நா

கேள்விகளினூடு தெளிவு பிறக்கிறது. கேள்விகளினூடு மாயைகள் உடைகின்றன. கேள்விகளினூடு எம் இருப்பிற்காக அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றோம். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அருவமானதை ஏன் அவன் என்கிறோம்? போன்ற கேள்விகள் இருப்பிற்கான தேடல்களுக்கு விடை தருகின்றன.

கேள்விகளினூடு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பதொருபுறம் இருக்க, எமக்குச் சார்பான விடைகளுக்காக கேள்விகள் கேட்பதும் எமது வளத்துக்கான படியாகின்து.

மனிதன் சமூக விலங்கு. வாழுமிடமெல்லாம் இன்னொருவருடனான தொடர்பாடல் தொடர்கின்றது. தொடர்பாடலில் வெற்றி பெறுவதில் தங்கியிருக்கிறது எங்கள் உயர்ச்சி. வீட்டில் அப்பாவிடம் காரணம் கூறி காசு பெறவும், பாதகமின்றி கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நேர்முகத்தேர்வொன்றில் வெற்றி பெறவும், நாடுகளுக்கிடையான பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான பதில்களுக்கான சரியான கேள்விகளே வெற்றிபெறச்செய்கின்றன.

* இலகுவான கேள்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
மொழிப்புலமை, அதியுயர் அறிவுத் திறமையான கேள்விகளை விடுத்து அடிப்படையான கேள்விகளிலிருந்து ஆரம்பியுங்கள்.

* ஒரு விடயத்தை அறிவதற்கான கேள்வியெனின், குறிப்பிட்டுக் கேளுங்கள்.
கணினி சம்மந்தமாக உங்களுக்கு என்னென்ன தெரியும் எனக்கேட்பதை விடுத்து, உபுண்டுவில் வேலை செய்திருக்கிறீர்களா, ஜாவா மொழி தெரியுமா, இணைய வடிவமைப்பில் எத்தனை வருடம் வேலை செய்திருக்கிறீர்கள் போன்றன உங்களுக்கான விடையை சிறப்பாகப் பெற்றுத்தரும்

* உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வி கேட்காதீர்கள்.
எதிராளியின் கேள்விகளோ அல்லது பதில்களோ சிலவேளைகளில் எம்மைப் பொறுமை இழக்கச் செய்யும், கோபத்தைத் தூண்டும். அந்நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கான விடையை இழைக்கும் சந்தர்ப்பம் இங்கே அதிகம்.

* கேட்கும் கேள்விகள் குறித்தான அறிவை இயலுமானவரை ஏலவே பெற்றிருங்கள்.
சாடைமாடையாக அறிந்ததை வைத்து கேள்விகள் கேட்காதீர்கள். இப்போது தொலைபேசி வரை இணையம் வந்துவிட்டது. கட்டாயம் அவ்விடயம் பற்றி கேள்வி கேட்கத்தான் வேண்டுமெனின் தொலைபேசியூடாக கூகுள் செய்யுங்கள். அறிவைப் பெறுங்கள். பிறகு கேளுங்கள்.

* அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுங்கள். எதிர்க் கேள்விகளுக்காக சிந்தியுங்கள்.
எதிராளிக்கு நீங்கள் அமையாக தோற்றமளிக்கும்போது, உங்கள் கேள்வியின் மீதான விடையை சிறப்பாகச் சொல்லவேண்டும் என்று மனநிலை உருவாகும். கேள்வி சம்மந்தமான நிறைந்த அறிவும் உங்களுக்கு இருப்பதான தோற்றைத்தை அது உண்டாக்கும். எதிராளியின் மறு கேள்விகளுக்காக இயலுமானவரை சிந்தித்துப் பதிலளியுங்கள்.

* பெருந்தன்மையோடு கேள்வி கேளுங்கள்
எதிராளியை கீழ்த்தரமாகவோ, கேள்விகுறித்தான அறிவற்றவராகவோ நினைக்கவேண்டாம். பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.



நீங்கள் கேட்கும் முறையான கேள்வியில்தான் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும்.

கணியனும், பரதனும் நண்பர்கள். இருவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் மதகுரு ஒருவரிடம் சென்றனர். கணியன் மதகுருவிடம் சென்று 'இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, புகைப்பிடிக்கலாமா?' என்று கேட்டதற்கு 'தவறு மகனே, இறைவனை தூய மனதுடன், தீய செயற்பாடுகளின்றித்தான் பிரார்த்திக்கவேண்டும்' என்றார். பின்னர் பரதன் அதே மதகுருவிடம் சென்று 'நான் புகைபிடித்துக்கொண்டிருக்கும்போது இறைவனைப் பிரார்த்திக்கலாமா?' என்று கேட்டதற்கு, 'தாராளமாக மகனே, இறைவனைப் பிரார்த்திப்பதற்கு காலநேரம் பார்க்கத் தேவையில்லை' என்றார்.

கேள்விகள் கேட்பதில், கேட்கும் முறையில் எம் வளர்ச்சி தங்கியிருக்கிறது.

பி.கு : பதிவு கேள்விகள் சம்மந்தப்பட்டாகையால், இலகுவான விளங்குகைக்காக குட்டிக்கதை மதம், இறைவன் சம்மந்தப்பட்டிருக்கிறது. இறைவன் இருக்கின்றது என்றோ, மதகுரு என்பவர் தூய்மையானவர் என்றோ, பிரார்த்திப்பதால் நாடும் வீடும் நலம்பெறும் என்றோ யாரும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டாம். அவை குறித்தும் கேள்விகளைத் தொடுங்கள். தெளிவு பெறுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ - கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

10 பின்னூட்டங்கள்.

ஆதிரை May 14, 2010 at 12:33 PM

நான் கேள்வி கேட்பதால் தெளிவடைய முடியுமா?

பல கேள்விகள் எனக்கு விடை தெரியாத இன்னும் பல கேள்விகளைத் தரக் காரணம் என்ன்?

கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்குகிறேன் என்பது உண்மையானதா?

Nimal May 14, 2010 at 3:53 PM

பின்னூட்டத்திலும் கேள்வி கேட்பது அவசியமானதா?

கேள்வி கேட்காமல் இங்கு கருத்து சொல்லலாமா?

Subankan May 14, 2010 at 5:55 PM

பின்னூட்டத்தில் ஏதாவது கேள்வி கேட்போமென்றால் ஒரு கேள்விகூட எழவில்லையே, அது ஏன்?

Mathuvathanan Mounasamy / cowboymathu May 14, 2010 at 7:10 PM

வாய்யா ஆதிரை,

நான் கேள்வி கேட்பதால் தெளிவடைய முடியுமா?
>> தெளிவுகள் கேள்விகளினூடு கிடைக்கின்றன.

பல கேள்விகள் எனக்கு விடை தெரியாத இன்னும் பல கேள்விகளைத் தரக் காரணம் என்ன்?
>> இது இயற்கையானதுதான். கேள்விக்கான விடையொன்று தொடர்கேள்விகளினூடான தேடலின் மூலம் கிடைக்கின்றது. ஆகவே இது குறித்து சலனப்படத் தேவையில்லை.

கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்குகிறேன் என்பது உண்மையானதா?
>> நேரத்தை வீணாக்கும் கேள்விகளைத் தவிருங்கள்.

--------------------------------
வாப்பா நிமல், சுபாங்கன்,

அவசியமான கேள்விகளை கேட்க தயங்காதீர்கள்.

அண்மையில்கூட ஒரு ஹீரோ தனது பாட்டில் சொல்லிவைத்திருப்பார். "ஏன் என்ற கேள்வியைக் கேட்டுவைப்போம்" என்று. ஆனால் அவருடைய படங்களை நோக்கி ஏன்.. ஏன் இப்படி என்று அவரது ரசிக சிகாமணிகள் கேட்டுவைத்தால் இப்படி அல்லல்படத்தேவையாயிருக்காது.

Nila Loganathan May 16, 2010 at 10:13 PM

பதிவைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கத் தோணவில்லை,வாசிக்க நல்லாயிருக்கு !

Mathuvathanan Mounasamy / cowboymathu May 16, 2010 at 11:40 PM

வாங்கோ உறுபசி,

சந்தோசம்.. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கோ..

கன்கொன் || Kangon May 18, 2010 at 7:54 PM

கேள்வி பற்றின இந்த அருமையான பதிவுக்கு என்ன பின்னூட்டம் போடுறதெண்டு தெரியேல,
வாழ்த்து மட்டும் சொன்னாக் கோவிப்பியளே?
இல்லாட்டி அருமை, நல்ல பகிர்வு எண்டும் சொல்லோணுமோ?

rooto May 20, 2010 at 7:01 PM

கடவுள் இருக்கிறாரா மது??? அப்பிடி அவர் இருந்தா ஏன் அவர் தானே நேரடியாக காட்சிதராமல் கலாய்க்கிறார்? அவருக்கு ரெப்பிரசென்டேட்டிவ்கள் (அய்யர், சாமியார்,பாதிரியார்,எல்லா மத ரெப்புகளும் அடக்கம்) தேவையா? அவர்கள் உண்மையிலேயே கடவுளின் தூதுவர்களா? அல்லது கடவுளும்(அப்பிடி ஒருத்தன் இருந்தா) நாமும் உரையாட ஒரு தரகராக இருப்பவரா? இருப்பாரா??

பழமைபேசி May 28, 2010 at 4:54 AM

நண்பரே, நலமா?

// கௌபாய்மது//

இது எப்போதிருந்து??

பதிவுலக வாசம் இருக்கும் வரையிலும் நான் உங்களை மறக்க முடியாதன்றோ??

Mathuvathanan Mounasamy / cowboymathu May 29, 2010 at 2:05 AM

வாய்யா ரூட்டோ,
உங்கள் கேள்விகள் எல்லார் மனதிலும் தோன்றவேண்டியவையே.. பதிலாக ஒரு பதிவே போடலாம்..

வாங்கோ மணி,

நலம்.. நாடலும் அதுவே. எனது ஆரம்பகாலப் பெயர் கௌபாய்மதுதான்.. காமிக்ஸ் பிரியத்தால் வந்தது. விட மனதில்லாதிருக்கிறது.

என்னதான் நீங்கள் பழமைபேசியாக இருந்தாலும் எனக்கு நீங்கள் அந்த மங்கிய கலர் போட்டோவுடன் மணிதான்..

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ