல்ல படியாகத் தொடரட்டும்.

தம்பியை நண்பனாக்கிக் கொண்டபடியால் ஸ்மூத்தாப் போகும் போலத் தான் கிடக்கு.

Unknown June 11, 2010 at 1:27 PM

வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Ramesh June 11, 2010 at 2:11 PM

தலைப்பு அருமை. காதல் மதுரசம். வரிகளில் அனுபம் இன்னும் அந்த தம்பிக்கு சொன்ன சட்டையின் கலரே காதலுக்குள் காதலாகி..... அந்த நேரத்தில் நீங்கள் போகாததை கண்டிக்கிறேன் நீங்கள் இழந்த ஐ லவ் யுக்களை நினைத்தால்....
/////
அவளின் வேலைத்தளம் / பல்கலைக்கழகம் / பாடசாலை (பொருத்தமானதைத் தெரிவு செய்க) வீட்டிலிருந்து ஒன்றரை மணித்தியால பஸ் பயணத்தூரம்.//////
இந்த வரிகளின் அர்த்தம் என்ன என்று குழப்பம். காதல் மதுவில் இந்த மது.
வாழ்த்துக்கள் கைப்பற்றல்கள் இருந்தால்.
வரிகளுக்கும் சேர்த்து

Mathuvathanan Mounasamy / cowboymathu June 12, 2010 at 11:30 PM

வாங்கோ பாலவாசகன், யோ,

இது கதைதான். :)

வாங்கோ நிலாமதி,

பாராட்டுக்கு நன்றி, உங்களை நான் அறியேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கோ

வாங்கோ லோசன் அண்ணா,

மெய்நிகர் இதயத்தினுள் உருவான் கதையிது. நிஜமல்லவாக்கும்.. :)

வாங்கோ றமேஸ்,
நன்றி, கதைதானே அதுதான் அவள் வேலைசெய்பவளாகவோ, கம்பஸில் படிப்பவளாகவோ, பாடசாலையி்ல் படிப்பவளாகவோ வாசகர்கள் தெரிவுசெய்துகொள்ளட்டும் என்றுதான்

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ